×

சீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா ?


சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்டவர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ… அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வமாக அவர் திகழ்கிறார். தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை. இதுவே இறை அவதாரங்களில் சாய்பாபா தனித்துவம் மிக்கவர் என்பதற்கு உதாரணமாகும்.

பாபா இப்போதும், இந்த வினாடி கூட நம்மோடு தான் இருக்கிறார். அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதங்களில் இருந்து இதை உணரலாம். 1918-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி அவர்தம் உடலில் இருந்து பிரிந்து எல்லைத்தாண்டியதும் சிலரது கனவில் தோன்றி பேசினார். தாஸ்கானு என்ற பக்தர் கனவிலும் தோன்றினார். “இப்போது மசூதி சிதைந்து விட்டது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் என்னை மிக, மிக கொடுமைப்படுத்தி விட்டார்கள். எனவே நான் மசூதியை விட்டுப் போகிறேன். இதை உனக்குத் தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். வா… வந்து என்னை வாசனை மலர்களால் நிரப்பு” என்று தாஸ்கானுவிடம் பாபா தெரிவித்தார். இந்த கனவைக் கண்டபோது தாஸ்கானு பண்டரிபுரத்தில் இருந்தார். பாபா விடைபெற்று விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது பக்தர்களுடன் உடனே சீரடிக்குப் புறப்பட்டு வந்தார்.

பாபாவின் மகாசமாதி மீது மிக அழகான, பிரமாண்ட மலர் மாலையை போர்த்தினார். பிறகு அவர் அங்கேயே அமர்ந்து பஜனை செய்தார். பாபா மகாசமாதி ஆகியிருந்த மூன்றாவது நாள் அதாவது அக்டோபர் 18-ந்தேதி ஏராளமான ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்தார். 13-ம் நாள் முக்கிய சடங்குகள் நடந்தன. உபாசினி கங்கை கரைக்கு சென்று ஆயிரக்கணக்கான வர்களுக்கு உடை வழங்கி அன்னதானம் செய்தார். சீரடியில் இருந்த முஸ்லிம்கள் சந்தனக் கூடு ஊர்வலம் மேற்கொண்டனர். இப்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கோபர்கவுன் கோர்ட்டு, சாய்பாபாவின் உடமைகளை கையகப்படுத்திக் கொண்டது. பாபா சட்டைப் பையில் இருந்த 16 ரூபாயையும் கோர்ட்டு எடுத்துக் கொண்டது. இதையடுத்து பாபாவின் மகா சமாதியை பராமரித்து, நிர்வகிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. அதுதான் பல்வேறு மாற்றங்களைக் கண்டு, இன்று “சீரடி சாய்சன்ஸ்தான்” ஆக வளர்ச்சிப் பெற்றுள்ளது.

பாபா மகாசமாதி அடைந்த முதல் சில ஆண்டுகளுக்கு அவர் சமாதி மீது பக்தர்கள் மலர் வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் பிரபல ஓவியரும், பாபாவின் தலை சிறந்த பக்தர்களில் ஒருவருமான சாம்ராவ் ஜேகர் என்பவர் சாய்பாபா படத்தை வரைந்தார். அந்த படம் அச்சு அசல் அப்படியே சாய்பாபா உயிருடன் இருப்பது போல இருந்தது. சாய் கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த படம் மிகவும் பிடித்துப் போனது. அந்த படத்தை பாபா மகாசமாதி முன்பு பீடத்தில் வைத்து வழிபட தொடங்கினார்கள். சுமார் 35 ஆண்டுகள் அந்த படம் பாபாவின் மகா சமாதியை அலங்கரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று சமாதி மந்திரில் உயிரோட்டமாக இருக்கும் பளிங்கு கல் சிலை தயாராகத் தொடங்கியது. பாபா சிலைக்கான அந்த பளிங்கு கல் கிடைத்த விதம், சிலை உருவான விதம் எல்லாமே ஆச்சரியத்துக்குரியதாகும்.

