×

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

234. அஹஸ்ஸம்வர்த்தகாய நமஹ (Ahassamvarthakaaya namaha)

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்னும் மகான், கும்பகோணத்தில் சில காலம் தங்கியிருந்தார். அப்போது குடந்தையைச் சேர்ந்த கந்தளன் என்ற வேதியருக்குப் பிசாசு பிடித்து விட்டதாகச் சொல்லி அவரது உறவினர்கள் நடாதூர் அம்மாளிடம் அழைத்து வந்தார்கள்.
கந்தளனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த நடாதூர் அம்மாள், அவரது உறவினர்களிடம், “இவரைப் பிடித்த பிசாசு எது தெரியுமா? அவர் மனத்தில் தோன்றிய பேராசை என்னும் தீய குணமே! அந்தப் பேராசை அளவுக்கு மீறிச் சென்ற நிலையில், தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவர் போல் இவர் செயல்படுகிறார்!” என்று கூறினார்.

“இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?” என்று உறவினர்கள் கேட்க, “திருமால் கையில் சுதர்சனச் சக்கரமாக அமர்ந்திருக்கும் சக்கரத்தாழ்வார் தான் காலச் சுழற்சிக்கு அதிபதி. அந்தச் சக்கரத்தாழ்வாரின் அருள் இருந்தால், முற்காலத்தில் இவர் எப்படி நல்ல மனநிலையில் இருந்தாரோ, அதே நிலையை அடையலாம்!” என்று சொன்ன நடாதூர் அம்மாள், குடந்தை சக்ரபாணிப் பெருமாள் கோயிலுக்குக் கந்தளனை அழைத்துச் சென்றார். சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து முப்பத்தி இரண்டு வரிகள் கொண்ட‘ஹேதிபுங்கவ ஸ்தவம்’ என்ற துதியை இயற்றினார். அந்தத் துதியின் ஒவ்வொரு வரியும் ‘ஜய’ என்ற சொல்லுடன் தொடங்கும் விதமாக அமைத்தார்.

