×

எல்லையைக் காக்கும் வெள்ளைக்காரசாமி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பூவியூரில் செங்கிடாக்காரன் கோயிலில் அருட்பாலிக்கிறார் வெள்ளைக்கார சாமி. வணிகத்தின் பொருட்டு பாரதத்திற்கு வருகைபுரிந்து மேலை நாட்டவர்கள் வெள்ளைக்காரர்கள் என்றழைக்கப்பட்டனர். இத்தகைய வெள்ளைக்காரர்களில் ஒருவர் தான் பரங்கித்துரை. பரங்கித்துரைதான் வெள்ளைக்காரசாமி என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூவியூர், பூஜைப்புரைவிளை, சமாதானபுரம் ஆகிய இடங்களில் தெய்வமாக வழிபடப்படுகிறார். இவர் செங்கிடாய்க்காரசாமி அருட்பாலிக்கும் கோயில்களில் நிலையம் கொண்டுள்ளார்.  

சிவபெருமானின் சாபத்தால் மங்கைபதியை ஆட்சி புரிந்து வந்த அதி அரசனின் மகளாக உமாதேவி அவதரித்தாள். பருவம் வந்த பார்வதி தேவியை மண முடிக்க சிவபெருமான் பூலோகம் புறப்படுகிறார். அந்த நேரம் முனிவர்களை அழைத்த சிவன், தான் பார்வதிதேவியை மணமுடித்து திரும்பும் வரை, கயிலாயத்தை நீங்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று கூறினார். அப்போது முனிவர்கள், நாமும் அம்மை அப்பன் திருமணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சிவபெருமானிடம் தங்கள் இயலாமையை எடுத்துக்கூறினார். சுவாமி, யாராவது வந்து திரவியங்களை களவாடிச் செல்ல முயன்றால் தடுப்பதற்கும், அவர்களோடு மோதுவதற்கும் உடலிலும், மனதிலும் பலமில்லையே எங்களுக்கு’’ என்று கூறினர். அப்போது சிவனார் என் நாமம் கூறி யாகம் வளருங்கள் அதில் பிறப்பான் ஒருவன்.

மானிட ரூபம் பெற்றிருப்பான், மாண்ட பிணங்களையும் தின்றிருப்பான்,  பூத செயலை கொண்டிருப்பான். நீங்கள் ஏவினால் செய்து முடிப்பான். அழைத்தால் தாவி வந்து நிற்பான். மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிப்பான்’’ என்றுரைத்தார். சிவன் கூறியதன்படி, நந்தி நாரதர், உருத்திர வாள்முனி, ஓமமுனி, சக்திமுனி, விசுவாசமுனி, தக்கமுனி, வசிட்டமுனி ஆகியோர் கூடி, கைலாய நல்லபுரத்தில் வேள்விக்குழி வெட்டி அணல் வளர்த்தனர். வேள்வியில் பிறந்தான் ஒருவன். முனிவர்கள் அவனை காவலுக்கு வைத்தனர். கருவூலம் காத்ததால் கருவூலம் காத்த பெருமாள் என்றும் மண் காத்த பெருமாள் என்றும் அழைத்தனர். மண் காத்த பெருமாளை கயிலாய காவலுக்கு வைத்துவிட்டு சிவன், பார்வதி திருமணத்தைக் காண முனிவர்கள் சென்றனர்.

சிவன் திருமணம் முடிந்து கயிலாயம் வந்ததும், உமையாள் உனது கோரப்பசிக்கும், உயிர்பலித்து உண்ணும் உனது செயலுக்கும் கயிலாயத்தில் உனக்கு இடமில்லை. ஆகவே பூலோகம் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். அப்படியானால் எனக்கு ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும், என்னை நம்பி வணங்கும் அடியவரை காக்கும் வரமும் வேண்டும் என்று மண் காத்த பெருமாள் கேட்க, உமையாளும், சிவபெருமானும் அப்படியே ஆகட்டும். நீ கேட்டதை பெற்றாய் என்றுரைத்து பூலோகம் அனுப்பி வைத்தனர்.

