×

சிவன் அருளாலே சிவன் தாள் வணங்குவோம்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-42

பெறற்கரிய பேறான இம்மானிடப்பிறப்பை இறைவன் திருவருளால் அடைந்த நாம் அப்பெருமானை வாழ்த்தியும், வணங்கியும் வழிபட்டும் இப்பூவுலகில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்’’
என்றும்...

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி
- என்றும் மாணிக்கவாசகர் திருவாசகத்தின் ஆரம்பத்தில் சிவபுராணத்தில்
குறிப்பிடுகின்றார்.

புத்தகங்கள் பல படிக்கும் நாம் அப்புத்தகங்கள் அனைத்தின் மூலமும் பெறுகின்ற செய்தி என்ன தெரியுமா?
அற்புதமாகக் குறிப்பிடுகின்றார் பெரியபுராணம் பாடியருளிய சேக்கிழார் சுவாமிகள்.
‘உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளம் மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார்.’

வாலறிவன் நற்றாள் தொழுவதே கற்றலின் பயன் என்று வள்ளுவப் பெருமானும் முதல் அதிகாரத்திலேயே அழுத்தம் திருத்தமாக நம் அனைவருக்கும் அறிவுறுத்துகின்றார்.

ஆறாவது அறிவு நமக்கு வழங்கப்பட்டிருப்பதே ‘நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்று புரிந்துகொண்டு அந்தப் பூரணனைச் சேர்வதற்கே ஆகும் என்கிறார் மாணிக்கவாசகர். சிவபெருமான் பாலை ஊட்டி ஞானசம்பந்தரையும், ஓலை நீட்டி சுந்தரரையும், சூலை ஏற்றி திருநாவுக்கரசரையும், காலைக்காட்டி மணிவாசகரையும் ஆட்கொண்டார்.சிவராத்திரி என்கிற சிறந்த நாளைக்காட்டி நம் போன்றவர்களை பரகதி பெற
அழைக்கின்றார்.

எண் குணத்தானாகிய பரமேஸ்வரனின் பக்தியில் திளைத்து வரம் பெறுவதற்கு எட்டு விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்ட விரதம், கேதார கெளரி விரதம், மகா சிவராத்திரி விரதம். அனுஷ்டிக்கத்தக்க சிவ விரதங்கள் அனைத்துமே சிறப்பானவை என்றாலும் அபரிதமாக பலன்களை அள்ளித்தரும் விரதமாக அனைத்து ஆலயங்களிலும் அமோக வரிசையாகக் கொண்டாடப்படுவது மாசியில் வரும் மகா சிவராத்திரியே என்பதை அனைவருமே அறிந்திருப்போம்.
‘இமைப்போதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’
- என்று சிவபுராணம் குறிப்பிடுகின்றது.

வினாடிகூட பக்தர்களை விட்டு விலகாத சிவபெருமானுக்கு நன்றிக்கடனாக மாசி தேய்பிறை சதுர்த்தசியில் அன்பர்கள் நாம் விழித்திருந்து ஆராதனை செய்ய வேண்டியது அவசியமான ஒன்று அல்லவா?

சிவம் என்றால் ‘மங்களம்’ என்று பொருள். இவ்விரதச் சிறப்பை நந்திதேவர் மூலம் அறிந்து சூரியன், மன்மதன், அக்னி, எமன், இந்திரன் குபேரன், முருகப்பெருமான் முதலானோர் பக்தியுடன் இந்நோன்பை பாங்குடன் அனுசரித்து பரமேஸ்வரனின் கிருபைக்கு ஆளானார்கள் என்று பகர்கிறது பழைய புராணங்கள்.

‘இந்நாள் எமைக்கண்டவர், நோற்றவர், பூஜை புரிந்தவர் நற்கதி அடைவர்’ என்று சிவனாரே உறுதி அளித்துள்ளார் என்று உரைக்கின்றது ‘விரத பண்டிதம்’ என்னும் நூல்.‘காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்’ என்கிறது தேவாரம்.

சிவராத்திரியில் லிங்கத்திருமேனிக்கு நான்குகால அபிடேகம் நடைபெறுகின்றது.நமசிவாய. ஆயிரம் எழுத்துக்களா அல்லது நூறு எழுத்துக்களா ஐந்தெழுத்தைக்கூட அனவரதமும் உச்சரிக்க முடியாதா என்கிறார், ராமலிங்க அடிகள்!எந்தைபேர் ஆயிரம் அன்றே! நூறும் அன்றே! வெறும் ஐந்தெழுத்தே! அந்த அஞ்செழுத்து நம்மை அஞ்சாமல் வைக்கும்!
அளவற்ற நலன்களை அள்ளித்தரும்!

 - அதையும் வள்ளலார் விளக்கமாகச் சொல்கிறார்!
பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.!

பஞ்சாட்சரம் சொன்னால் பயம் கிடையாது! ஏன் தெரியுமா? நாம் கண்டு அஞ்சுகிற அனைத்தும் சிவபெருமானிடம் அடங்கி தன்னுடைய ஆற்றலைக் காட்டாமல் அமைதியாக அல்லவா இருக்கிறது! நெருப்பைக் கண்டு நாம் அஞ்சுகிறோம்! சிவனோ கையில் அனலேந்தி ஆடுகிறார்!
‘பாம்பு’ என்றால் படையே நடுங்குகிறது. பரமசிவன் கழுத்தில் அது பவித்திரமான மாலையாக அல்லவா தோற்றம் அளிக்கிறது! ‘விஷம்’ என்றால் நாம் விதிர்விதிர்த்துப் போய்விடுகிறோம்! அவரோ விட முண்டகண்டன்! விஷத்தையும் உட்கொண்டு பின் ஆனந்தமாக வீணையும் வாசிக்கிறாராம் அவர்!
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்மிக நல்ல வீணைதடவி

- என நயமாகப் பாடுகிறார் ஞானசம்பந்தர்!
‘சுடுகாடு’ என்ற சொல்லே நமக்கு அச்சம் தருகிறது! அவரோ சுடலையில் நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகிறார்.
மேற்சொன்ன அனைத்திற்கும் மேலான பயம் மரண பயம்! மரண பயத்தைக் கண்டு அலறாத மனிதர்களே கிடையாது. சிவனோ இயமனை இடதுகாலால் உதைத்தவர். இப்பொழுது புரிகிறதா?

நெருப்பு, பாம்பு, விஷம், சுடுகாடு, மரணம் ஐந்துக்குமே நீ அஞ்ச வேண்டாம்! அஞ்செழுத்தைச் சொல் என்றுதான் அருட்பிரகாசர் அஞ்சேல்! என்மேல் ஆணைகண்டாய்! என அறுதியிட்டு நல்வழிக்கு நம்மை சீரிய முறையில் சிவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் ‘நாமார்க்கும் குடிஅல்லோம்! நமனை அஞ்சோம்’ என நாமும் நாவுக்கரசர்போல நெஞ்சுயர்த்திக் கூறலாம்.

ஓர் இரவு விழித்து சிவபூஜை கண்டும், சிவநாமம் உச்சரித்தும் அன்றைய இரவைப் பகலாக ஆக்கிக்கொண்டால் இனி இருட்டே நம் வாழ்வில் இருக்காது என்கின்றனர், ஆன்றோர்கள்.

மாதமோ மாசி - இதில்
திருநீறு பூசி - அந்தமகா தேவனைப் பூசி! - அவன்
அடியார்களை நேசி! - பன்னிரண்டு
திருமுறைகளை வாசி! - உடனே
கிடைக்கும் இறை ஆசி!

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : Shiva ,
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!