1.ஜய! ஹேதீச! லக்ஷ்மீச பாஹ்வலங்கார பூத! - திருமாலின் கரத்துக்கு ஆபரணமாய்த் திகழும் ஆயுதங்களின் தலைவனே!
2.ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! - திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே!
3.ஜய! விஷ்ணுஹ்ருத்தத்த்வ ஸஞ்ஜாத சக்ரஸ்வரூப! - திருமாலின் இதயத்திலிருந்து கனிந்து வந்தவனே!
4.ஜய! விஷ்ணுமூர்த்திஷு ஸர்வாஸு விக்க்யாதசிஹ்ந! - திருமாலின் திருமேனிக்கு அடையாளமாகத் திகழ்பவனே!
5.ஜய! விஷ்ணுதாஸ்ய தாந க்ஷம ஸ்ரீஷடாக்ஷர! - உனது ஆறெழுத்து மந்திரத்தால் அடியவர்களை விஷ்ணுவின் தாஸர்களாக ஆக்குபவனே!
6.ஜய! ஸம்ஸ்பர்ச நிர்தக்த ஸர்வாகவாராம் நிதே! - உனது ஸ்பரிசம் ஏற்பட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாபங்களையும் போக்குபவனே!
7.ஜய! கர்ப்பஸம்ஸ்பர்சஜாத காஷ்டாகுமார! - கர்ப்பத்திலிருந்து கரிக்கட்டையாகத் தோன்றிய பரீக்ஷித்தைக் காத்தளித்தவனே!
8.ஜய! விப்ரசித்த்யாஸுரீ கல்பநா கல்பஸூர்ய! - ப்ரஹ்லாதனை அச்சுறுத்திய விப்ரசித்தியின் ஜாலத்தைத் தவிடுபொடி ஆக்கியவனே!
9.ஜய! தாபேந யஸ்த்வாம் வஹந் கர்மயோக்ய:! - உன்னைத் தோளில் தரிப்பவர்களுக்கு வைதிகக் கர்மங்கள் செய்யும் அதிகாரத்தைத் தருபவனே!
10.ஜய! ஹரிஸ்த்வாம் ததத் ஸவ்யபாணௌ யுத்தயோக்ய: -உன்னை இடக்கையில் ஏந்துகையில் திருமால் போருக்குத் தயாராகிறார்!
11.ஜய! தேவாச்ச மஸ்தேஷு த்வாம் ததுர்தேவ பூதா:! - தேவர்கள் எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் உன்னை வணங்குவர்!
12.ஜய! பாஸா விருந்தன் பாஸாம் பதிம் ராத்ரிமாதா:! - உன் ஒளியால் சூரியனை மறைத்து, இருட்டை உண்டாக்கியவனே!
13.ஜய! ஸர்வைநஸாம் தாரணம் யத்விசிஹ்நம் தவ! - உனது சின்னம் தோளில் இருந்தால் அனைத்துப் பாபங்களும் தொலையும்!
14.ஜய! க்ருஷ்ணார்ஜுநாபீஷ்ட விப்ரக்ரியா தேஜஸா! - அந்தணனின் மகன்களை மீட்கச் சென்ற கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் வழியில் ஒளி தந்தவனே!
15.ஜய! யஸ்ய மூர்த்திர்பவத் சிஹ்நிதா தஸ்ய முக்தி:! - உனது சின்னத்தைத் தோளில் பொறித்துக் கொண்டவர்கள், மோட்சம் அடைவதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
16.ஜய! யே அநங்கிதாஸ்தே பத்யமாநா பாசஹஸ்தை:! - உனது சின்னம் இல்லாதவர்கள் யமனின் பாசக் கயிற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.
17.ஜய! ஸம்ஸ்கார முக்க்யார்ய பாச்சாத்ய துக்தாபிஷேக! - சங்கசக்ர லாஞ்சனம் நிறைவடைந்த பின் பால் திருமஞ்சனம் கண்டருள்பவனே!
18.ஜய! சங்காஸி கௌமோதகீ சார்ங்க ஸுப்ராத்ருபாவ! - பெருமாளின் மற்ற ஆயுதங்களுடன் சகோதர உறவோடு பழகுபவனே!
19.ஜய! மாலேஸ்ஸுமாலேச்ச நக்ரஸ்ய க்ருத்தாஸ்ய கண்ட! - ராவணனின் பாட்டன்களாகிய மாலி, சுமாலி, கஜேந்திரனைப் பீடித்த முதலை உள்ளிட்டோரின் கழுத்தைக் கொய்தவனே!
20.ஜய! ரக்ஷோஸுராணாம் தநூபாத்த ரக்தார்த்ர மால! - அசுர-ராட்சசர்களின் ரத்தக்கறை படிந்த மாலையை அணிந்தவனே!
21.ஜய! வித்ராவிதோ த்வேஷக்ருத் பௌண்ட்ரகஸ்தேஜஸா தே!- கண்ணனை வெறுத்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவனே!
22.ஜய! வித்வேஷிணீ தாஹமாஸாதிதா கோட்டவீ ஸா! - பாணாஸுர யுத்தத்தின் போது இடையூறு செய்த பாணாஸுரனின் தாயான கோட்டவியை அழித்தவனே!
23.ஜய! ஹரிஸ்த்வம்பரீஷம் ஹி ரக்ஷந் பவந்தம் வ்யதாத்! - திருமால் அம்பரீஷனை ரக்ஷிப்பதற்கு உதவி செய்தவனே!
24.ஜய! தூர்வாஸஸம் த்வம் பராஜிக்யிஷே தஸ்ய ஹேதோ! - திருமால் துர்வாஸரை வெற்றி கொள்ளக் காரணமாய் இருந்தவனே!
25.ஜய! வேதாச்ச தைவம் பரம் மந்வதே த்வாம் வஹந்தம்! - உன்னை ஏந்தியவனே பரம்பொருள் என்று வேதங்கள் சொல்கின்றன.
26.ஜய! ஹேதீஷு ஸத்ஸ்வேவ ஹந்தா ரிபூணாம் த்வமேவ! - திருமால் எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அது நீயாகவே ஆகிறாய்.
27.ஜய! தேவஹேதிசிஹ்நேஷு ஸர்வேஷு முக்யோ பவாந்! - ஆயுதச்சின்னங்கள் அனைத்தினுள்ளும் முதன்மையானது உன்னுடைய சக்கரச் சின்னமே!
28.ஜய! விஷ்ணு பக்தேஷு தாஸ்யப்ரதாநம் த்வயைவாங்கநம்! - உனது சின்னத்தை ஏற்பதால், விஷ்ணுபக்தன் தொண்டு செய்வதற்கான தகுதியைப் பெறுகிறான்!
29.ஜய! லீலாவிஹாரே சோத்ஸவே சரஸ்யக்ரணீஸ்த்வம்! - திருமாலின் உற்சவங்களிலெல்லாம் முன்னே செல்பவன் நீயன்றோ?
30.ஜய! தைவாஸுரே ஸங்கரே ரக்தபுக் நிர்பயஸ்த்வம்! - தேவாசுர யுத்தத்தில் பயமின்றிப் போரிட்டுத் தீய சக்திகளின் ரத்தத்தைப் பருகுபவனே!
31.ஜய! தர்சயாத்மபாஸா விரோதீந்யகாநி த்வம் நுத - உன்னை வணங்குபவர்களின் விரோதிகளான பாபங்கள் அனைத்தையும் போக்குபவனே!
32.ஜய! தேஹி விஷ்ணுலோகம் ஏவம் விதே பக்திஹீநே!

