×

கல்வி, செல்வம், வீரமருளும் சோட்டானிக்கரை பகவதி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சோட்டானிக்கரை என்ற இடத்தில், அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில். இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் பகவதி அம்மை, காலையில் கல்வி செல்வம் அருளும் சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், நண்பகலில் செல்வம் அருளும் மகாலட்சுமி ரூபத்தில் சிவப்பு வண்ண உடையிலும், மாலையில் வீரம் அருளும் துர்க்கையாக கரும் நீலவண்ண உடையிலும் அருட் பாலிக்கிறாள்.

சோட்டானிக்கரை முன்பு மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இங்கு ஆதிவாசிகள் அதிகளவு வாழ்ந்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவனான கண்ணப்பன் என்பவர் பசுக்களை கொன்று அதன் இறைச்சி உண்பவராக இருந்தார். ஒரு நாள் அவரது மகள் தந்தையால் கொல்லப்பட இருந்த பசு மாட்டை காப்பாற்றினாள். மகள் மீது அதிக பாசம் கொண்ட கண்ணப்பன் அன்று முதல் தானும் பசுவை வதைப்பதில்லை என்று சபதம் செய்தார். ஆனாலும் அவர் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கண்ணப்பன் கனவில் அவரது மகளால் காப்பாற்றப்பட்ட பசு தோன்றியது. தான் பசு வடிவில் வந்த தேவி என்றும், கண்ணப்பனின் மாட்டு தொழுவத்தில் தான் சிலையாக காட்சி அளிப்பதாகவும் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறி விட்டு அந்த பசு மறைந்து விட்டது. மறுநாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த கண்ணப்பன் அங்கு தேவி சிலையும், மகாவிஷ்ணு சிலையும் இருப்பதை பார்த்து அதை காவு (இயற்கை) கோயிலாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஆண்டுகள் பல உருண்ட போது, அந்த கோயில் புதர்கள் அடர்ந்து காடாக மாறியது. இந்த நிலையில் ஒரு பெண் புல்வெட்டும்போது அவரது அரிவாள் பட்டு விக்ரகத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதுபற்றி அங்குள்ள பெரிய நம்பூதிரியிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர் தேவபிரசனம் பார்த்து தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்தார். அந்த தேவியே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருட்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல் இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள மேற்கு வாசல் வழியாகத்தான் பகவதியை தரிசிக்க வருகிறார்கள். கோயிலின் வலதுபக்கம் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை கண் குளிர தரிசிக்கலாம். குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிராகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்

இந்த கோயிலில் நடைபெறும் சோட்டானிக்கரை மகம் என்ற திருவிழா மாசிமகத்தில் நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். மாசி மகம் அன்று உச்ச பூஜைக்கு பின்னர் பகல் 2 மணிக்கு நடை திறக்கப்படும். அப்போது சர்வ அலங்காரத்துடன் தேவி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் போற்றி பாடுகிறார்கள். இங்கு 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதும், அம்மனுக்கு சிவப்பு நிற பட்டுபுடவை காணிக்கையாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டு, சைவ வழிபாடு நடைபெறுகிறது.

பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள். மாசி மாதம் நடைபெறும் மாசி மகம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் நவராத்திரி, கார்த்திகை மாதங்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜை, அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் பிரசித்திப் பெற்றது. தினமும் காலை 4 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும்.

தொகுப்பு: ச.சுடலைகுமார்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி