×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: வாலி

இதுவரை... வாலியின் பிறப்பிற்கான காரணம்; பலம்; வாலிக்கும் ராவணனுக்கும் இடையேயான தொடர்பு; வாலி, துந்துபி-மாயாவி என்பவர்களை வதம் செய்தது; தவறாக எண்ணி வாலி, சுக்ரீவனை நன்கு அடித்து விரட்டியது; ராமர்- சுக்ரீவ நட்பு; சுக்ரீவன் வாலியைப் போருக்கு அழைத்தது;வாலி சுக்ரீவனுடன் போருக்குப் புறப்பட்டபோது, வாலியின் மனைவி தாரை, வாலியைத்தடுத்தது; ராம-சுக்ரீவ நட்பைச் சொல்லி, சுக்ரீவனுடன் போருக்குப் போக வேண்டாம் எனச் சொல்லி வாலியைத்தடுத்தது-என்பது வரை பார்த்தோம்.

இனி...
வாலிக்குக் கோபம் தாங்கவில்லை; ராமரைப்பற்றித் தவறாகச் சொல்கிறாள் தாரை என்று நினைத்த வாலி, “ நீ பெண்ணாக இருப்பதால், இவ்வாறு தவறாகச் சொல்லி விட்டாய்!” என்றான். வாலி கேள்விப்பட்டது வரை, ‘ராமர் தர்மாத்மா.அப்படிப்பட்ட தர்மாத்மா விஷயத்தில், சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு ராமர், என்னைக்கொல்ல வருவதாகவே தவறாக நினைத்து விட்டாள் தாரை’என்று எண்ணிய வாலி, தன் உள்ளத்தில் இருந்ததைத் தாரையிடம் சொல்லவும் செய்தான்.

“சுக்ரீவனுடன் சேர்ந்துகொண்டு, ராமர் என்னைக் கொல்வது, அவருக்குப் பெருமையா என்ன? அதனால் ராமருக்கு என்ன பலன்? தர்மம் எங்காவது தற்கொலை செய்து கொள்ளுமா? இரு சகோதரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடும்போது, அதில் ஒருவனுக்கு உதவியாக நின்று, அடுத்தவனைக் கொல்வது அதர்மமல்லவா?”எனக் கேட்டான் வாலி.

கணவர் சொல்வதைப் பொறுமையாகக்கேட்டுக் கொண்டிருந்தாள் தாரை.அதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட வாலி மேலும் பேசத் தொடங்கினான்; “தந்தை ஆண்ட ராஜ்ஜியம் முழுதும் தனக்குக் கிடைத்தும், மாற்றாந்தாய்(கைகேயி) மகனுக்கு(பரதனுக்கு)மகிழ்ச்சியோடு கொடுத்த ராமரைப் பாராட்டாமல், இப்படிப் பேசுகிறாயே! உலகம் முழுதும் ஒன்றாகக்கூடி எதிர்த்தாலும், ராமருக்குப்போய், துணை வேண்டுமா என்ன? அவர் கையில் இருக்கும் வில் போதாதா?

“அற்ப வானரனான சுக்ரீவனைப் போய் நட்பு கொள்வாரா? தம்பிகளைத்தவிர, இந்த உலகத்தில் தனக்கு வேறு உயிர் இல்லை என, தம்பிகளைத் தன் உயிராகக் கருதிய ராமர், நானும் என் தம்பியும் போரிடும்போது இடையே குறுக்கிட்டு அம்பைப் போடுவாரா? ராமர் அருள் கடலல்லவா?” என்றான் வாலி.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரில் இலதென எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்
(கம்ப ராமாயணம்)

ஒரு தம்பிக்கு ராஜ்யத்தைக்கொடுத்த ராமர்; மற்றொரு தம்பிக்கு,தன்னுடன் கூட இருந்து பணிவிடை செய்யும் பாக்கியத்தைக்கொடுத்த ராமர்; கங்கைக்கரையில் தான் தம்பியாக சுவீகரித்துக்கொண்ட குகன் எனும் தம்பி–்க்கு, தன் னையே கொடுத்த ராமர்; இப்படிப்பட்ட கருணைக்கடலானராமர், தற்போது தம்பியாக ஏற்றுக்கொண்ட சுக்ரீவனுக்குப் பேருதவி செய்வார் என்பதை வாலி அறியவில்லை.

