×

மணம் புரிந்த அரங்கனை இடைமறித்த ரங்க நாயகி

ஸ்ரீரங்கம்.வைகுண்டமா அல்லது பூலோகமா என்று அன்றும் அனைவரையும் அது திகைக்க வைத்தது. எங்கும் தீதில்லா நல்லோர் திரள். ஆம் மாதவனிடம் மட்டும் இல்லை அவன் அடியாரிடத்திலும் தீது இல்லை. ஆகவே எங்கும் நலம் தரும் நாராயண நாமம் ஒலித்தபடி இருந்தது. அனைவரும் ஏதோ ஒருவகையில் மாலவனுக்கு சேவைபுரிந்த வண்ணம் இருந்தனர். ஒருவர் மாலை தொடுக்கிறார். ஒருவர் விளக்கேற்றுகிறார். மற்றொருவர் கோலம் போடுகிறார். ஒருவர் சந்நதியின் வாசலில் தன் துனணவியோடு அழுதுகொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. சோழ நாட்டின் மாமன்னன் நந்த சோழ மகாராஜன் தான்.

ரங்கநாதர் அயோத்தியில் இருந்து, தமிழகம் வர காரணமாக இருந்தவர் சோழ மன்னர் தர்மவர்மா. அவரது குலத்தில் உதித்த, அரசர் திலகம் தான் இந்த நந்த சோழன். அவர் தன் குறைகளை ரங்கனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ஹே ரங்க பிரபோ! என்னிடம் இந்த பாராமுகம் ஏன்?. செல்வம் அனைத்தையும் பெற்றுவிட்டேன். ஆனால் எங்களை பெற்றோர் என்று சொல்ல ஒரு குழந்தை இல்லை. சுவாமி, கடை கண் திறந்து எங்களை பாரும். எங்கள் குறைகளை தீரும் அய்யா.” என்று மனமுருக பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார் சோழ மன்னர்.

ரங்கன் இவருக்கு கருணை செய்ய எண்ணிவிட்டான். அதற்க்கு அத்தாட்சியாக அவன் பாதத்தில் இருந்த மலர் கீழே விழுந்தது. அதை பட்டர் கவனிக்கத் தவறவில்லை. அதை எடுத்து மன்னர் கையில் தந்து “ மன்னர் மன்னவா, ரங்கன் தங்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்துவிட்டான். அதற்கு அத்தாட்சி இந்த மலர். மனம் தளராமல் இல்லம் திரும்புங்கள். எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்” என்று ஆறுதல் கூறினார் அந்த பட்டர். அவர் வாக்கை ரங்கன் வாக்காக கொண்டு மாளிகை திரும்பினான் மன்னவன்.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் மன்னவன் வேட்டைக்காக கானகம் சென்றான். கானகத்தில் பாய்ந்து ஓடும் காட்டாறுகள், அழகிய மான்கள், முயல்கள் போன்ற மிருகங்கள், பச்சைப்பசேல் என எங்கும் செடிகொடிகள், ஆங்காங்கே தாமரைத் தடாகங்கள் என்று அனைத்தும் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருந்தது. ஆனால் இவை மன்னனை மயக்கவில்லை. காரணம் அவன் மனதில் பிள்ளை இல்லா வருத்தம் இருந்ததே ஆகும். திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. முதலில் மன்னன் பிரமை என்றுதான் நினைத்தான். ஆனால் அழுகை சத்தம் விடாமல் கேட்கவே சத்தம் வரும் திசைநோக்கி சென்றான். அங்கு, ஒரு தாமரைத் தடாகம் தென்பட்டது.

