×

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்

கிரக சேர்க்கைகள், பார்வைகள், பரிவர்த்தனைகள் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகளாகும். இந்த சேர்க்கைகள் ஒவ்வொரு ஜாதக கட்டத்திற்கும் கட்டாயமாக வேறுபடும். ஒருவருக்கு யோகத்தை செய்யும் கிரகம் மற்றொருவருக்கு அவயோகத்தை, தடைகளை, தாமதத்தை தருகிறது. இருந்தாலும் கிரக சேர்க்கை இருந்தால் தான் யோகங்களோ, தோஷங்களோ உண்டாகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்களே தீர்மானிக்கின்றன. தற்காலத்தில் ஆண், பெண் சரிசமம், ஆணாதிக்கம், பெண்ணாலா திக்கம் என பல விஷயங்கள் பேசப்பட்டாலும். எந்தக் காலத்திலும், எல்லா விஷயங்களுமே கிரகங்களின் ஆளுமையில் தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் குடும்பம், திருமணம், இல்வாழ்க்கை என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் ஒருவகை. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணங்கள் ஒருவகை. யார் சம்மதமும் இல்லாமல் காதலர்களே செய்து கொள்ளும் திருமணங்கள் ஒரு வகை. ஜாதி, மத, காதல் கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வது. அதனால் உண்டாகும் பிரச்னைகள், இடையூறுகள், வழக்குகள், நிம்மதி இழப்பது, விவாகரத்துக்கள், பிரிந்து வாழ்வது என குடும்ப வாழ்க்கை பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் நான் என்ற அகங்காரம், சகிப்புத்தன்மை இல்லாதது, தவறானவர்களின் ஆலோசனைகளை கேட்பது, ஆடம்பரம், அந்தஸ்துக்கு மீறிய ஆசைகள், செயல்பாடுகள் என்றாலும், கடைசியில் ஜாதக கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும் போது கிரகங்களின் யோக, தோஷங்கள் தசாபுக்திகள், கோச்சார கிரக சஞ்சாரங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இல்வாழ்க்கை பிரச்னைகளை உண்டாக்கக் கூடிய கிரக சேர்க்கைகள் எவை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற ஜாதக அமைப்புடைய ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதே சுப பொருத்தமாக அமையும்.

குரு சுக்கிரன் ராகு கேது

இல்லற வாழ்க்கையில் குருவின் ஆதிக்கம் மிக முக்கியமானதாகும். குரு முழுமையான சுபக்கிரகமாக இருந்தாலும் தோஷங்களை தருவதில் முதல் இடத்தில் இருப்பவர். தன, புத்தர காரகம் உள்ளவர். பெண்கள் ஜாதகத்தில் பர்த்தா காரகர் என்ற ஆதிக்கம் உடையவர். குரு லக்னம், இரண்டு, ஐந்து, ஏழில் தனித்து இருந்தால் ஏதாவது ஒரு வகையில் தோஷத்தை, பாதிப்பை ஏற்படுத்துவார். கணவன் - மனைவிக்கிடையே பிரிவினை, நிச்சயமற்ற தன்மை, வழக்குகள் இருக்கும் அல்லது நோய் பாதிப்பு காட்டும். குழந்தைகள் பிறப்பதில் தாமதம் இருக்கும். அல்லது ஊனமுள்ள குழந்தைகள் பிறக்கும். ஏழாம் இடத்தில் தனித்து குரு இருந்தால் இல்வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. கணவன், மனைவி இடையே பற்று, பாசம், நேசம் குறைவாக இருக்கும். ஆண்களுக்கு பிறபெண்களின் தொடர்புகள் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெண்களும் தடம் மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது. இரண்டில் குருவுடன் கேது சேர்ந்து இருந்தால் பணம், பொன், பொருள், செல்வாக்கு இருக்கும்.

அதே நேரத்தில் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. சுக்கிரன் களத்திரகாரகன் திருமணம், தாம்பத்யம், உடல்உறவு போன்றவற்றிற்கு அதிகாரம் செலுத்துபவர். ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே போராட்டமாக மாறி விடும். காதல் திருமணம், கள்ளத் தொடர்புகள், இரண்டாம் தாரம், விவாகரத்து, வழக்குகள், பிரிந்திருப்பது என எல்லாம் சுக்கிரனின் லீலைகளாகும். இளம் வயதிலும், மத்திம வயதிலும் பாலுணர்ச்சிகளை தூண்டி வாழ்க்கை பாதையை புரட்டிப் போடுவது சுக்கிரனின் வேலையாகும். ஆகையால் ஜாதகத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் போது சுக்கிரனின் நிலையை பார்ப்பது மிகவும் அவசியம். சுக்கிரன், ராகு கேதுவுடன் சம்மந்தம் ஏற்பட்டால் ஏதாவது ஒருவகையில் வாழ்க்கை பாதிக்கப்படும்.

