×

‘எம்பிஸிமா’ நோய் பாதித்த ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லிஞ்ச் மரணம்

நியூயார்க்: ‘எம்பிஸிமா’ நோய் பாதித்த ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லிஞ்ச் மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லிஞ்ச் (79), சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு ‘எம்பிஸிமா’ எனும் நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் மேலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அவர் தனது வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘டேவிட் லிஞ்ச் காலமாகிவிட்டார். இக்கட்டான இந்நேரத்தில் எங்களது தனியுரிமையை பேணும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். டேவிட் லிஞ்சின் மரணத்திற்கான காரணம் மற்றும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நீண்ட காலமாக புகைபிடித்தல் பழக்கத்தில் இருந்த டேவிட் லிஞ்ச்சுவுக்கு எம்பிஸிமா இருந்ததால், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்கின்றனர்.

தனது இளமை காலத்தில் ஓவியராக இருந்து பிறகு திரைத்துறையில் கால் பதித்த டேவிட் லிஞ்ச், ‘ப்ளூ வெல்வெட்’, ‘முல்ஹோலண்ட் டிரைவ்’, ‘எலிஃபண்ட் மேன்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார். கடந்த 2019ம் ஆண்டில், வாழ்நாள் சாதனையாளர் விருதின் கவுரவ ஆஸ்கார் விருது டேவிட் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது. டேவிட் லிஞ்சுவின் திடீர் மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Hollywood ,David Lynch ,New York ,
× RELATED ஹாலிவுட் போகிறாரா சமந்தா?