×

இல்லத்திலிருந்து தியானிக்க இனிய நரசிம்மர் தலங்கள்

06.05.2020- ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி

1. ஸ்ரீநவநரசிம்மர், தாழம்பூர் - சென்னை.

மூலவர் நரசிம்மர் நடுவில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகவும், அவரைச்சுற்றி பிராகாரத்தில் எட்டு நரசிம்மர்கள் உள்ளனர். மூலவர் உள்பட ஒன்பது நரசிம்மர்கள் இவ்வாலயத்தில் அருட்பாலிப்பதால் ஸ்ரீநவநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள இக்கோயில். அஹோபிலத்தில் நவ நரசிம்மரைச் தரசிக்க முடியாதவர்களுக்கு இத்தலம் ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீநவநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள (ஓ.எம்.ஆர்.) நாவலூர் அடுத்த தாழம்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.

2. ஸ்ரீ வேணுகோபாலசுவாமி, படவேடு - திருவண்ணாமலை.

மூலவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருடன், மகாலட்சுமி வலப்புறம்  அமர்ந்த நிலையில் இத்தலத்தில் அருட் பாலிக்கிறார். ஸ்ரீவேணுகோபாலசுவாமி என்றழைக்கப்படும் இத்திருக்கோயில் சென்னை காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ
தொலைவில் உள்ளது படவேடு.

3. லட்சுமி நரசிம்மர், நரசிங்கபுரம் - சென்னை.


இத்தலம் லட்சுமி நாராயணர் தலம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பிரமாதமாக கொண்டாடப்படுகிறது. அன்று லட்சுமி நரசிம்மருக்கு புஷ்ப அலங்காரம் மிக விமரிசையாக நடைபெறும். அர்த்த மண்டபம் முழுவதும் பூவால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தக்கோயில் கெம்பராஜபுரத்தில் உள்ளது.  லட்சுமி நரசிம்மர் அமர்ந்த நிலையில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கின்றார். சென்னை - மும்பை டிரங்க் சாலையில் வாலாஜாப்பேட் பகுதியில் வரும் முகுந்தராயபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கெம்பராஜபுரத்தில் இக்கோயில் உள்ளது.

4. அழகிய நரசிம்ம பெருமாள்,எண்ணாயிரம் - விழுப்புரம்

அஷ்டஸஹஸ்ரர் என்கிற பிராமணர் வாழ்ந்தபகுதி என்கிற பொருளில் எண் ஆயிரம் என்கிற பெயர்க்காரணம் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டின்படி இந்த நரசிம்மரை ராஜராஜ விண்ணகர ஆழ்வார் என்றும் இந்த இடம் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் போற்றப்பட்டுள்ளது. பிரம்ம லட்சுமியுடன் நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது எண்ணாயிரம்.

5. ஸ்ரீஉக்ர நரசிம்மசுவாமி, உம்மடிவரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரா.

பரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் நாற்கரங்கள். இம்மலையில் பெருமாள் இருப்பதைக் கண்டு முதியவர் தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். சுவாமியின் கருணையால் அவரே பூமிக்கு வந்து தங்கிவிட்டதாக வரலாறு. உக்ர நரசிம்ம சுவாமி சங்கு, சக்கர அபய வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி பூதேவி உள்ளனர். ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் புல்லலசெருவு வட்டத்திலுள்ள உம்மடிவரம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

6. தியாகேசர், திருவாரூர்


ருண என்றால் கடன் என்று சமஸ்கிருதத்தில் பொருள். கடன் தீர்க்கும் இவர் விசேஷமானவர். பெரும் சக்தி மிக்க இவரை வேண்டிக்கொண்டு ருண விமோசன ஸ்லோகத்தைப் படிக்க கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர். ருண விமோசன நரசிம்மர் அமர்ந்த திருக்கோலம், பாடல் பெற்ற தலமான
கமலாலயத்தில் இந்த நரசிம்மர் உள்ளார்.

7. நரசிம்ம பக்த ஸமாஜம், சாலியமங்கலம் - தஞ்சாவூர்

இந்தத் தலத்தில் கி.பி.1645 முதல் 371 ஆண்டுகளாக ஓராண்டுகூட தவறாமல் பாகவத ேமளா நடைபெறுகிறது. இந்த இடத்திற்கு அச்சுதபுரம் என்கிற பெயரும் உள்ளது. இந்த பாகவத மேளாவில் பிரகலாதன் சரித்திரம் நிகழ்கிறது. தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் 15 கி.மீ. கிழக்கே உள்ள சாலியமங்கலத்தில் அமைந்துள்ளது.

8. வனஜாக்ஷி லட்சுமி உடனுறை நரசிம்மர், கெஞ்சனூர் - ஈரோடு

இத்தல நரசிம்மர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவ்வாலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் 800 ஆண்டுகளுக்கு முன் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் மேகலேஸ்வரி உடனுறை மேகலேஸ்வரரும் உள்ளார். சைவமும் வைணவமும் இணைந்துள்ள இத்தலத்தில் நரசிம்மர் சாந்த மூர்த்தியாக உள்ளார். காரிய சித்தி கிட்டும் இத்தலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் திருப்பணி நடைபெற்றுள்ளது. ராமானுஜர் கூரத்தாழ்வாருடன் மேல்கோட்டை அடைந்தபோது இத்தலத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் அவர் கர்நாடக எல்லையினை அடைந்துள்ளார். நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுக வீற்றிருக்க, மகாலட்சுமி அவரது மடியில் அமர்ந்த வண்ணம் உள்ளார். நாற்கரங்களுடன் வனஜாக்ஷி லட்சுமி உள்ளார். சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கெஞ்சனூரில் வனப்பகுதிக்குள் இக்கோயில் அமைந்திருக்கிறது.

9. கதிர் நரசிங்கப்பெருமாள்,கொத்தப்புள்ளி - திண்டுக்கல்

இக்கோயில் திண்டுக்கல் நவ நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுயம்பு மூர்த்தியான சிவன் விஷ்ணுவுடன் சேவை சாதிக்கும் தலம். இத்தலத்துப் பெருமாள் ஜன்மாஷ்டமி அன்று இங்கு எழுந்தருள்கிறார். கதிர் நரசிம்மர் என்பது சூரியக் கதிர்களைக் குறிக்கிறது. சூரியனின் உபாதைகளில் இருந்து நிவர்த்தி தரும் தலம் என்பது ஐதீகம். இத்தலத்து சக்கரத்தாழ்வார் தனி சந்நதியில் தீ ஜுவாலைகள் போன்ற கிரீட அமைப்புக்கொண்டவர். 16 கரங்களில் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பெற்றுள்ளார். பின்புறம் வழக்கம்போல் யோக நரசிம்மரும் உள்ளார்.
திண்டுக்கல்லிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ரெட்டியார் சத்திரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கதிர் நரசிங்கப் பெருமாள் சாந்த மூர்த்தியாக சிம்ம முகம் இல்லாமல் கமலவல்லித் தாயாருடன் உள்ளார்.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்