×

எப்படி மகா சமாதி அடைந்தார் சாய்பாபா..!

சாய்பாபாவுக்கு 1918-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி லேசான காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனால் பாபா சோர்வாக காணப்பட்டார். இந்த நிலையில் தன் உயிருக்கு உயிரான செங்கல் உடைந்ததால் அவர் சாப்பிடுவதை குறைத்தார். இதனால் அவர் உடல்நிலை பலவீனமானது.

16 நாட்களாக அவர் வழக்கம் போல் சாப்பிடவில்லை. 17-வது நாள் அதாவது 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாபா மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி தினமாகும். ஏகாதசி திதியும் இருந்ததால் மிக, மிக உயர்வான நாளாக கருதப்பட்டது.

அனைத்தும் அறிந்திருந்த பாபா மிக நுணுக்கமாக அந்த நாளை தேர்வு செய்து, ஸ்தூல உடம்பில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டார். அதற்கு முன்னதாக அவர், தனது ஆத்மா பிரிவு எப்படி ஏற்படும் என்பதையும், தனக்கு எங்கு, எப்படி மகாசமாதி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் பல தடவை பலரிடம் சூசகமாக கூறி இருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பே அதாவது 1916-ம் ஆண்டு பாபா தன் பக்தர்கள் மத்தியில் பேசுகையில், “நான் இன்னும் 2 ஆண்டுகளில் விஜயதசமி நாளில் எனது எல்லையைக் கடப்பேன்” என்றார். ஆனால் அது அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. 1918-ல் அந்த பேச்சின் அர்த்தம் புரிந்தது.

மகாசமாதி அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு பாபா தன்னை சந்திக்க வந்த ஒரு பக்தையிடம், “அம்மா…. எனக்கு துவாரக மாயியிலும், சாவடியிலும் மாறி, மாறி இருந்து சலித்து விட்டது. களைப்பாக உணர்கிறேன். எனவே பூட்டி கட்டிக் கொண்டிருக்கும் புதிய கட்டிடத்துக்கு போய் விட போகிறேன். நான் அங்கு சென்ற பிறகு பெரிய, பெரிய மனிதர்கள் எல்லாரும் என்னைத் தேடி அங்கு வருவார்கள்” என்றார்.

அப்போது தான் சிலர் மட்டும், பாபா தனது மகாசமாதியை புதிய கட்டிடத்தில் அமைத்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாபா வெளியில் செல்வதை குறைத்து கொண்டார். உணவுக்காக பிச்சை எடுக்கப் போவதையும் நிறுத்தி விட்டார். மசூதிக்குள்ளேயே இருந்தார்.

காலை – மாலை இரு நேரமும் அவர் மசூதி அருகே உள்ள லெண்டி தோட்டத்துக்கு செல்வது வழக்கம். அதையும் பாபா ரத்து செய்து விட்டார். பொதுவாகத் தன்னைத் தேடி மசூதிக்கு வருபவர்களிடம் பாபா மிக, மிக உற்சாகமாகப் பேசுவதுண்டு. ஆனால் அந்த அக்டோபர் மாதம் அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. வானத்தை வெறித்துப் பார்க்கும் அவர் எப்போதும் தீவிர யோசனையிலேயே இருந்தார்.

ஒரு நாள் பாபாவை பார்க்க வாகே என்பவர் வந்திருந்தார். இவர் பாபாவின் பக்தர்களில் ஒருவராவார். இவர் பாபாவிடம் அடிக்கடி ராமவிஜயம் புனித நூலை படித்து காட்டும் பணியை செய்து வந்தார். வாகையப் பார்த்ததும் பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ராமவிஜயம் படிக்கும்படி உத்தரவிட்டார். இரவும் பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக் கொண்டார். வாகேயும் தொடர்ந்து படித்தார்.

அவர் மூன்றே நாட்களில் ராமவிஜயத்தை இரண்டு தடவை படித்து முடித்து விட்டார். என்றாலும் தொடர்ந்து அவர் பதினோரு நாட்கள் ராமவிஜயம் படித்தார். 12-வது நாள் வாகே படித்து, படித்து களைத்துப் போய் விட்டார். வாய் குழறியது. இதை கவனித்த பாபா, “போதும்” என்று கூறி வாகே படிப்பதை நிறுத்தினார்.