தாரை பதில்பேச வில்லை. அவளுக்கு மேலும் தைரியத்தையும் நம்பி–்க்கையையும் ஊட்டுவதற்காக வாலி, தன் பேச்சைத் தொடர்ந்தான்; “கொஞ்ச நேரம் நீ,இங்கேயே இரு!கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, அந்த சுக்ரீவனைக் கொன்று, (நீ சொல்வதுபோல யாராவது உதவிக்கு வந்திருந்தால்)அவர்களின் எண்ணத்தையும் அழித்துத் திரும்புவேன்.கவலைப்படாதே நீ!” என்றான் வாலி.

“இருத்தி நீ இறை இவண் ; இமைப்பில்
காலையில் உருத்தவன் உயிர்குடித்து, உடன்
வந்தாரையும் கருத்தழித்து எய்துவென்;
கலங்கல்” என்றனன்; விரைக்குழல்
பின் உரை விளம்ப அஞ்சினாள்
(கம்ப ராமாயணம்)

கணவரின் முடிவு தெரிந்து விட்டது; வாய்பேச அஞ்சினாள் தாரை.ஆம்! கணவரின் முடிவும்-வாழ்நாள் முடியப் போகிறது என்பது தாரைக்குத் தெரிந்து விட்டது; பயந்தாள்; வாயை மூடிக் கொண்டாள். தாரையை அப்படியே விட்டு வெளியேறினான் வாலி.போர்வெறி கொண்டு வெளியேறிய வாலி, கிஷ்கிந்தை மலையில் ஒரு பக்கமாக வர, சுக்ரீவன் முதலானோர் மேற்குப்பக்கமாக நின்றிருந்தார்கள்; வாலி கிழக்குப் பக்கமாக வந்து தோன்றினான். அப்படி வந்து தோன்றிய வாலியைக் கண்டு, ராமர் வியக்கிறார்; தான் வியந்ததை லட்சுமணனுக்கும் காட்டுகிறார்; அதை நமக்கும் காட்டுகிறார் கம்பர்.

“எவ்வேலை, எம்மேரு, எக்காலொடு
எக்கால வெந்தீ வெவ்வேறு உலகத்து
இவன் மேனியை மாலும்”என்றான்
(கம்ப ராமாயணம்)

“எந்தக் கடலை, எந்த மலையை, எந்தக் கடுங்காற்றுடன் கூடிய காலாக்கினியைத்தான், வாலியின் இந்தத் தோற்றத் திற்கு ஒப்பிட முடியும்?” என்பது ராமரின் கருத்து.போர் தொடங்கி விட்டது; வாலியும் சுக்ரீவனும் ஒருவரை ஒருவர் தாக்கிப் போர்செய்யத் தொடங்கினார்கள்.
இடி இடிப்பதைப் போல, ஓசை எழுந்தது. சுக்ரீவனும் சாதாரணமாகத் தாக்க வில்லை; கடுமையாகவே தாக்கினான். அந்தத் தாக்குதலால், வாலிக்குப் பாதிப்பு உண்டாகவே செய்தது. எப்படி?

ராமர் துணையிருக்கிறாரல்லவா?அந்த நம்பிக்கைதான்! ஆனால் நேரம் ஆகஆக, வாலியின் கடுந்தாக்குதலை சுக்ரீவனால் சமாளிக்க முடியவில்லை. உடலோடு உள்ளமும் குலைந்துபோன சுக்ரீவன், உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில்,போர்க்களத்தில் இருந்து பின்வாங்கி ஓடி, ராம- லட்சுமணர்கள் இருந்த இடம் நோக்கி ஓடினான்.

ஓடிய சுக்ரீவன், எதிர்பார்த்த உதவி கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தோடு ராமரை வணங்கினான்; “சுக்ரீவா! மனம்கலங்காதே!உங்கள் இருவருக்கும் வேற்றுமை தெரியவில்லை. அடையாளத்திற்காக, கொடிப்பூ மாலை ஒன்றை அணிந்து, மறுபடியும் சென்று போர் செய்!” என்றார் ராமர்.
அதை ஏற்ற சுக்ரீவன், அதன்படியே கொடிப்பூ மாலை அணிந்து, நம்பிக்கையும் ஊக்கமும் புதுப்பிக்கப்பட்டு, மறு படியும் போய்த் துணிவோடு ஆர்ப்பாட்டம் செய்தவாறே, வாலியைத் தாக்கத் தொடங்கினான்.அவனுடைய துணிவும் நம்பிக்கையும், வாலியை ஒருகணம் அச்சத்தில் ஆழ்த்தவே செய்தன.