அதில் தாமரைக் கொடிகளுக்கு நடுவே ஒரு வஞ்சிக்கொடி (பெண்குழந்தை) அழுதுகொண்டிருந்தது. மன்னன்நீந்திச் சென்று குழந்தையை எடுத்துக்
கொண்டான். சுற்றும், முற்றும் பார்த்தான் மன்னன். குழந்தையின் பெற்றோர்கள் யாரும் இருந்ததாக தென்படவில்லை. ஆகவே அந்தக் குழந்தையை ரங்கநாதன் தமக்கு தந்த பிரசாதமாகவே கருதினான். அதற்கு காரணமும் இருந்தது. தாமரை கொடிகளுக்கு நடுவில் ஒரு குழந்தை இருப்பது என்ன சாதாரணமான விஷயமா?. மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஓடினான் அரண்மனைக்கு. மனைவியை நாடி அவளிடம் குழந்தையை ஒப்படைத்து, நிகழ்ந்ததைக் கூறினான். அவளும் பரவசத்தில் “சுவாமி தாமரைக் கொடியின் நடுவில் இவள் கிடைத்ததால் இவளை கமலவல்லி
( தாமரைகொடி ) என்று அழைப்போமே” என்றாள். மன்னனுக்கும் அது சரி யென்றே பட்டது. குழந்தைக்கு கமலவல்லி என்றே பெயரிட்டனர்.

குழந்தை வளர்பிறை போல் வளர்ந்தது. குழந்தையோடு நாட்டில் செல்வ வளமும் சிறந்து வளர்ந்தது. ஒரு படி பால் தந்த பசு, கமலவல்லி வந்ததும்பத்து படி பால் தந்தது. ஒரு படி நெல் தந்த வயல், பத்துபடி நெல் தந்தது. எங்கும்இன்பமயமாக இருந்தது நாடு. ஆனால் மன்னனோ மீண்டும் கவலையில் ஆழ்ந்தான். கமலவல்லியை ஒரு முறை ஸ்ரீரங்கம் அழைத்து சென்றான் மன்னன். அங்கு அழகிய மணவாளனை கண்டது தான் தாமதம். இந்த ரங்கன்தான் என் மணவாளன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள் கமலவல்லி. முதலில் குழந்தை ஏதோ விளையாடுகிறது என்று தான்மன்னனும் எண்ணினான்.

ஆனால் கமலவல்லியோ, முனிவர்களை அணுகி ரங்கனை அடைய வழி என்ன? என்று கேட்டு அறிந்துகொண்டாள் என்பதும், அதன்படி சதா ஜபம் தவம் பூஜை என்று தன்னை மறப்பதும் மன்னவனுக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒருசேரக்கொடுத்தது. ஒருபுறம் தன் மகளின் பக்குவ நிலை கண்டு மகிழ்ந்தான். மறுபுறம் கடவுளை மனிதன் மணப்பதா இது என்ன மடத்தனம் என்று வருந்தினான். நாட்கள் செல்லச்செல்ல மன்னனின் கவலை அதிகரித்தது. காரணம் பருவம் அடைந்த பின்னும் கமலவல்லியின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. குழந்தையை தந்தது ரங்கன்தானே ஆகவே அவனிடமே முறையிடுவோம் என்று முடிவெடுத்தான். இரவு ரங்கனிடம் மனதாற தன் கவலையை உரைத்துவிட்டு கண்ணயர்ந்தான் நந்த சோழன். யோகி ஹ்ருத் த்யானகம்யம்என்பார் பீஷ்மாச்சார்யர். அதாவது யோகிகளின் ஞானக் கண்களுக்கு மட்டுமே மாலவன் புலப்படுவானாம்.

அப்படிப்பட்ட மாலவன் அடியவர்க்காக இரங்கி மன்னனின் கனவில் தோன்றினான். “பக்தனே நந்தா! கவலையை விடு. நாளை உன் பெண்ணை மணக்க உறையூருக்கு வருகிறேன். வேண்டிய ஏற்பாடுகள் செய்” என்று ஆணையிட்டு மறைந்தான். மன்னவன் மாலவன் வாக்கை வேத வாக்காக கொண்டு, திருமண ஏற்பாடுகளை செய்தான். ரங்க நாதன் கமலவல்லியை மணக்க ரங்கநாயகியிடமும் சொல்லாமல் தனியாக சென்றான். உறையூரில் அவனுக்கு அமோக வரவேற்பு. இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகும் நாராயணன் நம்பியின் மணக்கோலம் காண அனைவரும் வந்து விட்டனர். ஜாம், ஜாம் என்று கல்யாணம் நடந்தது.“உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்று கமலையை ரங்கனுக்கு தாரை வார்த்துத்தந்தான் சோழன்.திருமணம் முடிந்து கமலவல்லித் தாயாருடன் தன் அடியவர்களுக்கு அகம் குளிர காட்சி தந்தான் ரங்கநாதன்.