ஒருநாள்…. இத்தாலி நாட்டில் இருந்து பால் வெள்ளை நிற பளிங்கு கல் ஒன்று மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கியது. அந்த கல் தரத்தில் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. எனவே யாராவது கோடீசுவரர் அதை இறக்குமதி செய்திருப்பார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த பளிங்கு கல்லைக் கேட்டு யாருமே வரவில்லை. மும்பைத் துறைமுக அதிகாரிகள் பல்வேறு வகைகளில் ஆய்வு செய்தும், அந்த பளிங்கு கல்லை இத்தாலியில் இருந்து அனுப்பியது யார்? மும்பைக்கு ஏன் வந்தது? எப்படி மாறி வந்தது? என்பன போன்ற எந்த தகவல்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பளிங்கு கல்லை மும்பை துறைமுக அதிகாரிகள் ஏலம் விட்டனர். பணக்காரர் ஒருவர் அந்த கல்லை ஏலத்தில் எடுத்தார். பிறகு அதை அப்படியே சீரடி சாய் தேவஸ்தானத்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்த பளிங்கு கல்லை பெற்ற பிறகே, அதில் சாய்பாபாவுக்கு சிலை செய்து வைக்கலாம் என்ற எண்ணம் சாய் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தோன்றியது. சிலை வடிக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்தனர்.

மும்பையைச் சேர்ந்த பிரபல சிற்பி பாலாஜி வசந்தராவ் தாலிம் என்பவரிடம், சிலை செதுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி சிலை வடிவமைப்புக்காக ஏராளமான விருதுகள் பெற்றிருந்தார். மும்பையில் செட்டில் ஆகி இருந்த அவரிடம் பாபாவின் கருப்பு – வெள்ளை படம் ஒன்றை மட்டும் கொடுத்து, சிலை தயாரிக்க கூறியிருந்தனர். முதலில் களி மண்ணில் பாபா சிலையை பாலாஜி செய்து காண்பித்தார். பிறகு பளிங்கு கல்லை செதுக்கி பாபாவின் சிலை தயாராகத் தொடங்கியது. பாபாவின் உடல் அமைப்பை வடிவமைக்க பாலாஜி சற்று சிரமத்தை சந்தித்தார். தேர்ந்த சிற்பியான அவருக்கு பாபாவின் ஒவ்வொரு அங்கத்தையும் செதுக்குவது சவாலாக தெரிந்தது.

ஒரு கட்டத்தில் அவருக்கு மலைப்பாகி விட்டது. என்றாலும் பாபா சிலை செதுக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரிடம் குறையவில்லை. கண்ணீர் மல்க அவர் பாபாவிடம் வேண்டினார். “பாபா… இது உங்கள் சிலை. தத்ரூபமாக நீங்களே அதில் காட்சியளிக்க வேண்டும். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று மனம் உருக கேட்டுக் கொண்டார். அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றி னார். “நம்பிக்கையும் பொறுமையும் கொண்டால் வெற்றி நிச்சயம்” என்றார். பாபாவின் இந்த ஆசீர்வாதத்தால் சிலை தயாரிப்பு பணியில் வேகம் பிடித்தது. மிக வேகமாக சிலை தயாரானது. பாபாவின் முகத்தை வடிக்கும்போது, பாலாஜி மீண்டும் திணற வேண்டியதிருந்தது. பாபாவின் மூக்கு, கண்களை செதுக்க திணறினார். அன்றிரவு அவர் கனவில் பாபா தோன்றினார்.

தனது முகத்தை மட்டும் பல்வேறு கோணங்களில் காட்டினார். என் முகத்தின் அமைப்பை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு சிலையை செய் என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை விழித்த போது பாபாவின் அற்புதத்தை எண்ணி, எண்ணி சிற்பி பாலாஜி வியந்தார். காலை 7 மணிக்கு சிற்பக் கூடத்துக்கு சென்றபோது அவருக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிற்பக் கூடத்தின் கதவைத் திறந்ததும் அங்கு ஒரு ஒளி வெள்ளம் உருவானது. அந்த ஓளியில் சாய்பாபா தோன்றினார். ஆச்சரியத்தில் உறைந்த பாலாஜி, கைக்கூப்பி வணங்கி விட்டு, பாபாவைப் பார்த்து அவர் கண், புருவம், காது, மூக்கு உள்ளிட்ட முக அமைப்பை அப்படியே தத்ரூபமாக செதுக்கினார். முக வடிவமைப்பு பணி முடிந்ததும், சாய்பாபா, அந்த பளிங்கு கல் சிலைக்குள் ஊடுருவி மறைந்தார். ஆக பாபா, அந்த சிலைக்குள் புகுந்து விட்டதை சிற்பி பாலாஜி உணர்ந்தார். ஆச்சரியத்தில் இருந்து மீள அவருக்கு நீண்ட நேரமானது. 1952-ம் ஆண்டு பாபா சிலையின் 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அப்போது எதிர்பாராத ஒரு சிக்கலை சிற்பி பாலாஜி எதிர்கொள்ள நேரிட்டது. பாபாவின் சிலையை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் அவர் இடது காலை ஊன்றி, அதன் மீது தனது வலது காலை தூக்கிப் போட்டு அமர்ந்திருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த வலது காலின் மீது இடது கையை பாபா ஊன்றியிருப்பார்.

