×

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்த திருச்சி உஜ்ஜீவநாதர்

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளது பிரசித்தி பெற்ற உஜ்ஜீவநாதர் ேகாயில். மூலவர் உஜ்ஜீவநாதர். தாயார் அஞ்சனாட்சி. இத்தலத்து சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயில் வரலாறு:

மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், “”உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார். குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல கோயில்களுக்கு சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார். தன்னை எமன் துரத்துவதை சொன்னார்.

இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார். இத்தகைய சிறப்பு பெற்றது உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில். இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை மூதேவி என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள். ஆனால் இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம். 50 அடி உயர மலையில் பாறையில் இந்த கோயில் இருக்கிறது.

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் “கற்பகநாதர்’ என்றும் இவருக்கு பெயர் உண்டு. இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற விழாக்கள் நடைபெறும். பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

சூரியபூஜை

மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஒரு நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும்.

Tags : Trichy Ujjivanathar ,
× RELATED சுந்தர வேடம்