அதுவரை கண் மூடி ராமவிஜயம் கேட்டு வந்த பாபா அதன் பிறகு தன் நெருக்கமான பக்தர்களிடம் கூட பேசுவதை நிறுத்தி விட்டார். விஜயதசமிக்கு இரு தினங்களுக்கு முன்பு சாய்பாபா உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்தி விட்டார். அவர் உடல்நிலை மேலும் பலவீனமாக மாறியது.

இதனால் சாய்பாபா அருகில் எப்போதும் அவரது தீவிர பக்தர்கள் உட்கார்ந்து கொண்டே இருந்தனர். ஒரு நிமிடம் கூட அவர்கள் பாபாவை விட்டு அகலவில்லை. என்றாலும் அவர்களிடம் பாபா தாம் சமாதி அடைய உள்ள சரியான நேரத்தை சொல்லவில்லை. அந்த தருணத்துக்காக அவர் காத்திருந்தார்.

விஜயதசமி தினத்தன்று… காலை ஆரத்தியும், மதியம் ஆரத்தியும் பாபாவுக்கு நடத்தி முடிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு காகா சாகேப் தீட்சித், பாபு சாகேப் தீட்சித், மகல்சாபதி பாகோஜி ஷிண்டே, பாயாஜிபாய், நானா சாகேப், நிமோன்கர், ஷாமா, லட்சுமண் பாபா ஷிண்டே ஆகியோர் மசூதியில் இருந்தனர்.

அப்போது லட்சுமிபாயை அழைத்த பாபா, “இதுவரை நான் உனக்கு எதுவுமே செய்ததில்லை. இந்தா பிடி…” என்று கூறி தன் கபினி உடை பைக்குள் கையை விட்டு முதலில் 5 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். பிறகு மீண்டும் ஒரு தடவை பைக்குள் கைவிட்டு 4 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

மொத்தம் 9 ரூபாய்களைக் கொடுத்தார். நன்கு வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான லட்சுமிபாய்க்கு, பாபா கொடுத்த அந்த 9 ரூபாய் மிகப்பெரும் சொத்தாக தெரிந்தது. அது மட்டுமல்ல, பாபா கையால் நாணயம் பெற்று ஆசீர்வதிக்கப்பட்ட கடைசி நபர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.

அந்த 9 நாணயங்களையும் மிகப்பெரிய பரிசாக அவர் கருதி மகிழ்ந்தார். இதையடுத்து தனது மூச்சை நிறுத்திக் கொள்ள முடிவு செய்த பாபா, தன் மீது உயிரையே வைத்திருந்த ஒவ்வொரு பக்தரையும் அங்கிருந்து அகற்றியபடி இருந்தார். பாபா உத்தரவுக்கு ஏற்ப சிலர், வேறு வேலைகளை கவனிக்க மசூதியில் இருந்து வெளியேறியிருந்தார்கள். காகா சாகேப் தீட்சித், பாபு சாகேப் தீட்சித் இருவரும் மசூதியில் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்த பாபா, “நீங்கள் இருவரும் போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள்” என்று கூறினார். பாபா உத்தரவை மீற முடியுமா? அவர்கள் இருவரும் எழுந்து சாப்பிடச் சென்று விட்டனர். சில நிமிடங்கள் சென்றன. பிற்பகல் 2.30 மணி பாகோஜி பாயை அழைத்தார். எப்போதும் தனக்குக் குடை பிடித்து வருபவரும், தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருமான அவர் தோளில் பாபா சாய்ந்து கொண்டார்.

பிறகு பாகோஜிக்கு மட்டும் கேட்கும்படி, “பூட்டியின் புதிய கட்டிடத்துக்கு என்னை அழைத்து செல்லுங்கள். அங்கு நான் சுகமாக இருப்பேன். எல்லாரையும் சுகமாக வைத்துக் கொள்வேன்” என்றார். அடுத்த வினாடி பாபா அப்படியே மூச்சைப் பிரித்து மகாசமாதி அடைந்து விட்டார். பாகோஜி பதறினார்.