அதற்குள் மாலையும் கழுத்துமாக வந்த சுக்ரீவன் கடுமையாகத் தாக்கினான் வாலியை.” என்ன இது? கனவு காண்கிறோமா நாம்?”என்று வாலி திகைக்க,சுக்ரீவன் மறுபடியும் இடிபோல் தாக்கினான்.வாலி நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொள்வதற்குள், சுக்ரீவனின் குத்துகள் ‘மளமள’ வென விழுந்தன.சுக்ரீவனின் இந்த ஆர்ப்பாட்டத்தையும் தாக்குதலையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் கம்பர்.

தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தன போல வயங்கு சென்னியன் வயப்புலி வானவன் ஏற்றோடு உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடுதிறல் வாலி பயங்கொளப் புடைத்து எற்றினன் குத்தினன் பலகால்
(கம்ப ராமாயணம்)

இப்பாடலை அப்படியே வாய்விட்டுப் படித்தால், சுக்ரீவனின் ஆர்ப்பாட்டமும் அவன் வாலியை அச்சப்படுத்தியதும் பல முறைகள் குத்தியதும்;அப்படியே ஒரு நேர்முக ஒலி பரப்பாகவே தெரியும். வாலியின் மனம் ஆழமாக வேலை செய்தது; “பயந்து ஓடிப்போய் விட்டான் என்று நினைத்தால், வந்து போருக்கு அழைக்கிறான்; நன்கு அடித்து அனுப்பினால்,போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடே என்பதைப்போல, மலர் மாலையுடன் வருகிறான்;பயங்கரமாகத் தாக்குகிறான்! ம்!..மாண்டவன் மீண்டதுபோல், இவன் மீண்டுவந்த ரகசியம் என்ன? இதில் ஏதோ சூது இருக்கிறது; அபாயம் இருக்கிறது; தாரை எச்சரிக்கை செய்தாளே! அப்படியும் இருக்குமோ?” என்றெல்லாம் பலவாறாக எண்ணினான் வாலி.

வாலி தலைசிறந்த அறிவாளி தான்.மனைவி தடுத்துச் சொல்லியும்,அதையும் மீறி சுக்ரீவனுடன் போரிட்டு, மலர் மாலையுடன் மீண்டும் வந்த சுக்ரீவ தாக்குதல்களை அனுப வித்து ஓரளவிற்காவது விவரங்களை நன்றாகவே அறிந்திருந்தும்; வாலி தப்பியிருக்கக் கூடாதா? இறந்தது ஏன்?
வாலியின் எல்லையில்லாத பலம்; பெற்ற வரங்கள்;அவற்றின் பலனாகத் தானாகவே கிளர்ந்தெழுந்த ஆணவம்; தலைமைப்பதவி; எனப் பலவும் வாலியின் முடிவிற்குக்காரணங்கள்! இதற்கும் மேலாக, மலர் மாலையுடன் மறுபடியும் போருக்கு வந்த சுக்ரீவனின் தாக்குதல்களுக்கான காரணத்தை ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும், அவனை செயல்பட விடாமல் தடுத்தது, அவனது ஆத்திரமும் கோபமும்.

எவ்...வளவு பெரீ...ய்ய ஆளாக இருந்தாலும் சரி; சூழ்நிலை-சந்தர்ப்பங்களை உணர்ந்திருந்தாலும் சரி; செயல்பட விடாமல், அவர்களைத் தடுப்பது- கோபம்- ஆத்திரம், அவச ரம் ஆகியவையே. வாலி மட்டும் விதி விலக்கா என்ன?

தோன்றிய சந்தேகங்களை எல்லாம் அறிவுத்தெளிவுடன் ஆராய்ச்சிசெய்ய நேரமில்லை;அடிக்கு அடி;உதைக்கு உதை. பயங்கரமாகச் சிரித்த வாலி, சுக்ரீவனைக் கடுமையாகத் தாக்கினான்; “இவனை இப்போதே தூக்கித் தரையில் மோதி, இவனை ஒழித்துவிட வேண்டியதுதான்.இனிமேல் இவனை விட்டு வைக்கக்கூடாது”என்று எண்ணிய வாலி, சுக்ரீவனை அப்படியே தலைக்குமேல் தூக்கினான்.

