×

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின், டோனி பங்கேற்பு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா பிரமாண்டமாக  நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒலிம்பியாட்டின் தொடக்க விழாவையே உலகமே பாராட்டும் படி நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். தமிழர்களின் தொன்மையை அறிந்து உலக செஸ் வீரர்களே அதிர்ந்து போய் பார்த்தனர். தொடர்ந்து கடந்த 29ம் தேதி மாலை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியது. ஓட்டல்களிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்கு ஏற்றார் போல் உணவுகள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்து வீரர்கள் அனைவரும் அசந்து போயினர். மேலும் வீரர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களை சுற்றி பார்க்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்து இருந்தது. தமிழக அரசின் ஏற்பாடுகள் வேறு எந்த நாட்டிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வீரர்களே பெருமிதம் கொண்டு பேசினர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று நடக்கிறது. எப்படி தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டதோ, அதே போல நிறைவு விழாவையும் வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிறைவு விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், ஆசியன் செஸ் பெடரேசன் தலைவர் ஷேக் சுல்தான் பின் கலீபா அல் நஹ்யான், ஆல் இந்தியா செஸ் பெடரேசன் தலைவர் சஞ்சய் கபூர், பாரத் சிங் சவுஹான், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் வீரர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீரர்களை வரவேற்கும் வகையில் மாமல்லபுரம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவு விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது….

The post சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின், டோனி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad ,Nehru Indoor Stadium, Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tony ,Chennai ,Nehru Indoor Stadium ,Chennai Nehru Indoor Sports Stadium ,CM Stalin ,Dinakaran ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...