ரங்கநாயகி தனக்கு தந்த தங்க மோதிரத்தை பரிசாக கமலவல்லிக்கு, மாதவன் அளித்தான். அனைவரும் இன்ப வெள்ளத்தில் இருந்தனர்.
திடீர் என்று ரங்கனுக்கு நாளை பங்குனி உத்திரம் என்பது நினைவிற்கு வந்தது. உடன் நந்த சோழனிடமும் கமலவல்லியிடமும் “நான் உடனே திருவரங்கம் செல்லவேண்டும் ஆவன செய்யுங்கள்” என்றான் ரங்கன். “சுவாமி என் மகளையும் அழைத்து செல்லுங்கள்” என்றான் சோழமன்னன். “கெட்டது குடி. ரங்கநாயகிக்கு இங்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. எனக்கு இன்னொரு மனைவி இருப்பது தெரிந்தால் என்ன செய்வாளோ? என்னால் சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை. ஆகவே மன்னவா, நான் உடன் திருவரங்கம் செல்கிறேன்.

எல்லா வருடமும் உன் மகளின் திருமண நாளில் இங்கு வந்து, அவளோடு இருப்பேன் கவலையை விடு.” என்று ஆசியும் வாக்கும் கொடுத்துவிட்டு திருவரங்கத்திற்கு புறப்பட்டான் ரங்கன். விடிந்தால் பங்குனி உத்திரம். ரங்கநாயகியின் பிறந்த நாள். அதற்குள் திருவரங்கம் செல்லவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டான். திருவரங்கம் ஆலயத்தை நெருங்கிய உடன் தன் வேலையாட்களை அழைத்தான். “ அன்பர்களே நாம் உறையூர் சென்று வந்தது ரங்கநாயகி அறியமாட்டாள். அவளுக்கு சந்தேகம் வராவண்ணம் நான் சந்நதியில் எழுந்தருள வேண்டும். ஆகவே அனைத்து வாத்தியங்களையும் நிறுத்துங்கள்.” என்று கட்டளை இட்டான். கூட்டத்தில் இருந்தஒரு அடியவர் “ சுவாமி தாயார் கொடுத்த கணையாழியை, புதிய நாச்சியாருக்கு தந்து விட்டீர்கள்.

இப்போது பிராட்டி கேட்டால் என்ன செய்வீர்கள் ’’என்று முக்கியமான விஷயத்தை நினைவூட்டினான்.“கொடுத்த பொருளை திருப்பிப்பெறுவது மகாபாவம். ஆகவே அந்த மோதிரத்தை திரும்பி பெற முடியாது. ஹ்ம்ம் வேறுவழியில்லை. உங்களை சம்சாரத்தில் இருந்து காக்கும் என்னை என் சம்சாரத்திடம் இருந்து காக்க பிச்சை போடுங்கள்” என்று அடியவரிடத்தில் கையேந்தி நின்றான் மாயவன்.  அன்று பலியிடம் கையேந்தியதை காண தவறியவர்கள் இன்று கண்டு களித்தனர். அடியவரின் பாவங்களை கவரஅந்த மாயவன், இப்படி ஒரு நாடகம் ஆடினான் போலும். அனைவரும் தந்த பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு சத்தம் இல்லாமல் பூனை போல தன் இல்லத்தில் நுழைய ஆரம்பித்தான் மாயவன்.
தடால் என்று கதவு சாத்தப்பட்டது.

