×

தீராத நோயைத் தீர்த்து வைத்த சாய்பாபா!!

சீரடியில் வேப்ப மரத்தடியில் தங்கி இருந்த சாய்பாபா, எல்லா வித ஆற்றல்களும் பெற்றிருந்த போதும், அவர் தன்னை மகானாக ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பாபா ஒரு யோகி போலவே வாழ்ந்தார். 1858-ம் ஆண்டு முதல் 1860-ம் ஆண்டு வரை சுமார் 2 ஆண்டுகள் சாய்பாபா அந்த வேப்பமரத்தடியில்தான் வசித்தார்.சீரடியைச் சேர்ந்த மகல்சாபதி, தத்யாகேடே உள்பட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே சாய்பாபாவை ஓர் மகானாக கருதி வழிபட்டனர். மற்றவர்கள் அவரை பித்தர் என்றே கருதினார்கள். ஆனால் எது பற்றியும் கவலைப்படாத சாய்பாபா பகல் நேரத்தில் அருகில் உள்ள காடுகளுக்குள் சென்று சுற்றித் திரிவார். இரவு வேப்ப மரத்தடிக்கு வந்து விடுவார்.

சில சமயம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட காட்டுக்குள்ளேயே இருப்பார். அவர் பசி தீர்க்கவும், தாகம் தணிக்கவும் என்ன செய்தார் என்பது சீரடி மக்களுக்கு புரியாத புதிராக இருந்தது.பாபாவிடம் பாயாஜி பாய்க்கு அளவு கடந்த பக்தி உண்டு. சாய்பாபாவை காடுகளில் அலைந்து தேடி கண்டு பிடித்து உணவு கொடுப்பார். அவர் அன்புக்கு கட்டுப்பட்ட சாய்பாபா நாளடைவில் வேப்ப மரத்தடியை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நிரந்தரமாக தங்கினார்.மாதங்கள் ஓடின. நிறைய பேரின் நோய்களை சாய்பாபா தீர்த்து வைத்தார். இதனால் தீராத நோயைத் தீர்த்து வைத்த கைராசிக்காரர் என்று அவரை சீரடி மக்கள் புகழத் தொடங்கினார்கள்.

இதையடுத்து சீரடி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் சாய்பாபாவை தேடி வந்தனர். பாபா கொடுத்த பச்சிலை மருந்துகளைப் பெற்று குணம் அடைந்தனர்.மனத்துயரத்துடன் வருபவர்களுக்கு சாய்பாபா கூறும் அன்பு கலந்த வார்த்தைகள், அவர்களது பாரத்தை இறக்கி வைப்பது போல இருந்தன. பாபாவின் புகழ் மெல்ல, மெல்ல மாவட்டம் முழுவதும் பரவியது.‘‘தெய்வீக சக்தி வாய்ந்தவர்’’ என்று சீரடி மக்களும் சாய்பாபாவின் புகழை கொண்டாடினார்கள். இதனால் சாய்பாபாவும் சீரடி மக்களுடன் நன்கு பழகி, பேசத் தொடங்கினார்.

முதலில் அவர் சீரடியில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள ரகதா என்ற ஊரில் தங்கவே நினைத்திருந்தார். ஆனால் சீரடி மண்ணும், மக்களும் அவரை சிக்கென பிடித்துக் கொண்டனர். இதனால் வேப்ப மரத்தடி வாழ்க்கை அவருக்கு ஆனந்தமாக மாறி இருந்தது.சாய்பாபா தங்கியிருந்த வேப்பமரத்தடிக்கு சற்று தொலைவில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. அந்த கோவிலில் தேவிதாஸ் என்ற துறவி தங்கி இருந்தார்.சாய்பாபா சீரடிக்கு வருவதற்கு முன்பே தேவிதாஸ் தன் 12-வது வயதில் சீரடிக்கு வந்திருந்தார். சாய்பாபா சீரடியை சுற்றி வரும் போது அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்வார்.

