×

பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்!

நாம் நம் குடும்பங்களிலோ, உறவினர்களிடையோ, நண்பர்களிடையோ ஏதேனும் மனஸ்தாபங்கள் இருந்தால் அதை நாம் மன்னித்து மறந்துவிட வேண்டும். அன்பே கடவுள். அன்புக்கு ஈடேதும் இல்லை. ஏனெனில், நீங்கள் அன்பு கூறுவது போல, பிறரையும் அன்புக் கூறுங்கள் என்பது நம் ஆண்டவரது கட்டளையாகும்.  ‘‘உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திரும்பிக் காட்டுங்கள்.’’ (லூக்கா 6:27,29). சில நேரங்களில் எந்த காரணமுமின்றி யாரேனும் கோபமூட்டுவார்கள். அப்போது அவர்கள்மேல் கோபத்தை காட்டாதீர்கள். உங்களை யாரேனும் சபித்தால் அவர்களுக்காக ஆண்டவரிடத்திலே மன்றாடுங்கள். பல நேரங்களில் பிறர் நம்மை இகழ்ந்து பேசுவார்கள். மற்றவர்கள் மத்தியில் நாம் அசிங்கப்பட்டு தலைகுனியும் நிலையும் வரலாம். ஆனால் எதற்காகவும் கவலைப்படாதீர்கள்.

உங்களை இகழ்வோரிடத்தில் நீங்கள் பதிலுக்கு அன்பையே காட்டுங்கள். பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோமோ, அதையே நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நம்முடன் அன்பு செலுத்துவோரிடமே நாமும் அன்பு செலுத்தினால் நமக்கு வரும் நன்மை என்ன? நமக்கு நன்மை செய்பவர்களுக்கே நாமும் நன்மை செய்தால் நமக்கு வரும் நன்மை என்ன? என்பதனை சிந்திப்போம். ‘‘நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.’’ (லூக்கா 6: 35) நாம் எதையும் கைமாறு எதிர்பார்த்து பிறருக்குச் செய்யக்கூடாது. அப்போது நமக்கு ஆண்டவரிடத்திலிருந்து கிடைக்கும் கைமாறு மிகுதியாய் இருக்கும். நாம் உன்னத கடவுளின் மக்களாய் இருக்கின்றோம். ‘‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’’ (லூக்கா 6: 36).

பிறர் நம்மிடத்தில் உதவி என்று கேட்கும் போது அன்போடு அவர்கள் மேல் இரக்கம் காட்டி உதவுவோம். இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர். அன்போடு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்வோம். பகைமை, பொல்லாப்பு, பொறாமை போன்ற தீய எண்ணங்களை அறவே விட்டுவிடுவோம். நம்மை பகைப்போருக்காக ஆண்டவரிடத்திலே மன்றாடுவோம். அப்போது அவர் நம் எதிரிகளையும் நமக்கு நண்பராக்குவார். பகைப்பவர்கள் யாராக இருந்தாலும், அன்புக் காட்டுபவர்கள் நாமாகவே இருப்போம். கிறிஸ்தவம் காட்டும் பாதையில் செல்வோம் இதுவே நமது அழைப்பு. பிற இனத்தாரிடையே நாம் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்வோம். மனதில் வலிகள் இருந்தாலும், அனைத்தையும் ஆண்டவரிடத்திலே ஒப்புக் கொடுத்து, அன்பை மட்டுமே நம் மனதில் நிறுத்தி, அவ்வன்பை முக மலர்ச்சியோடு பிறரிடத்தில் பகிர்வோம். இதுவே கிறிஸ்தவம் காட்டும் பாதை.

தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!