பக்தியில்லாத அடியேனுக்கும் விஷ்ணு லோகத்தை அருள்வாயாக! உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!
“ஸுதர்சனஸ்தோத்ரம் இதம் வரதார்யேண நிர்மிதம்
படந் ஸித்யதி வை ஸத்யோ ந பயம் தஸ்ய ஹி க்வசித் ”
இந்தத் துதியைப் படிப்பவர்களுக்கு ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள் அருளால், அனைத்து வெற்றிகளும் உண்டாகும். அவர்களின் அனைத்து பயங்களும் விலகும்.

(வரலாற்றில், சக்கரத்தாழ்வாரைக் குறித்து எழுந்த முதல் ஸ்தோத்திரம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. சக்கரத்தாழ்வார் தனிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குடந்தையில் இத்துதி தோன்றியது. 32 முறை ‘ஜய’ என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்தத் துதியைச் சொல்லும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து ஜயங்களும் உண்டாகும்.)

இத்துதியை நடாதூர் அம்மாள் நிறைவு செய்த போது, சக்கரத்தாழ்வார் எதிர்த்திசையில் சுற்றினார். அவரது சுழற்சிக்கேற்றபடி காலம் இயங்குவதால், அவர் நேர்த்திசையில் சுற்றினால் காலம் முன்நோக்கியும், எதிர்த்திசையில் சுற்றினால் காலம் பின்நோக்கியும் செல்லும். இப்போது அவர் எதிர்த்திசையில் சுற்றியதால், கடந்த காலத்தில் இருந்த நல்ல மனநிலையை அடைந்தார் கந்தளன். அவரைப் பிடித்த பேராசை என்னும் பிசாசு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

இவ்வாறு காலத்தை நிர்வகிக்கும் காலச் சக்கரமாகிய சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதால், திருமால் ‘அஹஸ்ஸம்வர்த்தக:’ என்றழைக்கப்படுகிறார். ‘அஹ:’ என்பதற்கு நாள் என்று பொருள். ‘ஸம்வர்த்தக:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். நாட்களைச் சுழற்றுவதால், அதாவது காலச் சுழற்சியை உண்டாக்குவதால், திருமாலுக்கு ‘அஹஸ்ஸம்வர்த்தக:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 234-வது திருநாமம்.வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைய விரும்புவோர் “அஹஸ்ஸம்வர்த்தகாய நமஹ” என்ற இத்திருநாமத்தைத் தினமும் சொல்லலாம்.

