×

மங்காத புகழும், செல்வமும் அருளும் அழியாபதி ஈஸ்வரர்

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி மாநகரத்தில் நெல்லுக்கு வேலியிட்டு காத்த எம்பெருமான் காந்திமதி உடனுறை நெல்லையப்பர் அரசாளும் நெல்லையில், கருப்பூந்துறையில் வீற்றிருந்து அருட்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அய்யன் ஸ்ரீ அழியா பதிஈஸ்வரர் தன்னை அடிபணியும் அன்பர்களுக்கு மங்கா புகழும் அழியா செல்வமும் தந்தருள்கிறார். இத்தலம் கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஊழ்வினை அகற்றும் ஸ்தலமாகும்.

அழியா பதி ஈசன் என்ற நாமம் கொண்ட சிவன் கோயில் இது மட்டும் தான். இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தட்சன் நடத்திய யாகத்தின் போது ஈசனை அழைக்காமலும் அவருக்குக் கொடுக்க வேண்டிய அவில்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான். அதனால் சினம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், தட்சனை தண்டித்து விட்டு, அந்த உக்கிரத்தோடு அக்கினி பிளம்பாக தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார். அவருடைய உக்கிரமான பார்வையின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகில் உள்ள கரிக்காதோப்பு கருங்காடு வரையிலான வயல் வெளிகள் யாவும் தீக்கிரையானது. (இதனால் கரிக்காதோப்பு, கருங்காடு எனவும் இன்றுவரை இப்பகுதிகள் அழைக்கப்படுகிறது)
ஈசனின் உக்கிரமான பார்வையின் காரணத்தினால் வயல் பகுதிகள் அனைத்தும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. இதனையறிந்த மகரிஷிகள் கருங்காடு ஊர் எல்லையில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அதன் பிறகு அக்னி.

அப்பகுதியோடு நின்றது. அதன் மேல் தொடர்ந்து பரவவில்லை. இதன் காரணமாக அந்த லிங்கேஸ்வரர் ‘பரவா எல்லை நாதர்’ என்றழைக்கப்படுகிறார்.
கோரக்க மகரிஷி ஈசனை வழிபட முயன்றார் ஈசன் அக்னிஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரமான காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்னீஸ்வரரை சாந்த படுத்துவதற்காக ஈசன் அமர்ந்திருந்த மண்டபத்தின் நேர் எதிரே கிழக்கு முகமாக கோரக்க சித்தர் தலைமையில் பௌர்ணமி அன்று கூடிய ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்து ஈசனின் சினம் தணிய வைத்து, அவ்விடமே லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தனர்.

நெல்லையம்பலத்தை அழியாமல் காத்தருள் புரிந்த இத்தல ஈசன். அன்று முதல் ‘‘அழியா பதி ஈஸ்வரர்’’ என்ற நாமத்தில் வணங்கப்பட்டு வந்தார்.
தாமிரபரணி நதிக்கரையோரம் மேற்கு பார்க்க அக்னீஸ்வரர் ஆகவும் கிழக்குப் பார்க்க அழியா பதி ஈஸ்வரராகவும்  எதிர் எதிரே அமையப்பெற்ற சிறப்புமிக்க ஸ்தலம் இது. மேலும் தாமிரபரணி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் உத்திரவாகினி ஸ்தலம் எனவும் இத்தலம் பெயர் பெற்றது.
 நெல்லையம்பதியை அழியாமல் பாதுகாக்க போகர், புலிப்பாணி, கருவூர்சித்தர் மூவரும் கோரக்கர் உடன் இணைந்து அழியாபதி ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்துள்ளனர். (அழியா பதி ஈஸ்வரனுக்கு வலதுபக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மூன்று அடுக்கு தீபங்களில் மேல் ஸ்தானத்தில் உள்ள இரு தீபங்கள் மட்டும் ஈசன் விடும் மூச்சுக் காற்றில் இடைவிடாமல் அசைவதை காணலாம்.

ஈஸ்வரனுக்கு வலதுபுறம் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ள அன்னை சிவகாம சுந்தரி என்ற சவுந்தரிய வள்ளி கருவறையின் அமைப்பு தெற்கு நோக்கியும், ஐயனை நோக்கி தலை சாய்ந்த வண்ணமும் பார்வை ஐயனின் மீதும், அடியார்களின் செவிமடுத்து கேட்டு அவரிடம் எடுத்துரைப்பது போலவும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் நின்ற வண்ணம் அருட்பாலிக்கிறாள். சித்தர்கள் அடிக்கடி வாசம் செய்யும் ஸ்தலமாக இவ்வாலயம் உள்ளது. கோரக்க சித்தரின் பீடமும் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. மேலும் இவ்வாலயத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், பைரவர், சண்டிகேஸ்வரர் சாஸ்தா ஆகிய தெய்வங்கள் தனித்தனியாக சந்நதி கொண்டு அருட்பாலிக்கின்றன.
இவ்வாலயத்தில் சித்திரை முதல் நாள்,

ஆடிபூரம், ஐப்பசி திருக்கல்யாணம், தை மாதப்பிறப்பு, திருக்கார்த்திகை, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. மாதந்தோறும் தமிழ் மாத பிறப்பு, பிரதோஷம், அமாவாசை, தேய்பிறை, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிறுதோறும் ருத்ர ஜபம், திருவாசகம், முற்றோதுதல் உழவாரப்பணி நடைபெறுகிறது. வெள்ளிதோறும் கோபூஜை நடைபெறுகிறது.இத்தகைய சிறப்பு பெற்ற ஈசனின் ஆலயத்திற்கு அவசியம் பிரார்த்திக்க அன்புடன் அழைக்கிறோம்.

 - சிவ சண்முகவேல்

Tags :
× RELATED சட்டமன்றத்தில் சிங்கம் போல் எழுந்து...