மிக முக்கியமான காதல் கலப்பு திருமண தோஷ அமைப்புக்கள் :

1). களத்திரகாரகன் சுக்கிரனுடன், ராகு, கேது சேர்ந்து இருப்பது.

2). சுக்கிரன், சனி, சந்திரன் தொடர்பு கொண்டு இருப்பது. அதாவது சந்திரன்  சனி சேர்ந்து இருந்து சுக்கிரன் பார்ப்பது. அல்லது மூவரும் கூட்டு சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது. சுக்கிரன், சனி சேர்ந்து சந்திரன் பார்ப்பது.

3). சந்திரனுடன், புதன் சேர்ந்து இருந்தால் தவறான பழக்க வழக்கங்கள், கூடா நட்பு, தீய குணங்கள் எளிதில் வந்து பற்றும்.

4). குரு லக்கினத்திற்கு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது.

5). ஏழாம் அதிபதி எந்தக் கிரகமாக இருந்தாலும் நீச்சம் அடையாமல் இருப்பது மிக அவசியம், நீச்சமடைந்த கிரகத்துடன் சேராமல் இருப்பதும் முக்கியமாகும்.

6). லக்கினத்தில் ராகு அல்லது கேது. இரண்டு, ஏழு, எட்டில் ராகு அல்லது கேது இருப்பது சர்ப்ப தோஷம்.

7). பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேது சேர்ந்து இருப்பது தார தோஷம். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், கேது சேர்ந்து இருப்பது தார தோஷம்.

8). குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் நீச்ச கிரகம் இருப்பது, இரண்டாம். அதிபதி நீசமாக இருப்பது. ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பது.

9). ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் சேர்ந்து இருந்தாலும். சனி, சந்திரன் சேர்ந்து இருந்தாலும். சந்தேகம், கூடா நட்பு வர வாய்ப்புள்ளது விதவையை திருமணம் செய்யும் அமைப்பாகும். இரண்டாம் திருமணம், தொடர்புகள் உண்டாகும்.

10). ஆண் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் சனி, புதன், நீசக்கிரகம் இருந்தால், இல்லறம் சரிவர இருக்காது. நரம்புத்தளர்ச்சி, விந்து குறைபாடு, ஆண்மைக்குறைவு இருக்கும். பெண் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் சனி, புதன், நீசக் கிரகங்கள் இருந்தால் கணவன்,  மனைவிக்கு தாம்பத்யம் சரிவார இருக்காது. மனைவியை திருப்திபடுத்த முடியாத நிலை உண்டாகும். அதனால் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், ஏமாற்றம் இருக்கும்.

11). பெண் ஜாதகத்தில் சுக்கிரன், குரு இருவரும் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படும். விந்தணு குறைபாடு இருக்கும். ஆரோக்கியம் குறைவு, நோய்த் தாக்கம் அடிக்கடி ஏற்படும்.

12). பெண் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் நீச கிரகம் இருந்தால் கருச்சிதைவு உண்டாகும். கர்ப்பப்பை கோளாறுகள் வரலாம்.

13). எந்த லக்கினமாக இருந்தாலும் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருப்பது அதீதமான காம சுகத்தை உண்டாக்கும். சுக்கிரன் குளிர்ச்சி, செவ்வாய் உஷ்ணம், வீரியம் என்பதால் போக இச்சையில் மூழ்கி இருப்பார்கள்.

14). பெண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் முதுமை தோற்றம் கொண்ட கணவர் அமைவார் அல்லது இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவேண்டி இருக்கும்.

15). ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் 1,5,9 என்ற மூன்று ஸ்தானங்கள் மிகவும் முக்கியமாகும். ஒன்று சொல்லக் கூடிய லக்னாதிபதி பலமாக இருக்கும் ஜாதகங்கள் நல்ல யோகத்தை தருகிறது. பஞ்சம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் இரண்டும் பலம் பெறும் போது நல்ல குடும்ப வாழ்க்கை அமைகிறது. குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் இரண்டாம் இடம் நன்றாக அமைந்தால் மற்ற தோஷங்கள் இருந்தாலும். எந்த பாதிப்பும் ஏற்படாது. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று இவர்களுக்கே பொருந்தும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குக் கேற்ப சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் கலை இவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும்.

