×

குழந்தை வரம் அருளும் அம்பாயி அம்மன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 18 கிமீ தொலைவில் மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் உள்ளது திருவேகம்பத்தூர். இங்கு பழமையான சிநேகவல்லி உடனாய ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. மூலவராக ஏகாம்பரநாதர் என அழைக்கப்படும் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோயிலின் தென்மேற்கு மூலையில் குபேர கணபதி வீற்றிருக்கிறார். இங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணியர், ராகுவுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மகா மண்டபத்தின் வடபுறம் சிநேகவல்லி அம்மனுக்கு தனிச்சன்னதி உள்ளது. கோயிலின் முன்புறம் அகத்தியர் தீர்த்தமும், பின்புறம் தெப்பக்குளமும் உள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை போன்று தோற்றம் அளிக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரது பாடல்களில் இடம் பெற்ற பெருமைக்குரியது இந்த திருத்தலம். சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இந்த கோயில் உள்ளது.

தல வரலாறு

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244) காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் மீது படை எடுத்து வென்ற பின்னர் அந்த நாட்டின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை மற்றும் நாட்டியக்கலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த கோயிலை மாறவர்மன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோயில் கி.பி.13ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய ஈசுவரமுடையார் கோயிலாகவும், கி.பி.14ல் குலசேகரபாண்டியன் ஆட்சிக்குப் பின்னர் திருஏகம்பமுடைய நாயனார் கோயிலாகவும் கூறப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

இக்கோயிலில் உள்ள சிநேகவல்லியம்மன் காலப்போக்கில் பக்தர்களால் அம்பாயி அம்மன் என அழைக்கப்பட்டார். இதனால் அம்பாயி அம்மன் கோயில் என்றும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகருக்கு இணையாக இங்குள்ள குபேர கணபதி வீற்றிருக்கிறார். கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகரின் சிலையை நினைவூட்டும் வகையில் உள்ளது.

அம்பாயி அம்மனை மனமுருக வணங்கி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குபேர கணபதியை வணங்கி வழிபட்டால் கடன் சுமை நீங்கும் என்றும் கட்டிடங்கள் கட்டுவதில் ஏற்படும் காலதாமதம், தடைகள், வாஸ்து குறைகள் நீங்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கி 6 கரங்கள் மற்றும் மயிலுடன் முருகன் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். இங்கு வீற்றிருக்கும் ஏகாம்பரேஸ்வரரை, ராவணன் வணங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது.

கோயில் கருவறை மற்றும் அர்த்த மண்டபங்களில் ஆடல் கலையை விளக்கும் கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. கோயில் கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபத்தின் உள் மற்றும் வெளிப்புறங்களில் உள்ள கல்வெட்டுக்களில் கோயில் வரலாறு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

*******
தினமும் கால சாந்தி, சாயரட்சை என 2 கால பூஜைகள் நடக்கின்றன. தல விருட்சமாக சரக்கொன்றை மரம் உள்ளது. சிவராத்திரி, பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி விசேஷ நாட்களாகும். சித்திரை திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

Tags : Ambai Amman ,
× RELATED சுந்தர வேடம்