×

செவ்வாய் தோஷத்தை போக்கும் வெற்றிவேல் முருகன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது ஆன்றோர்களின் வாக்கு. இந்த ஆன்றோரின் வாக்கை நிரூபிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாம்பாறையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் மிகவும் அற்புதமான தலமாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை, ஆர்ப்பரித்து கொட்டும் அருவிக்கு அருகே அமைந்துள்ளது இக்கோயில். இக்கோயில் 19ம் நூற்றாண்டை சேர்ந்தது. இங்கு சுவாமி வெற்றிவேல் முருகன் என்ற திருநாமத்தோடு, வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  

இக்கோயில் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் வெற்றிவேல் முருகன் அழகே திருவடிவாக, கருணை பொங்கும் விழிகளுடன் காட்சியளிக்கிறார். வள்ளி, தெய்வானை தாயார்கள் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. அன்னையிடம் இருந்து முருகபெருமான் பெற்ற சக்திவேலுக்கு இங்கு தனி மண்டபம் உள்ளது. இந்த சக்திவேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நமது அனைத்து பிரச்னைகளும் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன.  செவ்வாய்கிழமை தோறும் விரதம் இருப்பது,  கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது, சஷ்டி திதியில் விரதம் இருப்பது. ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்  செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

அதேபோல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

வளர்பிறை சஷ்டி திதியில் இருப்பது சஷ்டி விரதம் மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். பின்னர் வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.ம மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் கடைபிடித்தால் முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம். இந்த மூன்று விரதங்களை கடைபிடித்து வெற்றிவேல் முருகனை வழிபட்டால் அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.

Tags : Victoryvale Murugan ,Mars ,
× RELATED ருசக யோகம்