16). லக்னத்திற்கு 6 ஆம் இடம் புத்திர ஸ்தானம். பூர்வ புண்ணியம் மற்றும் பல யோக அம்சங்கள் பொருந்திய இடம். இந்த ஸ்தானத்தில் 6,8,12 க்குரியவர்கள் நீச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சனி 5ல் இருப்பது நல்ல அமைப்பு கிடையாது. குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற  இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது சாஸ்திர விதியாகும். சனி, 5ஆம் வீட்டில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும், தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டையும் பார்ப்பதால் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் வர காரணமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத நிலை ஏற்படுகிறது. நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து, பிரிந்து வாழ்தல். தீயோர் சேர்க்கை, அற்ப சிநேகிதம், கோர்ட், கேஸ், பஞ்சாயத்து. ஜீவனாம்சம். தன் வாயாலே கெடுவது என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் வாழ்க்கையில் ஏற்படும்.

புத்திர தோஷம், புத்திர சோகம், பிள்ளைகளால் பிரச்னை எனப் பலன்கள் இருக்கும். மேலும் 2, 7 ஆகிய வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகிவிடுகிறது. இந்த சனி பார்வை ஒருவருக்கு சஞ்சல சபல புத்தியை கொடுத்து வாழ்க்கையை கெடுத்து விடுகிறது. காதல், கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் இருப்பதால் தான் நடைபெறுகிறது. பொதுவாக 6,8,12 ஆம் இடங்கள் பிரச்னைகளை, நோய்களை, பற்றித் தெரிவிக்கும் இடங்களாக இருக்கின்றது. பார்வைகளின் அடிப்படையில் எட்டாம் இடத்திற்கும், இரண்டாம் இடத்திற்கும் சம சப்தம பார்வை உள்ளது. அதாவது எட்டாம் வீட்டில் இருக்கும் கிரகம் இரண்டாம் வீட்டையும், இரண்டாம் வீட்டில் உள்ள கிரகம் எட்டாம் வீட்டையும் பார்க்கும். இதனால் இந்த வீடுகள் எல்லாம் பார்வைகள் மூலம். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகின்றது.

இந்த அமைப்பு ராசி மற்றும் நவாம்சம். இரண்டு கட்டங்களிலும் பார்க்கப்பட வேண்டும். ராசிக்கட்டத்தில் பாதிப்பு இல்லாமல் நவாம்ச கட்டத்தில் பாதிப்பு இருந்தால் அந்த அமைப்பு தான் வேலை செய்யும். மாந்தி என்ற கிரகத்தை பெரும்பாலும் யாரும் அதிகமாக கண்டு கொள்வதில்லை, கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் தென் தமிழகம் தொடங்கி கேரளா மற்றும் வடநாட்டில் மாந்தியின் நிலையை கண்டிப்பாக கவனிப்பார்கள். மேலும் அனுபவ ரீதியாக மாந்தி தரும் பலன்கள் மிகச் சரியாக இருக்கின்றது. கோயில்களில் பார்க்கப்படும் தேவப்பிரசன்னம், அஷ்ட மங்கள பிரசன்னம், மந்திர, தந்திர பிரச்ன்னங்களில் மாந்தியின் பங்கு மிக முக்கியமானது. பழங்காலத்தில் மாய மந்திரத்திற்கு மாந்தி என்று சொல்வார்கள். மாந்தியின் வரலாறு பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகிறது.

சனியின் பிரதிபிம்பம், அம்சம் தான் மாந்தி என்று சொல்கிறார்கள் சிலர் சனியின் புத்திரன் மாந்தி என்றும் எமனின் புத்திரன் மாந்தி என்றும் பலர் பல விதமாக சொல்கிறார்கள். எது எப்படியோ மாந்தி என்ற கிரகம் சகல வல்லமை படைத்தது என்பது கேரள தாந்திரீக முறையில் சொல்லப்பட்டுள்ளது.
மாந்திக்கு தசா, பரல், சொந்தவீடு, உச்ச வீடு, நீச்ச வீடு, சமவீடு, பகை வீடு. என எதுவும் கிடையாது. ஆனால் மாந்திக்கு சனி போல  மூன்று இடங்களை பார்க்கும் வல்லமை உள்ளது. தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்வீட்டையும், பின் வீட்டையும், ஏழாம் வீட்டையும் பார்க்கும். அதாவது மாந்தி லக்னத்தில் இருந்தால். இரண்டாம் வீட்டையும், பன்னிரண்டாம் வீட்டையும், ஏழாம் வீட்டையும் பார்க்கும் சக்தியுடையது. மாந்தி 2,8,12 ஆகிய வீடுகளில் இருந்தாலும், பார்வை ஏற்பட்டாலும் கண் சம்மந்தமான ரோகம், பிரச்னைகள் உண்டாகும். இரண்டாம் அதிபதி நீச்சமாக  இருந்தாலும், நீச்ச கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் 6,8,12க்குடையவர்க்களுடன் சம்பந்தம் பெற்றதும்.

