×

பக்தனுக்காக கொடிமரத்தை விலக்கிய பெருமாள்

தன்மீது பக்தி மிகுந்த நந்தனாருக்கு தரிசனம் தர விரும்பினார் ஈசன். ஆனால் தன் கோயிலுக்கு வெளியே கண்களில் நீர் பனிக்க, உதடுகள் துடிக்க தன்னை துதிக்கும் அந்த பக்தன் தன்னை தரிசிக்க முடியாதபடி நந்தி மறைத்திருப்பதையும் கண்டார். உடனே அந்த நந்தியை விலகி நிற்குமாறு பணித்தார். சிவதரிசனம் கண்டு பேரின்பம் அடைந்தார் நந்தனார். இந்த சம்பவம் நிகழ்ந்த தலம் திருப்புன்கூர். இங்கே அந்த சம்பவத்துக்குச் சான்றாக இன்றும் கருவறையை மறைக்காதபடி நந்தி விலகியிருப்பதைக் காணலாம்.
சிவனுக்கு இப்படி ஒரு பக்தன்போல விஷ்ணுவுக்கும் ஒரு பக்தன் இருந்தார். இந்த பக்தனுக்காக தன் எதிரில் இருந்த கொடிமரத்தையே விலகச் செய்தார் திருமால். இந்த சம்பவம் நிகழ்ந்தது திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயிலில்.

மகேந்திர கிரி மலையடிவாரத்தில் வசித்து வந்தான், நம்பாடுவான் என்ற  விஷ்ணு பக்தன். இவன் மலைச்சாதியினன் என்பதால், அக்காலத்து உயர் வகுப்பினர் அவனைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் மூலவரான அழகிய நம்பெருமானை கோயிலுக்கு வெளியிலிருந்தபடியே தரிசிக்க முயன்றான். அதற்கும் வாய்ப்பு இல்லாதபடி, பார்வை நேர்க்கோட்டை கொடிமரம் தடுத்தது. அதனால் அவன் மிகவும் வேதனைப்பட்டு பெருமாளை பக்தியோடு வேண்டி அழுதான். இதை அறிந்த பெருமாள் அவனது தீவிர பக்தியைக் கண்டு கொடிமரத்தை விலகச் செய்து நம்பாடுவானின் மனம் குளிர தரிசனம் தந்தருளினார். ஆகவே, மற்ற கோயில்களைப்போல் அல்லாமல் இங்கு கொடிமரம் விலகி இருப்பதை இன்றும் காணலாம்.

ஒருமுறை இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமாதேவியை கைப்பற்றி பாதாளத்திற்குத் தூக்கிச் சென்றான். இதை அறிந்த எம்பெருமான் வராக அவதாரம் எடுத்து பூமித்தாயை மீட்டார். பிறகு பூமித்தாய் பெருமாளிடம் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய என்ன வழி என வராக மூர்த்தியிடம் கேட்க அதற்கு இசையாலும், மிகுந்த பக்தியாலும் என்னை அடையலாம் எனக் கூறினார். இதன் எடுத்துக்காட்டாக ஒரு வரலாற்றை அறியலாம். ஒரு பக்தனைப் பிடித்த பூதம் ஒன்று, அவனைத் தன் உணவாக்கிக் கொள்ள முனைந்தது. அப்போது அவன் பூதத்திடம், ‘இன்று ஏகாதசி. நான் கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பிறகு நீ என்னை உண்ணலாம்’ என்றான். பூதம் சம்மதித்ததும், அவன் பாட, ஏகாதசி தினத்தில் அவ்வாறு பாடியதால் அவனுக்கும், அந்தப் பாட்டை கேட்ட பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது என்று ஒரு புராண சம்பவம் உண்டு.

இவ்வாறு பக்தியின் மேன்மையை ஓங்கச் செய்த பெருமாள் இத்தலத்தில் இரண்யாட்சனை வதைத்து பூமாதேவியை காப்பாற்றி விட்டாலும், அவன் மீதான கோபம் நீங்காததால், பயங்கரவராக ரூபம் கொண்டு தனது தேவியுடன் தங்கினார். ஆனால் தன் சொரூபத்தைக் கண்டு பக்தர்கள் அச்சப்படுவதை அறிந்த அவர், தன் ரூபத்தைக் குறுங்கச் செய்தார். ஆகவே இத்தலம் குறுங்குடி என கூறப்படுகிறது. அதுவே மருவி திருக்குறுங்குடி ஆனது. பெருமாள் கோயில் கொண்டுள்ள இவ்விடத்தில் சிவன் சந்நதியும், பைரவர் சந்நதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வைணவக் கோயில்களில் காணவியலாத தனிச்சிறப்பு இது.

பெருமாளுக்கு பூஜை நடக்கும் போது, பட்டர், சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா என்று தெரிந்து கொள்வதற்காக, சிவ சந்நதியிலிருக்கும் அர்ச்சகர்களிடம், ‘அன்பர்க்கு குறையேதும் உண்டா?’ என்று கேட்பதும், அதற்கு ‘குறையேதும் இல்லை’ என்று பதில் பெறுவதுமான வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இப்படி ஹரியும், ஹரனும் ஒன்றுபட்டு நிற்கும் திருத்தலம் இது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் பெரியாழ்வார் இவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் அழகிய நம்பியை ராமானுஜ நம்பி, வைஷ்ணவ நம்பி என்றும் அழைக்கிறார்கள்.

தாயார், திருமாமகள் நாச்சியார் ஆவார். இந்த அழகிய நம்பி பெருமாளே நம்மாழ்வாராக அவதாரம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். திருமங்கை ஆழ்வார் ரங்கநாதரிடம் மோட்சம் கோரியபோது, ‘திருக்குறுங்குடிக்கு போனால் மோட்சம் கிடைக்கும்’ என்று பதில் கிடைத்தது என்றும், ஆழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தைதான் என்றும் கூறப்படுகிறது. நின்ற- அமர்ந்த- நடந்த-கிடந்த-இருந்த ஆகிய ஐந்து நிலைகளிலும் பெருமாள் இத்தலத்தில் காட்சி தருகிறார். திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. மேலும் திருநெல்வேலி - நாகர்கோயில் வழியில் வள்ளியூர் சென்று அங்கிருந்தும் திருக்குறுங்குடிக்கு செல்லலாம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Tags : Perumal ,devotee ,
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்