×

ஆலடியப்பர் கருப்பராயன்

கரிகாலச் சோழச் சக்கரவர்த்தி, கொங்குநாட்டில் காடு திருத்தி நாடாக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்த போது, பேரூர் நகரில் திருப்பணி ஆற்றிவிட்டு, ஆவன் என்கின்ற இருளனின் வில்வ வனத்திற்கு (அவிநாசி) வருகின்றார். அப்பொழுது ஆலடி கறுப்பு என்னும் கருப்பண்ணன் வந்து வழி மறிக்கின்றார். மூவேந்தர்கள் மற்றும் அவர்கள் சகாக்களில், தெய்வங்களோடு பேசும் ஆற்றல் பெற்ற சமய முதலி, தாங்கள் வந்த காரியத்தை எடுத்துக் கூறி அவரை சமாதனப் படுத்துகின்றார். மனம் ஒப்பி, ஆலடி கருப்பு, வழி விட சம்மதித்ததுடன் தனக்கொரு பலியும் கேட்டது. அதற்கு மூவேந்தர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

வனம் திருத்தி நாடாக்கும்போது வனத்துள் அவிநாசி லிங்கத்தைக் கண்டெடுத்து சோழவேந்தன் அவிநாசிலிங்க உடையாருக்கு திருக்கோயில் அமைத்தான். அந்த நகருக்கு கீழ் பக்கத்தில் சேரன் முன்வம்சத்தினர் கட்டி வைத்திருந்த ஆறுமுகவர் தட்சிண காசித் திருமுருகன்பூண்டி முருகநாதர் சுவாமியையும், அம்பாள் முயங்கு பூண்முலைவல்லியையும், வேம்படி முருகனையும் கண்டெடுத்த பிறகு. சேர ராஜா, திருமுருகன் பூண்டி நகரை உருவாக்கி, மேற்கு தலைவாசல் வைத்து திருமுருக நாகருக்கு சிவாலயமும், நாகதேவ கன்னிகைக்கு மற்றும் ஆலடிக்கருப்புக்கு திருக்கோயில்களையும் எழுப்பி திருப்பணி ஆற்றினான்.

சூரனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க , திருமுருகனுக்கு, சிவன் இத்தலத்தை காட்டி அருளியதால், முருகப் பெருமான் இங்கு வந்து சிவலிங்க வடிவான ஈசனை ஸ்தாபிதம் செய்து வணங்கியதால் தோஷம் நீங்கியது. இங்கு அமைந்துள்ள முயங்கு பூண்முலைவல்லி உடமைர் திருமுருகநாதர் ஆலயம் மனநலம் குன்றியவர்கள் பிரார்த்தனை தலமாக அமைகின்றது. இத்தலத்தின் காவல் தெய்வமாக ஆலடி கருப்பு அருள்கின்றார்.

திருமுருகன் பூண்டியில், இத்திருக்கோயில் திருப்பூர் செல்லும் பிரதான சாலை அருகிலேயே, பூலுவம்பட்டி ரிங்ரோட்டில், காவல் நிலையத்துக்கு அருகிலேயே  அமைந்துள்ளது. ஆலடியப்பரை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொண்ட இவரின் பக்தர்கள், ஆலமரத்தடியில் கோயில் கொண்டிருந்த இவருக்கு திருக்கோயில் எழுப்பிட நினைத்து  (ஆலமரம் இப்பொழுது தான் இல்லாமல் போயிருக்கலாம்) அஸ்திவாரம் போட்டனர். உடனடியாக, தற்பொழுது தலமரமாக இருக்கும் வேப்பமரம் பட்டுப்போனது.

இது தெய்வகுற்றம் என அறிந்த ஊரார், குற்றம் குறை ஏற்பட்டிருந்தால் தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அப்பொழுது கூட்டத்தில் ஒருவருக்கு அருள் வந்து, தனது உத்தரவினைக் கேட்காமலே கோயில் கட்ட முயல்வதே தனது குறை என தெரிவித்தார். அதன் பிறகு ஊரார் தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டி வழிபட்டவுடன் பட்டமரம் துளிர்க்கத் தொடங்கியது. அன்று முதல் பட்டமரம் தழைத்த பாதைக் கருப்பராயர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

ஒரு சமயம், இவ்வூரினைச் சேர்ந்த ஒரு அம்மையார் கனவில், பெண் ஒருத்தி, எண்ணெய் கலயத்திலிருந்து எண்ணெயை மொண்டு, மொண்டு ஊராருக்கு குடிக்க கொடுப்பதைக் கண்டார். காலையில் கண் விழித்தவருக்கு, ஊரெங்கும் காலராநோய் விரைவாக பரவி வருவதால் அனைவரும் நோய் வாய்ப்பட்டு அவதிப்படும் செய்தியைக் கேள்விப்பட்டார். அன்று வெள்ளிக்கிழமை. ஆலடியப்பர் கருப்பராயர் கோயிலுக்குச் சென்று, தான் கனவில் கண்ட காட்சிக்கும், காலரா நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா? எனக் கேட்டதுடன் அப்படி ஆயின் அந்த எண்ணெய்காரியை அடித்து விரட்டி மக்களைக் காப்பாற்றி அருளுமாறு மனமுருக வேண்டிக் கொண்டார்.

அன்றிரவே அவர் கனவில் அப்போதைய அவிநாசி நகர் தாசில்தாராக இருந்த ஆர்லிதுரை வடிவில் வெள்ளைக்குதிரை மீது ஏறி வந்த ஆலடியப்பர், அந்த எண்ணெய் காரியை நெருப்பு சவுக்கால் வெளுத்து விரட்டியடித்ததுடன் ‘‘இனி என்றைக்குமே இவள் இந்த ஊருக்கு வரமாட்டாள்’’ எனக்கூறி மறைந்துள்ளார். அதன்  பிறகு காலரா நோய் இவ்வூரில் ஏற்பட்டதே இல்லை என்கின்றனர். அன்று முதல் ஆர்லி கருப்பராயர் என்னும் சிறப்புப் பெயரினையும் பெற்றார்.

ஆலடியப்பர் இங்கு காவல் தெய்வமாக கோயில் கொண்டதிலிருந்தே தான் காவல் இருப்பதை கண்கூடாகவே காட்டி அருளுகின்றார். தினமும் பகல் 12 மணிக்கு கிழக்கிலிருந்து நெடிதுயர்ந்த சுழல் காற்று ஒன்று சுழன்றபடி இத்திருக்கோயில் வளாகத்திற்குள் மையம் கொண்டு, விஸ்வரூபம் எடுத்து சுழன்று விட்டு அமைதி அடைவதை இன்னமும் இவ்வூர் மக்கள் காண்கின்றனர். இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் 11 நாட்கள் பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

தொகுப்பு: இறைவி

Tags : Aladipper Karuparayan ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?