இதனால் சாய்பாபாவுக்கும் தேவிதாசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. ஒரு ஞானியை, இன்னொரு ஞானிதான் முழுமையாக உணர்வார் என்று சொல்வார்கள். அதை உறுதிபடுத்துவது போல சாய்பாபாவின் மகிமையை தேவிதாஸ் உணர்ந்தார். எனவே அவர் தாமாகவே வேப்பமரத்தடிக்கு சென்று சாய்பாபாவை சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டு வருவார். அவர்களுக்கிடையே ஆழமான நட்பு மலர்ந்தது.சீரடி கிராமத்தை சேர்ந்த பலர், தேவிதாஸ் பாபாவை பார்த்து பேசுவதை விமர்சித்தனர். என்றாலும் தேவிதாஸ் பாபாவை சந்திக்க தவறவில்லை. அவர்களது நட்பு ஆத்மார்த்தமானதாக இருந்தது.

சாய்பாபாவுக்கு பல விஷயங்களில் தேவிதாஸ் வழி காட்டினார். நிறைய நல்ல கருத்துக்களை சொல்லிக் கொடுத்தார். தேவிதாஸ் கூறுவதைக் கேட்டு சாய்பாபா மிகவும் மகிழ்ச்சிக் கொள்வார். ‘‘உத்தமரே…. உங்களைத் தவிர சிறுபிள்ளையான எனக்கு வேறு யார், இத்தகைய நல்ல கருத்துக்களை சொல்லப் போகிறார்கள்?’’ என்பார்.துறவி தேவிதாசுக்கு ஜானகிதாஸ் என்றொரு நண்பர் இருந்தார். ஜானகிதாசும் துறவியாவார்.ஜானகிதாசிடம், ‘‘சாய்பாபா மிகச் சிறந்த மகான். அவரிடம் எல்லையில்லா ஆற்றல் உள்ளது’’ என்று தேவிதாஸ் கூறினார். இதைக் கேட்டதும் ஜானகிதாசும் வேப்பமரத்தடிக்கு வந்து விட்டார். ஜானகிதாசை வரவேற்ற சாய்பாபா அவரையும் நன்கு உபசரித்தார். இதனால் நாளடைவில் ஜானகிதாசும் சாய்பாபாவின் ஆத்மார்த்தமான நட்பாளராக மாறினார்.

சாய்பாபா, ஜானகிதாஸ், தேவிதாஸ் மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசுவார்கள். அவர்கள் அடிப்படையில் அன்பால் பிணைக்கப்பட்டிருந்தனர். அவர்களது ஒரு மித்த நட்பை கண்டு சீரடியே ஆச்சரியப்பட்டது.இதற்கிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேப்ப மரத்தை சுற்றி தரிசாக கிடந்த இடத்தை சாய்பாபா சீரமைத்தார். அங்கு வளர்ந்து கிடந்த முள் செடிகளை வெட்டி அந்த இடத்தை சமமாக்கினார். பிறகு நிறைய பூச்செடிகளை நட்டார்.சீரடியை சுற்றி உள்ள ஊர்களுக்கு சென்று பல வகை பூச்செடி விதைகளை வாங்கி வந்து விதைத்தார். அந்த விதைகளில் செடி வளர்வதற்காக அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினார்.

சாய்பாபா மீது அன்பு கொண்ட வாமன் தாத்யா என்பவர் தினமும் 2 மண் குடங்கள் எடுத்து வந்து கொடுப்பார். பாபா அக்குடங்களில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினார்.பச்சை மண்ணாலான அந்த குடங்கள் மாலைக்குள் உடைந்து விடும். மறுநாள் வாமன் தாத்யா 2 புதிய குடங்களை எடுத்து வந்து பாபாவிடம் கொடுப்பார். பாபா ஊற்றிய தண்ணீரால் விதைகளில் இருந்து செடிகள் வளர்ந்தன. சில மாதங்களில் அந்த பகுதி எழில் மிகுந்த பூந்தோட்டமாக மாறியது.