கண் பார்வை கோளாறுகள் வரும். குறிப்பாக மாலைக் கண் நோய் வரும். இரண்டாம் வீட்டில் நீச்ச கிரகம், ராகு, கேது போன்றவை இருந்தால் அந்த கிரக தசா புக்தியில் கண் பிரச்னைகள் வரும். சனியுடன் கேது அல்லது செவ்வாய் சேர்ந்து 2, 6, 8, 12-ஆகிய ஸ்தானங்களில் இருந்தாலும்
பார்த்தாலும் பார்வைக் கோளாறு வரும். நரம்பு கோளாறு காரணமாக பாதிப்பு வரும். விபத்தில் கண்களில் அடிபடுவதற்கு இந்த அமைப்பு தான் காரணம். சூரியன் 6ஆம் வீட்டிலும், சந்திரன் 12-ஆம் வீட்டிலும் இருந்தால் பார்வை மங்கும். சூரியன், சந்திரன் நீசமானால் கண்ணில் பிரச்னை நவாம்சத்தில் நீசம் ஆனாலும் பார்வை பாதிப்பு, அறுவை சிகிச்சை உண்டாகும். சுக்கிரன் நீசம் அடைந்தாலும், நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும். இனம் புரியாத கண் நோய்கள் வரும். நிறக்குருட்டுத் தன்மை COLOUR BLINDNESS உண்டாகும்.

சந்திரன் 6, 8, 12-ஆம் வீடுகளில் இருந்து சனி, செவ்வாய் சம்மந்தம் ஏற்பட்டால் 30-வயதிற்கு மேல் கண் பார்வைக் குறைபாடுகள், அறுவை சிகிச்சை உண்டாகும். நீச்ச சூரியன், நீசச் சந்திரனுடன் சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால். சிறு வயது முதலே கண்களில் பிரச்னைகள் இருக்கும். கண்களில் நீர் வடிதல், அலர்ஜி ஒற்றைத் தலைவலி போன்றவை உண்டாகும். இரண்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு நீச்ச புதனின் பார்வை இருந்தால் நரம்பு கோளாறு காரணமாக பார்வை கோளாறுகள் வரும். சூரியன் கடகத்தில் இருந்தால் வலது கண்ணில் பிரச்னை வரும். சுக்கிரன் 5, 6, 7, 8, 12-ஆகிய அதிபர்களுடன் சேர்க்கை பெற்று இருந்தால் அந்தந்த கிரக தசா புக்திகளில் கண் பிரச்னைகள் வரும். சூரியன், சந்திரன் சேர்ந்து இருப்பது அமாவாசை யோகமாகும். இந்த இரண்டு கிரகங்களையும் 6,8,12 க்குடையவர்கள், அல்லது நீசம் பெற்ற கிரகங்கள் பார்த்தால்.

மாறு கண், விபத்தில் பார்வை இழத்தல், அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் வரும். சூரியன், சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால் கண் பார்வை படிப்படியாக மங்கும். ஆறாம் வீட்டில் சனி, கேது, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் இடது கண்ணில் பிரச்னை. எட்டாம் வீட்டில் சனி, கேது, செவ்வாய் இருந்தால் வலது கண்ணில் பிரச்னை. உச்சம் பெற்ற சூரியனுடன் இரண்டு, பன்னிரண்டுக் குரியவர்கள் சம்மந்தம் பெற்றால் கண்களில் எரிச்சல், அலர்ஜி, உண்டாகும். இரண்டாம் அதிபதி தசையில், ஏழாம் அதிபதி, எட்டாம் அதிபதி புக்தியில் கண்களில் பிரச்னை வரும். விபத்தில் பார்வை போகும் வாய்ப்புள்ளது. சனி, செவ்வாய் புக்திகளில் கண்களில் அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது. சுக்கிரன் நீச்சமாகி தசா நடந்தால் பார்வை மங்கும். மாலைக் கண்நோய் உண்டாகும்.

இரண்டாம் வீட்டில் இருக்கும் புதனை சனி பார்த்தால் நரம்பு கோளாறு காரணமாக பார்வை குறையத் தொடங்கும். செவ்வாய் பார்த்தால் கண்ணில் வீக்கம், பூவிழுவது, அறுவை சிகிச்சை உண்டாகும். பொதுவாக இரண்டாம் இடம், பன்னிரண்டாம் இடம். சூரியன், சந்திரன், சுக்கிரன், இரண்டாம் அதிபதி இவர்களால் கண் பார்வை பிரச்னைகள் உண்டாகிறது. இந்த அமைப்புக்களுடன் தசைகள் சரியில்லாத போது. கண்கள் பாதிக்கப்படும். கோச்சாரத்தில் 4ல் சனி, 8ல், 7ல் சனி, 7½-சனி போன்ற காலங்களிலும். 2, 7, 8 ல் ராகு, கேது சஞ்சாரம் செய்யும் பெயர்ச்சிகளிலும் கண் நோய் அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள் உண்டாகும்.

Tags : doshas ,planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்