×

மனதில் நினைத்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள, ராமநவமி அன்று மேற்கொள்ளும் விரதம்!!

வருடம்தோறும் ராமநவமி அன்று ராமர் கோவிலில், பட்டாபிஷேகமும், திருக்கல்யாணமும் சீரும் சிறப்புமாக, கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் கோவிலைகூட திறக்க முடியாத சூழ்நிலை நமக்கு வந்திருக்கிறது என்பது வருத்தப்படக் கூடிய விஷயம் தான். இருந்தாலும் ராமபிரானை மனதார நினைத்து நம் வீட்டிலேயே, எப்படி விரதத்தை கடைப்பிடித்து? இந்த ராம நவமியை நம் வீட்டிலேயே சுலபமான முறையில் எப்படிக் கொண்டாடலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பண்டிகை என்று வரும் சமயங்களில், பண்டிகைக்கு முந்தைய நாளே நம்முடைய வீட்டையும், பூஜை அறையையும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ராமநவமிக்கும் இதே முறைதான். ராமநவமி அன்று காலை எழுந்தவுடன், சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, அன்றைய தினத்தில் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி விரதம் இருக்கலாம். அல்லது மூன்று வேளையும் உணவு அருந்தாமல் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பவர்களும் இருக்கலாம். உடல் வலிமை உள்ளவர்கள் நாள் முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் கூட விரதம் இருப்பார்கள். அது அவரவர் உடல்நிலையை பொறுத்தது.

குறிப்பாக குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமநவமி அன்று சுந்தர காண்டம், ராமாயணம் இந்த இரண்டையும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. படிக்க முடியாதவர்கள் இந்த கதைகளை காதால் கேட்பதும் மிக நல்ல பலனை தரும். முடிந்தவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திரத்தை 108, 1008 என்ற கணக்கில் எழுதலாம். பகல் பொழுதில் ராமரை நினைவுகூறும் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதில் தவறு இல்லை.

நீங்கள் ராமரைப்பற்றிய எந்த ஒரு கதையைக் கேட்டாலும், படித்தாலும் உங்களுக்கு அருகில், ஹனுமனுக்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். நீங்கள் ராமாயணத்தையோ, சுந்தரகாண்டத்தையோ படிக்கும்போது உங்களுடன் அனுமனும் சேர்ந்து அந்தக் கதையைப் கேட்டு மகிழ்வார் என்பதும் சாஸ்திரம் தான். ராம நவமி அன்று மாலை 6 மணிக்கு, ராமருக்கு துளசி மாலை அணிவித்து, தீபம் ஏற்றி, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், வடை, பானகம் இவைகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

நம்மில் பலபேரது வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருக்கும். ராமரின் படம் இல்லாதவர்கள், ராமரை மனதார நினைத்து விரதத்தை மேற் கொள்வதில் எந்த தவறும் இல்லை. சில பேரது வீட்டில் அனுமனின் படம் இருந்தால் கூட, அதனை வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் துளசியை வாங்கி ராமருக்கு அணிவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதற்காக வெளியில் செல்ல வேண்டாம். நெய்வேதியம் செய்வதற்காக பொருட்களை வாங்குவதற்காக கூட வெளியில் செல்ல வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் பால் பாயசம் செய்து ராமரை வழிபட்டாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் ராமர் அவதாரம் எடுத்தது பால் பாயாசத்தில் இருந்துதான் என்பதால், இந்த பிரசாதத்ற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படியாக ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வனவாசம் இருந்த சீதையை கஷ்டத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தவர் ராமபிரான். கிட்டத்தட்ட இப்போது நாம் இருப்பதும் வனவாசத்தில் தான். கஷ்டத்தில் இருந்து கட்டாயம் நம்மையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த ராமநவமியை நாம் அனைவரும் வீட்டிலிருந்தே கொண்டாடலாம். ஸ்ரீ ராம ஜெயம்!

Tags : Ramanavami ,
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்