×

பக்தர்களைக் காப்பாள் பச்சையம்மன்

வீரமாபுரி எனும் நகரத்தை நெருங்கும்போது காற்று சுழன்று வீசியதால் தரையிலிருந்த மண் வானில் எழுந்தன. அப்படியே அந்த நகரத்தை அடைத்தன. நகரம் இருள வீரமாபுரி மன்னன் சூரகோமன் வெகுண்டெழுந்தான். ‘யார் படையெடுத்து வருவது? எதிரியை சிதறடித்துவிட்டு வாருங்கள்’ என்றான். பச்சைநாயகி நகரத்தின் வாயிலில் நின்றாள். நகரத்தை சூழ்ந்த புழுதிக் காற்று இப்போது அம்மையின் எளிமை கண்டு தாழ்ந்து பணிந்தது. அடங்கி நின்ற மணற்புழுதிகள் வானம் நோக்கி எழுந்தன. மேல்ல பூமி அதிர்ந்தது.

பச்சைமா மலைபோல் மேனியனான தன் அண்ணன் திருமாலை வேண்டித் துதித்தாள். ஹரி, சப்த ரிஷிகளையும் பச்சையம்மனைக் காக்குமாறு ஆணையிட்டான். நெருங்கி வந்த சூரகோமன் எதிரில் யாரும் எதிர்பாராவிதமாக சிருங்காரமாக இருந்தவள் சீறிவரும் சிம்மமாக, பத்ரகாளியாக வடிவெடுத்தாள் பராசக்தி. அந்த கணமே சப்தரிஷிகள் புது உருவம் பெற்றனர். அகத்தியர் வாழ்முனியாக, வசிஷ்டர் செம்முனியாக, நாரதர் வேதமுனியாக, வியாசர் முத்துமுனியாக, வியாக்கமர் லாடமுனியாக, பராசரர் ஜடாமுனியாக, விஸ்வாமித்திரர் கரிமுனியாக, மாவீரர்களாக மாறினர். பஞ்சாட்சரத்தை ஜபிக்க, பத்ரகாளி கனலாகச் சிவந்தாள். அவளின் கர்ஜனையில் அசுரனின் வீரர்கள் வெடித்துச் சிதறினர். மாவீரர்களாக தோன்றிய முனிகள் அரக்கர்களை கொன்று குவித்தனர்.

சூரகோமனின் மீது சூலத்தைப் பாய்ச்சினாள் பத்ரகாளி. மீண்டும் அவ்விடத்தை அமைதி சூழ பத்ரகாளி பச்சையம்மையாக, அமைதியாகக் குளிர்ந்தாள். அந்த முல்லைவனத்தின் வாயிலை அடைந்தாள். பச்சையம்மன் அதிதீவிர தவத்தின் சாயலையுற்றாள். தேவதாரு எனும் வன்னிமரத்தடியில் அமர்ந்து மன்னாதி ஈசனை பூஜித்தாள். இந்தக் கோயில் மிகத் தொன்மையானது.  கோயிலின் இடப்பக்கமாக நுழைந்து துர்க்கைக்கு அருகேயே மூலவரைப்போலவே அழகுள்ள பச்சையம்மனின் சிலையைப் பார்க்கும்போதே மூலவரைப் பார்க்கும் ஆவல் இன்னும் கூடுகிறது. நாகர் சிலைகளும் மஞ்சளும், குங்குமமும், மண்ணும் அந்த இடத்தை சில்லிட வைக்கின்றன. பிரார்த்தனையாக தொட்டில்களை தொங்கவிட்டுள்ளனர்.

பச்சையம்மனும் தன் இல்லம்போல அவர்கள் இல்லத்திலும் தொட்டில் பூட்டுகிறாள். இன்னும், சற்று வலமாக நகர பிரமாண்ட சுதை சிலைகளில் சப்தரிஷிகளும் முனிகளாக மாவீரர்களாக தமது வாகனங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வேறெங்கும் காணமுடியாத அபூர்வ காட்சி இது. அதற்கு அருகேயே மன்னாதி ஈஸ்வரன் தனிச் சந்நதியில் அருள் பாலிக்கிறார். பச்சைநாயகி பூசித்த திருக்கோலம் அது. அங்கிருந்து கருவறைநோக்கி நகருகிறோம். சர்ப்பக் குடையின் கீழ் கங்கையம்மனுக்கும், வேங்கையம்மனுக்கும் நடுவில் பச்சைமாதேவி பேரழகுடன், கம்பீரமாக, என்றும் மாறாத புன்முறுவலும் வருவோரை பேரன்புடன் அழைப்பதுபோல தோற்றமளிக்கிறாள். அவளுக்கு நேராக கைகளில் லிங்கத்தை ஏந்தியபடி கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

பச்சையம்மன் இங்கு தனி தர்பாரில் அமர்ந்து அகிலத்தையே தன்  பக்தர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அழைப்பதுபோல ‘பச்சைம்மா.. .பச்சைம்மா..’ என்று கூப்பிடும்போது ஓடி வந்து அணைத்துக் கொள்கிறாள்.  திருமணம், குழந்தைப்பேறு, வேலை என்று ஆயிரக்கணக்கான மக்கள் இவளிடம் வேண்டி நிற்கின்றனர். பாத்திரம் பார்க்காமல் அலுக்காமல், தன் அட்சய பாத்திரத்திலிருந்து அருட்பிச்சை இடுகிறாள் அன்னை. உடல் நோய்களிலிருந்தும் மன நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறாள் அன்னை. சென்னை, அம்பத்தூர்-ஆவடி பேருந்து பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags : Pachyyamman ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...