×

ராஜயோகம் அருள்வார் நாகேஸ்வரர்

வடநாகேஸ்வரம், குன்றத்தூர்,காஞ்சிபுரம்.

சோழமன்னன் அனபாயன் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டபோது, இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் “சேக்கிழார்” என்றழைக்கப்
பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டார்.

ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனைத் தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பி, தனது ஊரில் கோயில் கட்டி நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு, “நாகேஸ்வரர்” என்று பெயர் சூட்டி வழிபட்டார். இதனாலே இத்தலம், “வடநாகேஸ்வரம்” என்று அழைக்கப்பெற்றது.

அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சந்நதியில் காட்சி தருகிறாள். கோயில் பிராகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சந்நதி இருக்கிறது. கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த வீட்டில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது. சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தைக் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சந்நதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

ஆடிப்பூரம், மாசிமகம் ஆகிய நாட்களில் உற்ஸவம் நடைபெறுகிறது. மேலும் இத்தலத்தில் சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.

- தினேஷ்குமார்

மரண பயம் போக்கும் எமனேஸ்வரமுடையார்

எமனேஸ்வரம்  பரமக்குடி, ராமநாதபுரம்

சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.

தவறை உணர்ந்த எமன், தான் விழுந்த இடத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, தவறுக்கு மன்னிப்பு வேண்டி வழிபட்டார். அதன்பின்பு சிவன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். எமனின் பெயரால்
“எமனேஸ்வரமுடையார்” என்றும் அழைக்கப்பட்டார்.

திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த கால சம்ஹாரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர
விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.அம்பாள் சொர்ணகுஜாம்பிகை இரண்டு கரங்களுடன் தனிச்சந்நதியில் இருக்கிறாள்.

மார்கழி திருவாதிரை, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், சிவராத்திரி ஆகிய நாட்களில் விழாக்கோலம் பூண்டிருக்கும்
இத்தலம்.பரமக்குடியில் இருந்து இளையான்குடி செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் எமனேஸ்வரம் உள்ளது. கண்மாய்க்கரை ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.

- மீனாட்சி

திருமண வரம் அருள்வாள் தில்லைகாளியம்மன்

சிதம்பரம்

சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும்  சக்தியாகிய நான் தான் சக்திமிக்கவள் என தேவி, சிவனுடன்  விவாதம் செய்தாள். அப்போது சிவன், “நீ  எம்மைப் பிரிந்து காளியாக மாறுவாய்” என்று சபித்தார்.  இதை சற்றும் எதிர்பார்க்காத  பார்வதி, சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். “கோபத்தில் தந்த  சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது.  

எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும்.  அதுவரை நீ உக்கிரத்தின்  உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.
ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் ஏற்பட, காளிதேவி  அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள். மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நடனம் ஆட போட்டிக்கு அழைத்தாள்.

 போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி.  “நான்  தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று  விடுகிறேன்” என்று கூறினாள்.  சிவபெருமானுக்கும்  காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை  அடைந்தது.  சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்தவ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார்.  ஈசன் செய்தது போல்  பெண்ணான காளி தேவி பல ஆயிரக்கணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது  எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக்  கொண்டாள்.

தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை.  “தந்திரமாக ஜெயித்ததை  எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது’’ என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள்.   அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் “தில்லைக்காளி” என்ற பெயரில் அமர்ந்தாள்.  இவளை “எல்லைக்காளி” என்றும் சொல்வர்.  “நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன்.  என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள்.  

இதனால் இன்னும் நீ  பெருமையடைவாய்’’ என்றார் சிவன். அதன்படி இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத்  தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க “தில்லைக்காளியை வேதநாயகி” எனப்  புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என  குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார்.  அதன்படி காளி, “பிரம்ம  சாமுண்டீஸ்வரி” என்ற பெயரில்  நான்கு முகத்துடன் அமர்ந்தாள் காளி.  

 ஒவ்வொரு ஆண்டும் இத்தலத்தில் நடைபெறும் மாசி பௌர்ணமி நாளன்றுசூரியனும்  அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும்.

தொகுப்பு: அன்னவயல்

Tags : Rajyogam ,Nageswar ,
× RELATED மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை