×

ஒப்பில்லாத பெருமான் ஒப்பிலியப்பன்

உப்பிலா அப்பன். பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவதில் நிகரற்றவர் என்பதால் இவர் ஒப்பிலா அப்பன் என்று அழைக்கப்படுகிறார். கோயிலுக்குள் குளத்தங்கரையில் ஏராளமான பிரார்த்தனை முடிச்சுகளுடன் வில்வ மரம் உள்ளது. பக்தர்களின் பிரச்னைகளும் அவை தீர்ந்த சந்தோஷங்களும் அவற்றில் தெரிகின்றன.  கோயில் மதில் சுவர் உயரத்துக்கு மேல் இந்த மரம் வளராதது குறிப்பிடத்தகுந்தது. திருப்பதி பெருமாளுக்கு உள்ளது போலவே இத்தல பெருமாளுக்கும் உள்ள ஒப்பிலியப்பன் சுப்ரபாதம் புகழ்பெற்றது. நம்மாழ்வாருக்கு 5 வடிவங்களில் காட்சியளித்திருக்கிறார் உப்பிலா அப்பன்: பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், விண்ணகரப்பன். மார்க்கண்டேய மகரிஷி உப்பிலா அப்பனின் மாமனார்.

இறைவன் விருப்பத்துக்கேற்ப தான் கண்டெடுத்த மகளை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தார் ரிஷி. சரியான அளவில் உப்பு போட்டு தன் மகளுக்கு சமைக்கத் தெரியாதே என்று அவருக்கு ஆதங்கம். ஆனால் உப்பில்லா சமையலே தனக்கு அமிர்தம் என்று ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதனால் உப்பில்லா பிரசாதங்களே இன்றளவும் அப்பனுக்கு நிவேதிக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் ஆகாச நகரம், வைகுண்ட நகரம், துளசிவனம், திருவிண்ணகர், உப்பிலியப்பன் கோயில், மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றெல்லாமும் அழைக்கப்படுகிறது.

கருவறையில் நெடிதுயர்ந்த நின்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். அவர் காலடியில் மகாலட்சுமி. எதிரே மாமனார் மார்க்கண்டேயர். பெருமாள் வலது கரத்தில் ‘மாம் ஏகம், சரணம் வ்ரஜ’ என்ற வாசகத்தைக் காணலாம். பொருள்: ‘நான் ஒருவனே உனக்கு கதி. என்னைச் சரணடைந்தவர்களின் வினைகள் தீரும்.’  ஜைமினி முனிவரின் சாபத்தால் பறவையாக மாறிய தேவசர்மாவுக்கு விமோசனம் தந்த அஹோராத்ர தீர்த்தம் உள்ளது. இதில் எந்நாளும், 24 மணிநேரமும் பக்தர்கள் நீராடலாம். திருமலை ஸ்ரீநிவாசனுக்கு அண்ணனாக இந்த உப்பிலா அப்பன் கருதப்படுகிறார்.

அதனால் திருப்பதிக்கு நேர்ந்து கொண்டவர்கள் இந்தக் கோயிலிலும் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். தாயாருக்கு தனி சந்நதி இல்லை. பூமி நாச்சியாரில்லாமல், தான் மட்டும் தனியாக ஆஸ்தானத்தை விட்டு இந்த பெருமாள்  எழுந்தருள்வது இல்லை. ஆலயத்தின் சுவரெங்கும் திருப்பாவை பாசுரங்களும், தசாவதாரமும் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் மஹாவிஷ்ணுவைப் பிரிந்து வருந்தியபோது, உப்பிலா அப்பன் அவரை அரவணைத்து ஆறுதலளித்ததால், பெருமாள் இங்கே நிரந்தரமாக வாசம் செய்வதாக ஐதீகம்.

தொகுப்பு: ஆர். அபிநயா

Tags : gentleman ,
× RELATED ‘ஜென்டில்மேன் 2’ மூலம் தமிழுக்கு வரும் பிராச்சிகா