அருகில் இருந்த நானா சாகேப், நிமோன்கானை குரல் கொடுத்து அழைத்தார். நானா சாகேப் உடனே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். பாபாவின் வாயில் அவர் தண்ணீரை ஊற்றினார். அது தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை. கன்னத்தில் கோடு போட்டது போல வெளியே வழிந்து வந்து விட்டது.

பெரும் குரல் எடுத்து நானாசாகேப் கதறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு எல்லாரும் மசூதிக்கு ஓடி வந்தனர். பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்து துடித்தனர். பாபா மகாசமாதி அடைந்து விட்ட தகவல் சீரடி முழுவதும் சில நிமிடங்களில் பரவியது. ஆண்களும், பெண்களும் கண்ணீர் மல்க துவாரகமாயி மசூதிக்கு ஓடி வந்தனர். கைக்கூப்பி கும்பிட்டு அழுது புலம்பினார்கள்.

சிலர் தங்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்து தங்களை பாபா மேம்படுத்தியதை சொல்லி, நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டனர். துவாரகமாயி மசூதி, துயரப் பூமியாக காணப்பட்டது. அன்றிரவு சீரடி சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் மக்கள் அலை, அலையாக வந்து குவிந்து விட்டனர். ஆண்களும், பெண்களும் வாய் விட்டு கதறி அழுதனர். துக்கம் தாங்காமல் சிலர் மயங்கி விழுந்தனர்.

பாபா மகாசமாதி அடைந்திருந்த அன்றைய தினத்துக்கு முன்பு சில தினங்களாக தத்யா பட்டீல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணத்தின் எல்லையில் இருந்தார். மகாசமாதி அடைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அவரை அழைத்த பாபா, உதியை கொடுத்து ஆசி வழங்கினார். பிறகு, “நம் இருவருக்காக, 2 ஊஞ்சல்கள் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் மட்டும் அதில் செல்லப்போகிறேன்” என்றார்.

பாபா கொடுத்த உதி பிரசாதத்தால் எதிர்பாராத வகையில் தத்யாபாட்டீல் புத்துணர்ச்சி பெற்றார். அவரை பாடாய் படுத்தி வந்த நோய் நீங்கியது. சாய்பாபா தன் உயிரைக் கொடுத்து அவர் உயிரை காப்பாற்றி விட்டதாக சீரடியே பேசிக் கொண்டது. உண்மையும் அதுதான்.

அனைவரும் துவாரகமாயி மசூதி முன்பு திரண்டிருந்தனர். சாய்பாபா உடலை எங்கு அடக்கம் செய்வது? அவரது மகா சமாதியை எப்படி அமைப்பது என்று அவர்கள் விவாதித்தனர். சீரடியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்து வசித்து வருகிறார்கள். ஒரு குடும்பம் போல வாழ்ந்து வரும் அவர்கள், சாய்பாபா வி‌ஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்தனர்.

பாபா தங்களுக்கே சொந்தம் என்று இந்துக்கள் கூறினார்கள். இல்லை… இல்லை…. அவர் அல்லாவால் எங்களுக்காக அனுப்பப்பட்டவர் என்று இஸ்லாமியர்கள் கூறி வந்தனர். ஆனால் பாபா தன்னை எந்த ஒரு மத எல்லைக்குள்ளும் அடக்கிக் கொள்ளவில்லை. இரு தரப்பினரும் தன்னை அணுகி வழிபட அவர் அனுமதித்திருந்தார். யாரிடமும் அவர் வேற்றுமை காட்டவில்லை.

பாபா உயிருடன் இருந்த வரை இரு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் இருந்தனர். பாபா மகா சமாதி ஆனதும், இரு தரப்பினரும், தங்கள் மத முறைப்படிதான் பாபாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். இதனால் சீட்டுக் குலுக்கல் நடத்த வேண்டியதாயிற்று.

Tags : Saibaba ,Great Samadhi ,
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...