நடுங்கிய சுக்ரீவன், ராமர் இருந்த திசையைப் பார்க்க, ராமர் அம்பை ஏவினார்; ஏவிய அம்பு வாழைப்பழத்தில் ஊசி நுழைவதைப் போல,வாலியின் மார்பில் நுழைந்தது. சுக்ரீவனைத் தூக்கித் தரையில் வீசப்போன வாலி, அப்படியே தரையில் சாய்ந்தான்.வாலி வீழ்ந்ததும் நடைபெற்ற செயல்களில் முக்கியமானவை ஒரு சில;மார்பில் தைத்த அம்பை,அது தன் உடம்பைத்துளைத்து வெளியே போகும்முன்,வலிமை உடைய தன் கரத்தால் பிடித்த வாலி,வாலாலும்காலாலும் பிடித்துத்தடுத்தான். அதைக் கண்ட யமனும் வியந்து தலையசைத்து ‘சபாஷ்’ போடுகிறானாம்.

வெற்றி வீரனது அடுகணை அவன் மிடல்
உரத்தூடு உற்றது அப்புறத்து உறாதமுன்
உறுவலிக் கரத்தால் பற்றி வாலினும்
காலினும் பிணித்து அகப்படுத்தான் கொற்ற
வெங்கொடு மறலியும் சிரதலம் குலைந்தான்
(கம்ப ராமாயணம்)

துள்ளித்துடித்து விழுந்த வாலி, “நான் இந்தக் கொடும் அம்பை, இப்படிப்பிடித்த பின்னும் இது மேன்மேலும் நெஞ்சில் இப்படி அழுத்துகிறதே! இதை ஏவியவன் யார்?” என்று சுற்றுமுற்றும் பார்க்கிறான்; “யார் இப்படிச்செய்தது? தேவர்களா? அவர்களுக்கு இந்த ஆற்றல் கிடையாதே! மும்மூர்த்திகளுக்கும் ஒப்பான ஒருவன்தான், இதைச் செய்திருக்க வேண்டும்.மும்மூர்த்திகளின் ஆயுதம்கூட, என் மார்பைத் துளைக்காதே!” என்று பலவிதமாக எண்ணிய வாலி, தன் மார்பில் பதிந்திருந்த அம்பைப் பிடுங்கிப் பார்த்தான்.தேவர்கள் வியந்தார்கள். சுக்ரீவன் தன் அண்ணனான வாலியின் வீழ்ச்சிகண்டு, சகோதர பாசத்தால் கண்களில் நீர் வழிய, அப்படியே நிலைகுலைந்து போனான். வாலியோ, பிடுங்கிய அம்பைப் பார்த்தான்.

மும்மைசால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களில் தெரியக்கண்டான்
(கம்ப ராமாயணம்)

மூல மந்திரம், பிறவி நோய்க்குப் பெரும் மருந்து எனப் பல விதமான தகுதிகளும் நிறைந்த’ராம’எனும் இரண்டு எழுத்துக்கள்,அம்பில் இருந்தன.அதைப் பார்த்ததும் வாலி, இகழ்ந்தான்.“மனைவியுடன் வீட்டிலிருந்தபடி அறம்செய்து வாழும், இல்லற வாழ்வைத்துறந்து காடு புகுந்தவன்; ஆடவரில் சிறந்தவன்? இப்போது சத்திரிய தர்மமான வில் அறத்தையும் துறந்து விட்டான். இவன் பிறந்ததால், வேத நூல்களில் சொல்லப்பட்ட தர்மங்களைப் பரம்பரையாகக் கடைபிடித்து வரும் சூரிய குலம்கூட, இப்போது தங்கள் நல்லறத்தைத் துறந்து விட்டதே!”என்ற வாலி,சிரித்தான்; வெட்கப் பட்டான்.

 இவ்வாறெல்லாம் பலவிதமாக நினைக்கும் வாலியின் முன்னால், ராமர் வந்தார். பிறவி நோய்க்கே பெரும் மருந்தான ராம நாமத்தைக்கண்ணால் கண்டும்; வசீகரிக்கும் திருமேனி கொண்ட ராமர் எதிரே வந்தும்; அவை எதுவுமே வாலியைத் துளிகூட வசீகரிக்க வில்லை; மனப்புண்ணுக்கு மருந்தாகவும் இல்லை. காரணம்? வாலியைப் பொறுத்தவரை அவன் ராமரை, உயரத்தில்-மிகமிக உயரத்தில் வைத்திருந்தான்.

“சத்தியத்திற்காக உயிர்கொடுத்த தசரதனின் பிள்ளையா இவன்? தாயான கைகேயிகொடுத்த ராஜ்ஜியத்தைத் தூசி போலத்துறந்து, ‘பாதுகா பட்டாபிஷேகம்’ நடத்தித் துறவி போல வாழும் பரதனுக்கு,அண்ணனா இவன்?” என்று தோன்றுகிறது வாலிக்கு; நேரில் நிற்கும் ராமரிடம் அதைக் கேட்கவும் செய்தான்.

வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த
வள்ளல் தூயவன் மைந்தனே நீ! பரதன்
முன் தோன்றினாயே!
(கம்ப ராமாயணம்)

 “மூன்று உலகங்களுக்கும் தலைவன் நீ! அனைவரை யும் வாழ வைக்கும் சூரியகுலத்தில் உதித்தவன்! வசிஷ்டரிடம் கல்விகற்ற உத்தமன்! அப்படிப்பட்ட நீ, அனைத்தையும் மறந்து விட்டாயா?”“அரக்கர்கள் தவறுசெய்தால், அதற்காகக் குரங்குகளின் அரசனைக் கொல் என்று, மனு நீதி கூறி உள்ளதா? ராமா! இரக்கம் இல்லையா உனக்கு? என்னிடம் என்ன பிழை கண்டாய்?
 
அரக்கர் ஓர் அழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர்குரக்கினத்து அரசைக்கொல்ல மனு நெறி கூறிற்றுண்டோ?

 இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
எப்பிழை கண்டாய் - அப்பா?
 (கம்ப ராமாயணம்)

அத்துடன் நிறுத்தவில்லை வாலி. ராமாயணம் நடந்த காலம் ‘திரேதாயுகம்’.ஆனால் ராமரோ,அந்த யுகத்திலேயே கலியுகத்தைக் கொண்டு வந்து விட்டாராம்.

ஒலிகடல் உலகம் தன்னில்
ஊர்தரு குரங்கின் மாடே
கலியது காலம் வந்து
பரந்ததோ? கருணை வள்ளால்!
மெலியவர் பாலதேயோ
ஒழுக்கமும் விழுப்பம் தானும்
வலியவர் மெலிவு செய்தால்
புகழ் அன்றி வசையும் உண்டோ?
(கம்ப ராமாயணம்)

“குரங்குகளுக்குக் கலி(கெட்ட)காலம் வந்து விட்டதோ? ஒழுக்கமும் நற்குணங்களும் எளியவர்களுக்கு மட்டும் தானா? வலியவர்கள் இழிவான செயல்களைச்செய்யலாம்; அதுவும் அவர்களுக்குப் புகழ்தான்... அப்படித்தானே?” இவ்வாறு பரிகாசம் செய்வதைப்போல, ராமரிடம் கேட்ட வாலி,மேலும் கேட்கிறான். ராமரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகத் தெரியும் போலிருக்கிறது வாலி்க்கு.

“ராமா! நீ தன்னந்தனியனாகவே நின்று அனைத்தையும் செய்து முடிப்பாய்! அப்படிப்பட்ட உனக்குப்போய்க் கூட்டு - துணை வேண்டுமா? பெற்ற தந்தை தந்த அரச செல்வத்தை அங்கே அயோத்தியில், தம்பிக்குக் கொடுத்தாய்; காடுவந்து, இங்கே என் தம்பி சுக்ரீவனுக்கு , இந்த அரசைத்தந்து காட்டிலும் ஒரு செயல் செய்தாய்; இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?” எனக் கேட்கிறான் வாலி.
பரிகாசத்தின் உச்சம் இது. இதை அப்படியே பதிவு செய்கிறார் கம்பர்

கூட்டு ஒருவரையும் வேண்டாக்
கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே
தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமம் செய்தாய்;
எம்பிக்கு இவ்வரசை நல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய்!
கருமம் தான் இதன்மேல் உண்டோ?
(கம்ப ராமாயணம்)

வாலியின் கேள்விகள், மேலும் தொடர்கின்றன. இதுவரை பார்த்தவற்றைவிட, அவை மேலும் பொருள் பொதிந்தவையாகத் தோன்றலாம். ஆனால், அவை அடித்தளம் - அஸ்திவாரம் இல்லாதவை? எப்படி?

(தொடரும்)

Tags : characters ,Wally ,
× RELATED காரணம் கேட்டு வா