சிவபெருமானிடம் வரம் பெற்ற மண் காத்த பெருமாள், தனது உடன் பிறந்தவளான பொற்கவலக்காரியோடு அகத்தியர் வாழ்ந்த சாஸ்தா காவலில் இருந்த பொதிகை மலைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காக்காச்சி மலை வருகிறார். காக்காச்சி மலை மாயாண்டி சுடலையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடம். அண்டிய மண்காத்த பெருமாளுக்கு, அய்யன் சுடலைமாடன் இடம் கொடுத்தார். காக்காச்சி மலையில் திட்டவட்டப்பாறை என்ற இடத்தில் ஓங்கி உயர்ந்த மரத்தில் மண்காத்த பெருமாள் வாசம் செய்தார்.

காலங்கள் சில கடந்த நிலையில் லண்டன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் புதிதாக கப்பல் கட்ட எண்ணி இந்தியா வந்தனர். தூத்துக்குடியில் கப்பல் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்களை கண்டறிந்து அந்த பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர். பட்டம் கட்டி, தச்சர்கள், குசினிக்காரர்கள் என அறுபது பேர், லண்டன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருடன் கப்பலுக்கு மரம் வெட்ட காக்காச்சி மலைக்கு வருகின்றனர். அந்த மூன்று பேரில் ஒருவர் உயரமாகவும், ஒருவர் குள்ளமாகவும் இருந்தனர். பரங்கித்துரை மட்டும் தனது பெயர் பரங்கித்துரை என்று தமிழில் கூறியுள்ளார். மற்ற இரண்டு பேர்களின் பெயர்கள் தெரியாததால் அவர்களை பெரியதுரை, சின்னதுரை என்று அழைத்தனர் மரத்தை வெட்ட வந்தவர்கள்.

மண் காத்த பெருமாள் வாசம் செய்த மரத்தையும் சேர்த்து வெட்டிக்கொண்டு வருகின்றனர். கப்பல் கட்டப்பட்டு கப்பலைப் பரிசோதனை செய்து பார்க்க லண்டனிலிருந்து மும்பை வழியாக காயங்குளம் துறைமுகம் வந்து பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். வெள்ளோட்டமாக பயணம் செய்ய தொடங்கினர். மேற்கு நோக்கி கேரளம் வரை  சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்புகின்றனர். கப்பல் கேரளம் கருநாகப்பள்ளி கடந்து திருவனந்தபுரம் கடந்து குளச்சல், பள்ளம், மணக்குடி, தலக்குளம், கோவங்குளம் கடந்து முட்டபதி தாண்டி கன்னியாகுமரி அருகில் உள்ள தவிட்டுத்துறைக்கு வந்தபோது தனக்கு வழிபாடு நடைபெற்று வந்த மரத்தை வெட்டியதால் கோபமுற்றிருந்த மண் காத்த பெருமாள் செம்பருந்தாக வடிவெடுத்து கப்பலைக் கடலில் மூழ்கடித்து விட்டார்.

பரங்கித்துரையும் அவரது கூட்டத்தினரும் கடலில் மூழ்கினர். மன்னத்தேவன் பாறை என்ற இடத்தில் பரங்கித்துரையும் அவர்களும் உதவியாளர்களும் கரை சேர்ந்தனர்.
மண் காத்த பெருமாள் பருந்து ரூபம் கொண்டு பறந்து சென்று, வெங்கலராசன் கோட்டைக்கு வந்தார். வெங்கலராசன் கோட்டைக்குள் வந்திறங்கிய அவர், தான் வந்ததை அரசன் அறிய வேண்டும் என்று தனது திருவிளையாடலை நிகழ்த்தினார். ஊரில் நோய் நொடிகளை ஏற்படுத்தினார். மரங்கள் தானே முறிந்து விழ வைத்தார். கடல் நீர் ஊருக்கு பெருக்கெடுத்து வரச்செய்தார். அச்சம் கொண்ட மன்னன், கேரள நம்பூதிரிகளை வரவழைத்து சோளி போட்டு பார்க்கிறார்.

