×

அஷ்வாரூடா தேவி த்யானம்

ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைக்குத் தலைவியாக விளங்குபவள் இந்த அஷ்வாரூடா தேவி. இவள் ஆரோகணித்திருக்கும் குதிரைக்கு அபராஜிதம்  என்று பெயர். அபராஜிதம் என்றால் யாராலும் ஜெயிக்க முடியாதது என்று பொருள்.

லலிதாம்பிகையைப் போற்றும் ‘சக்திமஹிம்ன’ துதியில், உன் திருக்கரங்களிலுள்ள பாசத்தை யார் மனதில் தியானம் செய்கிறார்களோ, அவர்கள்  மூவுலகங்களையும் வசப்படுத்தும் ஆற்றல் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சக்தி மிக்க பாசத்திலிருந்து உதித்தவளே அஷ்வாரூடா தேவி.  இந்த அம்பிகை தன் திருக்கரங்களில் ஸ்வர்ணத்தாலான பெரிய சாட்டையுடன் கூடிய தடியைத் தரித்தவளாகவும் பாசம் ஏந்தியும் இரு கரங்களில்  ஒன்று குதிரை லகானைப் பற்றிக் கொண்டும் மற்றொன்றில் தாமரை மலரைக் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறாள். இந்த அன்னையின் அருள்  இந்த பூவுலகில் உள்ள போகசுகங்கள் அனைத்தையும் சாதகனுக்குக் கிட்ட வைக்கும். ஆனால் அதிலேயே சாதகன் மூழ்கி விடாமலும் காக்கும்.


இந்த தேவி கணவன்-மனைவி ஒற்றுமையை ஓங்கச் செய்பவள். வீட்டைக் காக்கும் தேவதையாகவும் போற்றப்படுகிறாள். குதிரை கட்டுப்பட்டு  ஓடினால், சவாரி சுகமாக இருக்கும். கட்டுப்பாடு மீறி தலைதெறிக்க ஓடினால் தன் மேல் சவாரி செய்பவனை தலை கீழாகத் தள்ளிவிடும். அது போல்  நம் ஐம்புலன்களும் கட்டுப்பாட்டுடன் சுகங்களை அனுபவிக்க வேண்டும். மீறினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது அஷ்வாரூடா  தத்துவமாகும். வாசி எனில் குதிரை. மூச்சுக் காற்று என்றும் பொருள்படும். அந்த வாசியோகம், இந்த அஷ்வாரூடா அருட்கடாட்சத்தினால் கிட்டும்.

த்யானம்
அஷ்வாரூடா கராக்ரே நவகநகமயா வேத்ரயஷ்டீ ததாநா
தக்ஷிணே நாநயந்தீ ஸ்புரிததநுலதா பாஸபத்தாந் ஸ்வஸாத்யாந்
தேவீ நித்ய ப்ரஸந்நா ஸஸிஸகலதரா ஸா த்ரிநேத்ராபிராமா
தத்யாதாத்யாநவத்யா ஸகல ஸுகவர ப்ராப்தி ஹ்ருத்யாம் ஸ்ரியம் ந:
மூலமந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா:

தில்லைவிளாகம் கோதண்டராமர்

தில்லைவிளாகம் மிக ரம்மியமான ஓர் சூழலில் அமைந்திருக்கிறது தில்லைவிளாகம் கோதண்டராமர் கோயில். ராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி  இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக்கிறார். வனவாசம் முடித்து நாடுதிரும்பும் பூரண மகிழ்ச்சி முகம் முழுதும் பொங்கிப் பரவியிருக்கிறது.  இடுப்பின் குழைவும் சிலிர்ப்பூட்டும் பேரழகு. உலகிலேயே வேறு எங்கும் காணமுடியாத அற்புதம், கைகளின் விரல் நகங்கள், நரம்புகளின் புடைப்புகள்,  மச்சங்கள், வலது காலில் ஓடும் பச்சை நரம்புகளெல்லாம் பார்க்கும்போது இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும்போலுள்ளது.   இத்தலம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ளது.

- மீனாட்சி

Tags : Ashwarauda Devi ,
× RELATED ஸம்பத்கரி தேவி த்யானம்