235. வஹ்நயே நமஹ (Vahnaye namaha)

கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்றொரு பழமொழி சொல்கிறோம் அல்லவா? அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்கள் வேதாந்த தேசிகனும் வித்யாரண்யரும்.வைணவ சமயக் குரவரான வேதாந்த தேசிகன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரது சமகாலத்தவராக, சங்கர மடத்தின் குருமார்களுள் ஒருவரான வித்யாரண்யர் என்பவரும் அதே காஞ்சியில் வாழ்ந்து வந்தார். தேசிகனின் பெருமைகளைப் பற்றிக் கேள்வியுற்ற வித்யாரண்யர், ஒருநாள் தற்செயலாக தேசிகனைச் சந்தித்தார்.

குள்ளமான தோற்றத்தோடு தேசிகன் இருப்பதைக் கண்டு, “ஆகார: ஹ்ரஸ்வ: கீர்த்திஸ்து மஹதா” என்றார். ‘ஆகார:’ என்றால் தோற்றம். ‘ஹ்ரஸ்வ:’ என்றால் குள்ளம். ‘கீர்த்தி:’ என்றால் புகழ். ‘மஹதா’ என்றால் பெரியது. “உங்களுக்கு மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது!” என்ற கருத்தில் அவ்வாறு சொன்னார் வித்யாரண்யர்.

சடக்கென அதற்கு விடையளித்த தேசிகன், “ஆகார: ந ஹ்ரஸ்வ:” என்றார். ‘ஆகார:’ என்பது உருவத்தை மட்டுமின்றி, ‘ஆ’ என்ற எழுத்தையும் குறிக்கும். ‘ஹ்ரஸ்வ:’ என்பதற்குக் குள்ளம் என்று மட்டும் பொருளல்ல, குறில் என்றும் பொருள் உண்டு. அதாவது, “நீங்கள் ஆகார: ஹ்ரஸ்வ: (ஆ குறில்) என்கிறீர்கள். ‘ஆ’ குறில் அல்ல, நெடில் (ஆகார: ந ஹ்ரஸ்வ:)” என்று விடையளித்து விட்டார் தேசிகன். இத்தகைய வாக்கு சாதுரியத்தைக் கண்டு வியந்த வித்யாரண்யருக்கு தேசிகன் மீது மேலும் அபிமானமும் மரியாதையும் உண்டானது.

பின்னாளில் ஹரிஹர புக்கரைக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய வித்யாரண்யர், தமது இளம் வயது நண்பரான தேசிகன் இன்னும் காஞ்சிபுரத்தில் வறுமை நிலையில் வாழ்வதைக் கேள்வியுற்றார். தேசிகனின் வறுமையைப் போக்க நினைத்தார்.தேசிகனை விஜயநகரத்துக்கு அழைத்து வரச் சொல்லித் தனது பணியாட்கள் சிலரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார் வித்யாரண்யர்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் தேசிகனுக்கு அரசவைப் பணி வழங்கத் தாம் தயாராக இருப்பதாக ஒரு கடிதமும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்.
கடிதத்துடன் வித்யாரண்யரின் பணியாளர்கள் காஞ்சியிலுள்ள தேசிகனை வந்து சந்தித்தார்கள். “எங்கள் ராஜ குருவான வித்யாரண்யர் தங்களுக்கு அரசவைப் பணி வழங்கப் பரிந்துரைத்துள்ளார். உங்களைக் கையோடு விஜயநகரத்துக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டுள்ளார்!” என்று தேசிகனிடம் கூறினார்கள்.

அப்போது தேசிகன், “வித்யாரண்யர் தம் நட்புக்கு மதிப்பளித்து, என் பாண்டித்யத்தையும் கௌரவித்து அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி! ஆனால் “வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்!” என்று பாடிய நம்மாழ்வாரின் கொள்கையைப் பின்பற்றுபவன் நான். இறைவனைப் பாட வேண்டிய நாவால், ஒரு மனிதனான மன்னனைத் துதிபாட மாட்டேன். அவ்வாறு மன்னனைத் துதிபாடிப் பரிசு பெறுகின்ற அரசவைப் பணி எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னார்.

“மன்னனைப் பாடினால் உங்களுக்குப் பொன்னும் பொருளும் கிடைக்குமல்லவா? ஏன் வாய்ப்பை மறுக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள் பணியாளர்கள். அதற்கு தேசிகனோ,“நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சித் ஆர்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம் ”
“நான் தேடிச் சம்பாதித்த தனம் ஏதும்
என்னிடமில்லை. என் தந்தை எனக்கென்று சேர்த்து வைத்த தனம் ஏதும் இல்லை. ஆனால் உலகுக்கே பிதாமகரான பிரம்மா, காஞ்சியில் ஹஸ்திகிரி மலைக்கு மேல் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளாரே வரதராஜப் பெருமாள், அந்தப் பெருமாள் தான் எனக்கென்று இருக்கும் மிகப்பெரிய தனம்!” என்றார். தமது வைராக்கியத்தை மேலும் விளக்கும் விதமாக ‘வைராக்ய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்களையும் இயற்றினார். மேலும், “என் குடும்ப பாரத்தை நான் வகிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அனைத்துலகங்களையும் தாங்குகின்ற வரதராஜப் பெருமாள் தான் என் குடும்ப பாரத்தையும் தாங்குகிறார்!” என்றார் தேசிகன்.

தேசிகன் கூறியதுபோல், அனைத்து உலகங்களையும் வகிப்பதால் (தாங்கி நிற்பதால்) திருமால் ‘வஹ்நி:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வஹ்நி:’ என்றால் வகிப்பவர் அல்லது தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 235-வது திருநாமம்.“வஹ்நயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனத்திலுள்ள அனைத்து பாரங்களையும் திருமால் போக்கி அருள்வார்.

236. அநிலாய நமஹ (Anilaaya namaha)

குழந்தை ஆஞ்ஜநேயர், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த வேளையில், அவருக்காகப் பழங்களைப் பறித்து வரச் சென்றாள் தாயான அஞ்ஜனா தேவி. குழந்தைக்கோ பசி அதிகமாகி விட்டது. தாயின் வரவை எதிர்நோக்கி ஆஞ்ஜநேயர் அண்ணாந்து பார்த்த போது, வானில் கிழக்குத் திசையில் செந்நிறத்தில் ஒரு பழம் ஒளிவீசிக் கொண்டிருப்பது அவர் கண்ணுக்குத் தெரிந்தது. அப்பழத்தைப் பறித்து உண்ண வேண்டும் என்ற ஆவலில் சடக்கென வானை நோக்கிப் பறக்கத் தொடங்கினார் ஆஞ்ஜநேயர்.

வானில் ஒளி வீசிக் கொண்டிருந்த சூரியனைத் தான் பழம் என்று தவறாகக் கருதிப் பறிக்கப் பாய்ந்தார் ஆஞ்ஜநேயர். தன்னை நோக்கி ஆஞ்ஜநேயர் வருவதைக் கண்ட சூரியன், அவரை வரவேற்கும் விதமாகத் தனது வெப்பத்தைக் குறைத்துக் கொண்டார். குழந்தை ஆஞ்ஜநேயர் சூரியனுக்கு அருகில் சென்று சூரியனைக் கடித்தார். சூடாகவும் பெரியதாகவும் இருந்த அப்பழத்தைக் (சூரியனை) கட்டி அணைத்து இறுக்கினார்.

அன்று கிரகண நாள். ராகு சூரியனைப் பிடிப்பதற்காகச் சூரியனை நோக்கி வந்தார். ஆனால் தனக்கு முன் வேறொரு குழந்தை சூரியனைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ராகு அருகில் வருவதைக் கண்ட ஆஞ்ஜநேயர், அவரை நோக்கிப் பலமாக உறுமி, ராகுவை விரட்டி விட்டார்.

ஆஞ்ஜநேயரைக் கண்டு அஞ்சி ஓடிய ராகு, இந்திரனிடம் முறையிட்டார். கையில் வஜ்ராயுதத்தை ஏந்தியபடி ஐராவத யானையின் மேல் அங்கே வந்தான் இந்திரன். இந்திரனின் யானையான ஐராவதத்தைப் பிடிக்க வந்தார் ஆஞ்ஜநேயர். அதனால் ஐராவதம் அஞ்சி ஓடியது.

இத்தனையையும் கண்டு ஆத்திரம் அடைந்த இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் ஆஞ்ஜநேயரின் தாடையில் தாக்கினான். உதயாத்திரி என்னும் மலைமேல் தூக்கி வீசப் பட்டார் ஆஞ்ஜநேயர். தாடைப் பகுதிக்கு ஹநு என்று பெயர். வஜ்ரத்தால் தாக்கப்பட்டுத் தாடை வீங்கியதால் ஆஞ்ஜநேயருக்கு ‘ஹநூமான்’ என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வாறு ஆஞ்ஜநேயர் இந்திரனால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்ததைக் கண்ட அவரது தந்தையான வாயுதேவன், தான் இந்திரனைப் பழிவாங்கப் போவதாகச் சினத்துடன் சொல்லிக் கொண்டே, ஆஞ்ஜநேயரை ஒரு குகைக்குள்ளே அழைத்துச் சென்றார்.திடீரென, ஈ எறும்பு தொடக்கமாக தேவர்கள் வரை எந்த ஜீவராசியாலும் மூச்சு விட முடியாமல் போய்விட்டது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று கூடித் தங்கள் பிராணனைக் காக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார்கள். “வாயு தனது மூச்சை அடக்கிக் கொண்டிருக்கிறார் போலும்! அதனால்தான் எந்த உயிராலும் மூச்சு விடமுடியவில்லை!” என்று பிரம்மாவிடம் புகாரளித்தார்கள் தேவர்கள்.

அப்போது அங்கே தோன்றிய பிரம்மா, “இந்திரா! வாயு தேவன் மூச்சை அடக்கிக் கொள்ளவில்லை. அனைத்து உயிர்களுக்கும் எந்த திருமால் உயிர் மூச்சை வழங்குகிறாரோ, அந்த திருமால் தான் மூச்சை அடக்கிக் கொண்டிருக்கிறார்!” என்றார்.

“ஏன்?” என்று கேட்டான் இந்திரன். அதற்குப் பிரம்மா, “விரைவில் ராவணன் என்னும் அரக்கனால் தேவர்களான நீங்கள் சொல்ல ஒண்ணாத இன்னல்களுக்கு ஆளாவீர்கள். அப்போது திருமாலே ராமனாகப் பூமியில் தோன்றி ராவணனை வதம் செய்து உங்களைக் காப்பார். அந்த ராமாவதாரத்தில் திருமாலுக்கு அனைத்து விதமான தொண்டுகளையும் இந்த ஆஞ்ஜநேயன் தான் செய்யப் போகிறான். தன் தொண்டனாக விளங்கப் போகும் இவனை நீ தாக்கியபடியால், கோபம் கொண்ட திருமால் தன் மூச்சை அடக்கிக் கொண்டுள்ளார். நீ ஆஞ்ஜநேயனிடம் மன்னிப்பு கோரினால் திருமாலின் கோபம் தணியும்!” என்றார் பிரம்மா.

இந்திரனும் ஆஞ்ஜநேயரின் இருப்பிடத்துக்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கோரி அவருக்குப் பற்பல விசேஷ சக்திகளையும் வரங்களையும் அளித்தான். ராகு, தனக்கு மிகவும் பிடித்த பொருளாகிய உளுந்தினால் வடைகள் தயாரித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து ஆஞ்ஜநேயருக்குச் சமர்ப்பித்தார். அதிலிருந்து தான் அனுமானுக்கு வடை மாலை போடும் வழக்கம் உண்டானது. இதனால் கோபம் தணிந்த திருமால், மீண்டும் அனைத்து உயிர்களும் மூச்சு விடும்படி அருள்புரிந்தார்.

அனைத்து உயிர்களின் சுவாசமும் திருமாலின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இந்தச் சம்பவத்தில் இருந்து நாம் அறிய முடிகிறதல்லவா? ‘அநில:’ என்றால் காற்று என்று பொருள். எல்லா உயிர்களுக்கும் மூச்சுக் காற்றை வழங்குபவராகத் திருமால் திகழ்வதால், ‘அநில:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 236-வது திருநாமம்.“அநிலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குச் சுவாசம் தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்படித் திருமால் அருள்புரிவார்.

237. தரணீதராய நமஹ (Dharaneedharaaya namaha)

பிரம்மதேவர் உலகைப் படைப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஊழிக் கடலுக்குள் மூழ்கி இருப்பதை உணர்ந்தார். அந்த நிலத்தை நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து நிறுத்தினால் தானே அவரால் உயிர்களைப் படைக்க முடியும்? அதனால் ஊழிக் கடலுக்குள் மூழ்கி இருக்கும் பூமியை உயர்த்துமாறு திருமாலிடம் பிரார்த்தனை செய்தார் பிரம்மா.

கடலுக்குள் மூழ்கிப் பூமியை மீட்டெடுப்பதற்கு ஏற்றபடி மிகப்பெரிய பன்றி வடிவில் தோன்றினார் திருமால். அதைத் தான் வராக அவதாரம் என்கிறோம். வேதமும் யாகங்களும் உலகைத் தாங்கி நிற்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் உலகைத் தாங்கிப் பிடிக்கப் போகும் வராகப் பெருமாள் வேதம், யாகம் இவற்றையே தனக்கு உடலாகக் கொண்டு அவதரித்தார்.

கடலுக்குள் அழுந்திக் கிடந்த பூமிதேவி, “தாமரைக் கண்ணனே! மாதவனே! நீர் தான் அடியேனைக் காத்தருள வேண்டும். நான் உன்னால் உருவாக்கப்பட்டவள். உன்னிடத்தில் நிலைநிற்பவள். உன்னையே சரணமாகப் பற்றியவள். மாதவனாகிய உன்னையே சார்ந்திருப்பதால் நான் மாதவி என்றழைக்கப்படுகிறேன். உடைமையை மீட்க வேண்டியது உடையவனின் பொறுப்பன்றோ?” என்று வராகப் பெருமாளிடம் வேண்டினாள்.

நிலமடந்தையின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த வராகப் பெருமாள், பன்றிகளைப் போல் குர் குர் என்ற ஒலி எழுப்பினார். அந்த ஒலி சாம வேத கானதைப் போல் இனிதாக இருந்தது. அந்த ஒலியோடு கடலுக்குள் மூழ்கினார். கோரைக் கிழங்கைப் பன்றிகள் கொத்தி எடுப்பது போல், பூமியை இடந்தெடுத்தார். கடலில் இருந்து ஒரு நீல மலை, இரண்டு பிறை சந்திரன்களைத் தன் மேல் ஏந்தியபடி வந்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பிறைச் சந்திரனைப் போன்ற தனது இரண்டு கோரைப் பற்களுக்கு நடுவிலே பூமியை ஏந்தியபடி, நீல மலைபோல் கடலில் இருந்து மேலே வந்தார் வராகப் பெருமாள்.

“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!” என்று நம்மாழ்வார் இதை அனுபவிக்கிறார்.அப்போது பூமி தேவி, “சுவாமி! இந்த ஊழிக் கடலில் இருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். ஆனால் பிறவிப் பெரும் கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் துன்பப் படுகிறார்களே! அவர்களைக் காக்க என்ன வழி?” என்று கேட்டாள். அப்போது அனைத்து ஜீவராசிகளும் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடியை அடைவதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லும் வராக புராணம் என்ற புராணத்தைப் பூமிதேவிக்கு வராகப் பெருமாள் உபதேசித்தார்.

அதில் முக்கியமாக, “ஒருவன் இளம் வயதில், உடலும் மனதும் வலிமையோடு இருக்கும் காலத்தில், எனக்குப் பூமாலை சமர்ப்பித்து, என் நாமங்களைப் பாமாலையாகப் பாடினால், அந்த பக்தன் முதுமைக் காலத்தில் என்னை மறந்தாலும் நான் அவனை மறக்காமல் அவனைக் காத்தருள்வேன்!” என்று வராகப் பெருமாள் வாக்களித்தார்.

பூமியை மீட்டுக் கொண்டு மேலே வந்த வராகரைத் தரிசித்த முனிவர்கள் யக்ஞவராகனாக அப்பெருமாளைக் கண்டு துதி செய்தார்கள். “இறைவா! யாகத்தின் அங்கங்கள் அனைத்தும் உனது திருமேனியின் அங்கங்களாக உள்ளன. உனது இரு கரங்களும் இரு திருவடிகளும் சேர்ந்து நான்கு வேதங்களாகும். உனது தலையே வேதத்தின் தொடக்கமாகிய பிரணவமாகும். உனது கோரைப் பல்லே யாகத்தில் பயன்படுத்தப்படும் யூபஸ்தம்பம் ஆகும். உனது மற்றைய பற்களே யாகங்கள். உனது நாக்கே அக்னி ஆகும். உனது ரோமங்களே தர்ப்பைப் புற்கள். யாகத்துக்குரிய காலங்களாகிய காலை, மாலை இரண்டும் உனது இரு கண்கள். உனது மூக்கே யாகக் கரண்டி!” என்றெல்லாம் வர்ணித்தார்கள் அம்முனிவர்கள்.

மேலும், “எங்களை எல்லாம் பூமி தேவி தாங்குகிறாள். நீயோ அந்த பூமியையே தாங்கிப் பிடித்து மீட்டெடுத்துள்ளாய்!” என்று சொல்லி வராகனைத் துதித்தார்கள் முனிவர்கள். வராகர் பூமியைக் கடல் மட்டத்துக்கு மேல் நிலைநிறுத்தியவாறே பிரம்மா படைப்புத் தொழிலை நடத்தியதாக வரலாறு.
(மேற்கூறிய வரலாறு ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அடியொற்றிக் கூறப்பட்டுள்ளது. இரணியனின் தம்பி இரணியாக்ஷன் பூமியைக் கடலுக்குள் அழுத்தி வைத்ததாகவும், அவனைக் கொன்று பூமியை வராகர் மீட்டதாகச் சொல்லும் வேறு புராணங்களும் உண்டு.)

‘தாரணம்’ என்றால் தாங்குதல் என்று பொருள். அவ்வாறு தாரணம் செய்வதால், பூமி தேவியைத் ‘தரணீ’ என்று அழைக்கிறோம். அந்தத் தரணீயையே தரிப்பதால் (தாங்குவதால்), திருமால் ‘தரணீதர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 237-வது திருநாமம். “தரணீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் படி, பூமியை உயர்த்திக் காத்த வராகர் அருள்புரிவார்.(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

தொகுப்பு: டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!