இது வாதைகளுக்கும் பெரியது, பூதங்களை விடவும் கொடியது என்ன வென்று தெரியவில்லை எங்களுக்கு, ஆனால் ஒரு அசூர சக்தி உங்கள் கோட்டைக்குள் வந்துள்ளது என்று கூறினர். உடனே வெங்கலராசன் மாந்திரீக வாதிகளை வரவழைத்து பார்த்தார். அதில் வந்திருப்பது மாடன் வகையில் ஒருவர் என்பது தெரியவந்தது. உடனே அவருக்கு நிலையம் கொடுத்து செங்கிடா(செம்மறி ஆடு) பலி கொடுத்து சாந்தப்படுத்தினர். செங்கிடா பலி கொடுத்ததும், மண் காத்த பெருமாள் சாந்தமானார். அதனால் அவர் செங்கிடாக்காரன் என்ற பெயரில் வணங்கப்பட்டார்.  

கப்பல் கவிழ்ந்ததுக்கு காரணம் அறியாத லண்டன் வாசிகள் இவ்விடம் வந்த பூதத்திற்கு பூஜையா என கேலி பேச, ஆங்காரம் கொண்ட செங்கிடாக்காரன் அவர்களை பலி வாங்கினார். இறக்கும் தருவாயில் பரங்கித்துரை தன்னையும் உன்னைப்போல் மக்கள் வணங்க வேண்டும். எனக்கும் பூஜை, நமஸ்காரங்கள் வேண்டும் என்று வேண்டினார். அதனை ஏற்ற செங்கிடாக்காரன், அன்றிரவு பூவியூர் மக்களின் கனவில் தோன்றி பரங்கித்துரையினைத் தனது ஆலயத்தின் அருகில் நல்லடக்கம் செய்து அவருக்கும் வழிபாடு நடத்துமாறு கூறியதாகவும் மறுநாள் ஊர்மக்கள் செங்கிடாய்க்காரன் கோயிலுக்குத் தென்கிழக்காக சுமார் 100 மீட்டர் தொலைவில் பரங்கித்துரையை அடக்கம் செய்து அக்கல்லறையின் மீது பீடம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்களை வெள்ளையர்கள் என்று அழைப்பது உண்டு. அந்த வகையில் பரங்கித்துரையை வெள்ளைக்காரர் என்றும் வெள்ளைக்கார துரை என்ற பெயரிலும் வணங்கி வருகின்றனர். இக்கோயில் பாத்தியப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு துரை என்றும் வெள்ளைத்துரை என்றும் பெயர் சூட்டுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பூவியூர், பூஜைப்புரைவிளை, சமாதானபுரம் ஆகிய ஊர்களில் வெள்ளைக்கார சாமி துணைத் தெய்வமாக கோயில் கொண்டுள்ளார். இந்த ஊர்களில் துரை, வெள்ளைத்துரை என்ற பெயர்கள் அதிகமாக உள்ளன.

பூவியூரில் செங்கிடாய்காரசாமியின் ஆலயத்திற்கு தென்கிழக்காக வெள்ளைக்கார சாமி குதிரையின் மேல் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரசாமிக்கு படைக்கப்படும் படையலில் மதுபானமும், சுருட்டும், உயிருள்ள கோழியும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கியும், அமர்வதற்கான ஒரு மரநாற்காலியும் இடம்பெறுகிறது. வெள்ளைக்காரசாமிக்கு ஆடும் கோமரத்தாடி(அருள் வந்து ஆடுபவர்) படிப்பறிவே இல்லாதவராக இருந்தாலும் அருள் வந்து ஆடும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார். அதை இன்றும் கொடை விழாவின் போது பார்க்கலாம்.

படங்கள்: எஸ். சுதன்மணி.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : guard ,border ,
× RELATED கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில்...