இவன் உறையூர் சென்று செய்த வேலைகளை தாயார் இங்கு இருந்தபடியே தன் பணிப்பெண் மூலம் தெரிந்துகொண்டிருந்தாள். தக்க தருணம் பார்த்து காத்திருந்த அவள் ரங்கனை கையும் களுமாக பிடித்துவிட்டாள். அண்டங்கள் எல்லாம் ஆளும் ரங்கராஜனாக இருந்தாலும் கணவனாகி விட்டானே. படத்தானே வேண்டும். ஆலயத்திற்குள் செல்ல முடியாமல் தவித்து நிற்கிறான் மாதவன். அவன் சார்பாக சில அடியவர்கள் தாயாரிடம் சமாதானம் பேசசெல்கின்றனர். தாயாரின் தரப்பில் சில அடியவர்கள் அவர்களை எதிர்கொண்டனர். அனல் பறக்கும் விவாதம் தொடங்கியது. பெருமாளின் பக்கம் வலு இழந்து கொண்டே வந்தது. போதாத குறைக்கு தாயாரின் ஆட்கள் கோயிலின்மதில்களின் மீதுஇருந்து வெண்ணையாலும் கனிகளாலும் மாதவனை தாக்கினார்கள். யசோதையிடம் பெற்ற அடி உதையை தரிசிக்க தவறியவர்கள் இதை தரிசித்து மகிழ்ந்தார்கள்.

விஷயம் கை மீறிப்போவதை அறிந்தார் நம்மாழ்வார். ஆபத்தில் உதவ வந்து விட்டார். தாயாரிடம் சென்று,” தாயே தாங்களே கோபம் கொள்ளலாமா? கமலவல்லியாக சோழனுக்கு பிறந்தது தாங்கள் தானே. தங்களின் அம்சம் இல்லாதவரை மாதவன் ஏறிட்டு கூட பார்த்ததில்லை. ராமாவதாரத்தில் அவன் ஏக பத்தினி விரதன் என்பதை மறந்துவிட்டீர்களா? நீங்களும் அவனும் பிரிந்தால் உலகம் தாங்குமா? அம்மா ஜகன்மாதா! கோபத்தை விட்டு உங்கள் மாதவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்று மன்றாடினார். அடியவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது. நம்மாழ்வாரின் வேண்டுதலை உடன் அங்கீகரித்து அருளினாள் ரங்கநாயகி. ரங்கன் குனிந்த தலை நிமிராமல் தாயாரின் அருகில் சென்று நின்றுகொண்டான்.

தாயாரே பேசினாள் “ எனதன்பு குழந்தைகளே! என் பதி பல அவதாரங்களில் செய்த லீலைகளைக்காண முடியாமல் வருந்தினீர்கள் அல்லவா? அந்தக்குறை தீர்க்கவே இந்த நாடகத்தை ஆடினேன். உண்மையில் பரம்பொருளான இவர் மார்பை விட, எனக்கு பிடித்த வாச ஸ்தலம் எது? அவரை என்றும் நான் பிரியேன். கவலையைத்தவிருங்கள். இன்றுமுதல் வருடந் தோறும் இந்த ஊடல் உற்சவம் பங்குனி உத்திர நன்நாளில் நடைபெற வேண்டும். அதில் மாலவன் திருவிளையாடலை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். இதுவே என் ஆசை” என்று அமுதமாய் பேசினாள் தாயார். ரங்கனும் அதை ஆமோதித்தான். இன்றும் இந்த ஊடல் உற்சவத்தை திருவரங்கத்தில் கண்டுகளிக்கலாம்.

இந்த ஊடல் உற்சவத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீராமானுஜர், தன் வைஷ்ணவ கொள்கைகள் அடங்கிய மூன்று கத்யங்களை(பா சுரங்களை)யும் ஊடல் முடிந்து கூடி நின்று காட்சி தரும் ரங்கனின் முன்பு அரங்கேற்றினார். இவை வேதாந்த சாரம் நிறைந்தவை. ரங்கனால் ஆமோதிக்கப்பட்டவை. ஸ்ரீ வைஷ்ணவர்களால் போற்றப்படுபவை. பங்குனி உத்திரத்தன்று நாமும் திருவரங்கம் சென்று தாயார் பெருமாளின் சேர்த்தி சேவை கண்டு, கதயத்த்ரயம் சொல்லி அவன் அருள் பெறுவோம்.

Tags : Ranga heroine ,arena ,
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...