அந்த இடது கால் முழங்கால் பகுதியில் மட்டும் ஒரே ஒரு இடத்தை செதுக்கினால், சிலை செதுக்கும் பணி முடிந்து விடும். அந்த இடத்தில் ஏதோ காற்று இடைவெளி ஏற்பட்டிருந்தது போல காணப்பட்டது. அதில் கவனக்குறைவாகச் செதுக்கினால், ஒட்டு மொத்த சிலைக்கும் சேதம் ஏற்பட்டு விடலாம் என்ற அபாயம் இருந்தது. சிற்பக் கூடத்தின் பணியாளர்கள் அனைவரும், சிலையின் அந்த பகுதியில் உளியைக் கொண்டு செல்லப் பயந்தனர். எனவே பாலாஜியே உளியை கையில் எடுத்து பாபாவை நினைத்துக் கொண்டே, அந்த பகுதியை செதுக்கத் தொடங்கினார். அடுத்த வினாடி….. அந்த பகுதியில் முழங்கால் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அதே மாதிரி சிலை வடிவத்துக்கு வந்தது. தேவை இல்லாத பகுதி மட்டும் கீழே விழுந்தது. இப்போது பாபா சிலை கன கச்சிதமாக தயாராகி விட்டது. அப்போது பாலாஜி வசந்தராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

அன்றிரவு சிற்பி பாலாஜி கனவில் பாபா மீண்டும் தோன்றினார். “இனி இது போன்று என் உருவில் நீ எந்த சிலையையும் செய்யக்கூடாது. இது ஒன்றே போதும். நலமாக வாழ்வாய்” என்று கூறி மறைந்தார். பாபாவின் உத்தரவை பாலாஜி வசந்தராவ் அப்படியே ஏற்றுக் கொண்டார். 1970–ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்த அவர் தம் வாழ்நாளில் வேறு எந்த பாபா சிலையையும் செய்யவில்லை. அவர் செதுக்கிய பாபா சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. பாபா உயிருடன் இருப்பது போலவே தோன்றும் அற்புத சிலை. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி விஜயதசமி திருநாளில் பாபாவின் 36-வது சமாதி தினத்தன்று அந்த சிலை சமாதி மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமாதி மந்திருக்குள் நாம் நுழைந்ததும், அந்த சிலையில் உள்ள பாபா நம்மை பார்ப்பது போலவே இருக்கும். சமாதி மந்திரின் எந்த மூலையில் நின்றாலும் பாபாவின் அன்பு பொங்கும் அந்த கருணைப் பார்வை நம்மைத்தான் பார்க்கும். சுவாமி சரனானந்தா என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாபா சிலை தற்போது 205 கிலோ வெள்ளி பீடத்தில் வீற்றிருக்கிறது. கடந்த 63 ஆண்டுகளாக அந்த சிலையில் கோடிக்கணக்கான பக்தர்கள் பாபாவை ஆத்மார்த்தமாக கண்டு வணங்கி அருளாசிப் பெற்றுள்ளனர்.

இந்த சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு அவர் எதிரே நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாபா சொன்னது போல அவர் சமாதி இன்றும் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறது. சமாதி மந்திரில் உள்ள சிலையில் வீற்றிருந்து பாபா நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தி கொண்டிருக்கிறார். சீரடியின் இதயமாக அந்த சமாதி மந்திர் திகழ்கிறது. அங்கு தரிசனம் முடிந்ததும் அருகில் உள்ள துவாரகாமயிக்கு செல்ல வேண்டும். 60 ஆண்டுகள் அந்த மசூதியில்தான் பாபா வாழ்ந்தார். அந்த மசூதியில்தான் பாபா ஏற்றி வைத்த துனி தீபம் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.

Tags : Sai Baba ,
× RELATED சாய்பாபா வழிபாடு