இந்த நிலையில் ஒரு நாள் புண்நாம்பே என்ற இடத்தில் இருந்து கங்காகீர் என்ற ஞானி சீரடிக்கு வந்தார். மண் குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றிய சாய்பாபாவை கண்டு ஆச்சரியப்பட்டார்.அவர், “இவரால் சீரடி ஆசீர்வதிக்கப்பட்டது. இன்று தண்ணீர் சுமக்கும் இவர் சாதாரண மனிதர் அல்ல. சீரடி காலம், காலமாய் சேகரித்த புண்ணியம்தான் அவரை இங்கே பெற முடிந்துள்ளது” என்று புகழ்ந்தார்.அக்கல் கோட் மகராஜின் சீடரான ஆனந்தநாத் என்பவர் சீரடிக்கு வந்து சாய்பாபாவை பார்த்து மலைத்துப் போனார். “இவர் ஒரு வைரம். அசலான வைரம். இன்று அவர் உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இந்த உலகம், விலை மதிப்பற்ற இந்த மாணிக்கத்தின் மகிமையை விரைவில் தெரிந்து கொள்ளப் போகிறது” என்றார்.

அவர் இப்படி சொன்னது அடுத்த சில மாதங்களிலேயே நடந்தது.1859-ம் ஆண்டில் ஒரு நாள்… சீரடியில் மிக பலத்த மழை பெய்தது. ஊரே வெள்ளத்தில் மூழ்கியது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர இயலவில்லை. மழை நீர் வெள்ளமாக கரை புரண்டோடியது.ஒரு நாள் கழித்தே மழை ஓய்ந்தது. வெள்ளம் வற்றியது. வீட்டை விட்டு வெளியில் வந்த மகல்சாபதி மற்றும் சீரடி ஊர்மக்கள் சாய்பாபா என்ன ஆனாரோ தெரியவில்லையே என்ற பதைபதைப்புடன் ஓடி வந்தனர். வேப்ப மரத்தடியில் சாய்பாபாவை காணவில்லை.சிறு குன்று போல மணல் மூடியிருந்தது. அதன் மீது இலைகள், செடி, கொடிகள் கிடந்தன. மக்கள் சந்தேகமடைந்து அதை விலக்கினார்கள்.

மணல் குவியலுக்குள் சாய்பாபா சலனமின்றி உட்கார்ந்திருந்தார். அவர் மிக, மிக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருப்பது தெரிந்தது.
மழையின் பாதிப்பு பற்றிய எந்த தாக்கமும் அவரை எதுவும் செய்து விட முடியவில்லை. கண் திறந்து பார்த்த சாய்பாபா, தன் மீது அன்பு கொண்ட மக்களைக் கண்டு புன்முறுவல் பூத்தார்.இந்த செய்தி சீரடி முழுக்க பரவியது. ஊரே வேப்பமரத்தடியில் திரண்டது. எல்லோரும் பாபாவை கண் கண்ட தெய்வமாக போற்றி வணங்கினார்கள்.

இனி மேல் சாய்பாபாவை வேப்ப மரத்தடியில் இப்படி தனியாக தங்க விடக்கூடாது என்று சீரடி மக்கள் முடிவு செய்தனர். வேப்ப மரத்தடிக்கு சற்றுத் தொலைவில் இருந்த மசூதியில் சாய்பாபாவை தங்க வைக்க முடிவு செய்தனர்.முதலில் சாய்பாபா அதை ஏற்க மறுத்தார். சீரடி மக்கள் வற்புறுத்தவே, அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு, மசூதியில் குடியேற சம்மதித்தார்.அந்த மசூதி மிகவும் பாழடைந்திருந்தது. மண்ணால் கட்டப்பட்டிருந்த அந்த மசூதியின் கூரையில் ஓட்டை விழுந்திருந்தது. இரவில் அந்த மசூதியில் தூங்குவதை சாய்பாபா வழக்கத்தில் கொண்டிருந்தார்.பகலில் வேப்ப மரத்தடிக்கு வந்து விடுவார். இப்படி மசூதியிலும், வேப்பமரத்தடியிலும் மாறி, மாறி தங்கிய சாய்பாபா அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்த்தி சீரடி மக்களை அதிசயிக்க வைத்தார்.

Tags : Saibaba ,
× RELATED மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே...