×

பக்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே!

மீனாட்சி அம்மன் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி ஆறுகால் மண்டபம் எனப்படும் முகப்புமண்டபம் வழியே முதற்பிராகாரத்தை அடையலாம். நுழைவாயிலின் இருபுறச் சுவர்களிலும் குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

பிறவியில் பேசும் திறனற்றிருந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் திருவருளால் ஐந்து வயதில் பேசும் திறன் பெற்று கந்தர் கலி வெண்பாவை இயற்றினார். மதுரையில் அவர் அரங்கேற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் சொல் வளமும் பொருள் வளமும் மிக்க தொன்றாகும் குருக்களின் மகள் போன்று வந்து அரசன் மடியில் அமர்ந்திருந்த சிறு பெண் குழந்தையாகிய மீனாட்சி அம்மை அரசன் கழுத்திலிருந்த முத்து மாலையைக் குமரகுருபரர் கழுத்தில் அணிவித்து மறைந்தாள்.
 
‘‘காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம்பாடல்
கலைமாச் செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே ! உயிரால
வாலத் துணர்வு நீர் பாய்ச்சி வளர்பார்க் குளிபூத்து அருள்பழுத்த
மலர்க் கற்பகமே ! எழுதாச் சொல் மழலை ததும்பு பசுங்குதலைச்
சோலைக் கிளியே ! உயிர்த்துணையாம் தோன்றாத் துணைக்கோர் துணையாகித்
துவாத சாந்தப் பெரு வெளியில் துரியங் கடந்த பரநாத
மூலத் தலத்து முளைத்த முழு முதலே ! முத்தம் தருகவே
முக்கட் சுடர்க்கு விநந்திடும் மும் முலையாய் ! முத்தம் தருகவே ’’
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
   
முகப்பு மண்டபம் வழியே உள்ளே சென்றால் வருவது மகாமண்டபம். இதன் மேற்குப் புறம் அன்னையின் கருவறை அமைந்துள்ளது. சதுர வடிவமுடையது. இதன் சிகரப் பகுதியில் தங்கத் தகடு போர்த்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்ற போது முதல் நிலைத் தளம் முழுவதும் தங்கத் தகடு போர்த்தப்பெற்றது. மகாமண்டபத்தின் இடப்புறம் ஒரு விநாயகரும் கருவறைக்குச் செல்லும் வழியில் இரண்டு விநாயகர் திருவுருவங்களும், கருவறை நுழைவாயிலில் விநாயகர் - முருகன் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையில் கருணை வடிவமான அம்பிகை நின்ற கோலத்தில் வலது கரத்தில் மலரை ஏந்தியும், இடக்கரத்தை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருகிறாள். வலது தோளில் பச்சைக் கிளி அமர்ந்துள்ளது. நாயக்கர் காலத்து சிற்ப அமைப்பை ஒட்டி, கிரீட அலங்காரம் இடதுபக்கம் கொண்டையிடப்பட்ட நிலையில் உள்ளது. கருவறைக் கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சத்திகள் எழுந்தருளியுள்ளனர். வடபுறம் சண்டிகேஸ்வரி வீற்றிருக்கிறாள். கருவறையின் தென் பகுதியிலுள்ள இரட்டை விநாயகர், தென் மேற்கிலுள்ள ஐராவத, வல்லப நிருத்த விநாயகர்கள் இவர்களை வழிபட்டு முத்துக் குமார சுவாமி சந்நதிக்கு வருகிறோம்.
 
‘‘முத்து நவரத்னமணி ’’ எனத்துவங்கும்
அழகிய திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
‘‘முத்து நவ ரத்நமணி பத்திநிறை சத்தி
இடமொய்த்த கிரி முத்திதரு என ஓதும்
முக்கண் இறை வர்க்குமருள் வைத்த
முருகக்கடவுள் முப்பதுமு
வர்க்கசுரர் அடிபேணி.

பத்துமுடி தத்தும் வகை உற்றகணை
விட்ட அரிபற்குனனை வெற்றி பெற  ரதமூரும்
பச்சைநிற முற்றபுயல் அச்சமற வைத்த
பொருள் பத்தர்மன துற்ற சிவம் அருள்வாயே
 
பொருள் :
‘‘முத்தும், நவரத்ன மணிகளும் வரிசையாக அணியப் பெற்ற பராசக்தி மாதாவை இடது பாகத்தில் நெருக்கமாக அணைத்துள்ள மலை போன்ற சிவபெருமான், அடியாருக்கு மோட்சம் எனும் கனியைக் கொடுக்கும் விருட்சமே என்று சிறப்பிக்க முக்கண்ணருக்கு உபதேசம் செய்து அருட்பாலித்த கடவுளே !’’ [ இவ்வடிகளுக்கு மற்றுமொரு பொருளும் அமைந்திருக்கிறது ’’ முத்து, நவரத்தினங்களாலான மாலைகளை வரிசையாக அணிந்திருக்கும் கிரியா சக்தியாகிய தெய்வயானையை இடப்பாகத்தில் விளக்கமுற வைத்திருக்கும். கருணை மலையே ! முத்திக் கனியைக் கொடுக்கும் கற்பக விருட்சமே !  என்று போற்றிப் பணிந்த சிவனுக்கு உபதேசித்தவனே !]

முப்பத்து மூன்று பிரிவுள்ள தேவர்கள், தம் திருவடியைப் போற்றி விரும்ப, ராவணனின் பத்து சிரங்களும் சிதறி விழும்படி தமது அம்பைச் செலுத்திய வரும், போரில் அர்ஜூனன் வெற்றி அடையும்படி. அவனது தேரைச் சாரதியாக அமர்ந்து செலுத்திய பச்சை நிறம் பொருந்திய கருணைமேகம் ஆகிய வரும் ஆன திருமால் சூரபத்மாதியரிடம் வைத்திருந்த பயம் நீங்குமாறு செய்த பரம் பொருளே. பக்தர்கள் மனதில் பொருந்தி விளங்கும். சிவமே (மங்கலப் பொருளே !) அருள்வாயாக.
 
முப்பத்து முவர்க்க சுரர்
 
[ முப்பத்து மூன்று பிரிவுடைத் தேவர்கள் ] - இதை  ‘‘எதிரொருவர்’’ எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரியார் இவ்வாறு
விளக்குகிறார்.
 
‘‘முதிய பதினொரு விடையர் முடுகிவன பரிககன முட்டச் செலுத்தாறிரண்டு தேரர்
நொழியுமிரு அசுவினிகள் இரு சது விதவசுவெனு முப்பத்து முத்தேவர் தம்பிரானே ’’
 
‘‘ஏகாதச ருத்திரர்கள் = 11
ஆதித்யர்கள் = 12
தேவ வைத்தியர்கள் = 2
வசுக்கள் எனும் பிரம்ம
புத்திரர்கள் =  8
 
மொத்தம் = 33 ’’]
 
‘‘முத்து நவ ’’ பாடலின் பிற்பகுதியைக்
காண்போம்.
‘‘தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்த்ததென தெனனான
திக்குவென மத்தளம் இடக்கை துடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை என ஆடும்
அத்தனுட னொத்தநட நி த்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் புரிபாலா
அற்பஇடை தற்பமது முற்றுநிலை பெற்றுவளர்
அல் கனகபத்மபுரி பெருமாளே ’’

பொருள் :
 ‘‘தித்தி மிதி. . .  .  திக்குவென மத்தளம், தம்பட்டம், உடுக்கை இவை ஒலிக்க, தத்ததகு . . . . .  செச்சரிகை என்று ஆடும் சிவபெருமானுக்கு இணையாக நடனம் ஆடுபவர், [‘பம்பரமே போல ஆடிய சங்கரி’’ செந்தூர்த் திருப்புகழ்] மூவுலகிற்கும் தலைவி, புதிது புதிதாகச் சித்திகளைத் தமது அடியார்களுக்கு அருள்பவள் ஆகிய சக்தி ஈன்றருளிய குழந்தையே !

நுண்ணிய இடை மாதர்கள் மெத்தை வீடுகளிலெல்லாம் நிலையாக வாழ்ந்தோங்குகின்றதும் மதில்கள் சூழ்ந்துள்ளதும், பொற்றாமரைக் குளம் விளங்கும் பட்டணமும் [ கனக பத்ம புரி] ஆகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே !’’

அம்மன் சந்நதியை விட்டு வெளியே வந்து நடுக்கட்டு கோபுரம் எனும் கோபுர வாயிலருகில் சுமார் 8-அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகரைத் தரிசிக்கிறோம். தெப்பக் குளத்தில் கிடைத்ததாகக் கூறப்படும் இவரை ‘ஆண்ட விநாயகர்’ என்றும் அழைப்பர். சுவாமி சந்நதியின் இரண்டாம் பிராகாரம் இது, ‘ஆனை முகவற்கு’ என்று துவங்கும் திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
 
‘‘ஆனை முகவற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்தக அமரேசா
ஆதி அரனுக்கும் வேதமுதல்வற்கும்
ஆரணம் உரைத்த குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுந்த திறல்வீரா
தாளிணைகளுற்று மேவிய பதத்தில்
வாழ்வொடு சிறக்க அருள்வாயே’’
 
 ‘‘யானை முகம் கொண்ட விநாயகருக்கு நேர் பின் தோன்றிய இளையவனே ! ஆறுமுக வித்தகனே ! அமராவதிக்கு அதிபதியே ! உயிர்களை இளைப்பாற்றும் முதல்வரான ருத்திரருக்கும் நான்  மறை ஓதும் முதல்வரான பிரம்மனுக்கும் வேத ரகசியத்தை உரைத்த குருமூர்த்தியே !
அவுணர் குலத்தை வாள் கொண்டு வெட்டி அழித்த சாமர்த்தியமும் பராக்ரமும் நிறைந்த வீரனே ! அரிய உமது இரு திருவடிகளை அடைந்து பொருந்துவதாகிய பதவியில் நல்லவாழ்வுடன் நான் சிறப்படைய அருள் புரிவீராக!’’
    
‘‘வானெழு புவிக்கும் மாலும் அயனுக்கும்
யாவரொருவர்க்கும் அறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைகளிக்க
மாமயில் நடத்து முருகோனே !
தேனெழு புனத்தில் மான்விழி குறித்தி
சேர  மருவுற்ற திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல் கொடு தணித்த பெருமாளே !’’
 
பொருள் :
ஆதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம் ஆகிய கீழேழ் உலகங்கள், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனோ லோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம் ஆகிய மேலேழ் உலகங்கள் இவற்றில் உறைபவர்க்கும், திருமால் - பிரம்மனுக்கும், மற்ற எவர்க்கும் அறிய முடியாத, சிறந்த மதுரைத் தலத்து சொக்கநாதரும், மாது பார்வதியும் மகிழ்வுறும்படி சிறந்த மயிலை ஊர்தியாக்கிச் செலுத்தும் முருகோனே! தேன் பெருகும் வள்ளிமலைத் தினைப்புனத்தில் மான் போல் மருளும் கண்களை உடைய குறப்பெண்ணாம் வள்ளியைத்
தழுவிமணந்த திரண்ட தோள்களை உடையவனே! வானவர் மனத்தில் மேன்மேலும் வளர்ந்த அச்சத்தை, தனிப்பெரும் ஞான சக்தியாம் வேலைக் கொண்டு நீக்கிய பெருமை உடையவனே !

முக்குறுணியாரை வணங்கி, பஞ்சலிங்கங்களையும், 49 சங்கப் புலவர்களையும் தரிசிக்கிறோம். மதுரையில் சரஸ்வதி தேவியின் கூறா
க உள்ள 48 எழுத்துக்களும் பிரம்ம தேவரின் கட்டளைப்படி தமிழிலே தலைமைப் புலவர்களாய் மதுரையில் பிறந்தன. இப்புலவர்கள் பாண்டியானது சபையிலிருந்த புலவர்களை வென்று பாண்டியனுடைய ஆதரவில் மதுரைத் திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில்
சங்க மண்டபத்தில் வீற்றிருந்தனர். இவர்களது வேண்டு கோளின்படி சோமசுந்தரக் கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப் பலகையைத்
தந்தருளினார். அது ஒரு முழச் சதுரம் உடையது. உண்மைப் புலவர்கள் இருப்பதற்கு மட்டும் ஒரு முழம் வளர்ந்து இடம் தரும். சிவபெருமான் 49 ஆவது புலவராக இதில் வீற்றிருந்தார்.

சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதின் மரை ‘‘ஏழேழு பேர்கள்’’ என்று குறிப்பிட்டுப்பாடுகிறார் அருணகிரியார். இறைவன் அறுபது சூத்திரங்கள் கொண்ட இலக்கண நூலொன்றைத் தாமே எழுதியளித்தார். இந்நூலுக்கு புலவர்கள் 48 பேர்களும் உரையெழுதி, தத்தம் நூலே சிறந்தது என வாதிட்டனர். நாற்பத்தொன்பதாம் புலவராக வீற்றிருந்த சிவபெருமான்,  ‘‘ இவ்வூரில் செட்டி குலத்தில் ஊமைக் குழந்தையாகப் பிறந்து வளரும் உருத்திர ஜென்மரை அழைத்து வந்து உங்கள் உரையை அரங்கேற்றுங்கள்; எவருடைய உரையைக் கேட்டால் அவரது உடலில் புளகிதமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் தோன்றுகின்றனவோ அவர் உரையே சிறந்ததாகும்’’ என்று கூறி மறைந்தார். சங்கப்பலகையில் வீற்றிருந்து, ருத்திர ஜென்மராக வந்த முருகப்பெருமான், கீரன், கபிலன், பரணன் இவர்களது உரைகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தார்; கண்ணீர் பெருக்கினார். புலமை தூக்கி அளப்பதாய் இருந்த காரணத்தினால் அருணகிரிநாதர் இப்பலகையை ‘அரிய சாரதா பீடம்’ என்று குறிப்பிட்டுப்பாடுகிறார். ‘ஊமை தமிழாய்ந்த திருவிளையாடல்’ எனும் இந்நிகழ்ச்சியை,

‘‘ஏழேழு பேர்கள் கூறவரு பொருளதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வர தர குருநாதர் ’’ என்றும்
‘‘அநக வாமனாகார முநி வராக மால் தேட
அரிய தாதை தானேவ மதுரேசன்
அரிய சாரதா பீடம் அதனிலேறி ஈடேற
அகில நாலும் ஆராயும் இளையோனே ’’
என்றும் பாடியுள்ளார் அருணகிரிநாதர். ‘‘பழுத்த முது தமிழ்ப்பலகை’’ என்பார் வேல் வகுப்பில்!

அடுத்ததாக வலப்புறம் உள்ள கல்யாண சுந்தரரைத் தரிசிக்கிறோம். மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் கல்யாணக் கோலத்தில் நிற்கும் கருவறையும், அதை ஒட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவையும் விளங்குகின்றன. திருமால் மீனாட்சியின் அருகில் நின்று மண மக்களது இணைந்த கைகளில் புனித நீர் ஊற்றும் காட்சியும் பிரம்மன் திருமண வேள்வி நிகழ்த்து வதும் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

சித்ரா மூர்த்தி

Tags : devotee ,
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்