×

லிங்க புராணம் கூறும் சிவ வழிபாடு

சிவபெருமானுக்கு  தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்). மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சிமுதல் திருத்தாள் வரைத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும். சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும்.

நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.  சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை  செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும் என்று லிங்க புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வழிபாடு :

சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும். சிவராத்திரிக்கு முந்தைய மாலை, காலத்தை நடராஜ மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோயிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

1. இரவின் முதல் காலம்:- ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

முதல் சாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம்,சர்க்கரைப் பொங்கல்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - ரிக்வேதம் , சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம்,  சந்தனம்
புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை
ஒளி- புஷ்பதீபம்

2. இரண்டாம் காலம்:- தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யஜுர் வேதம் ஓத வேண்டும்.

இரண்டாம் சாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக்
கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யஜுர் வேதம் , கீர்த்தித்
திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திரதீபம்

3. மூன்றாம் காலம் :- லிங்கோற்பவரை

வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

மூன்றாம் சாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம்,
ஜாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐந்துமுக தீபம்

4. நான்காம் காலம் :- சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

நான்காம் சாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்
(இடபாரூடர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெறும் சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்
திருவகவல்
மணம் - புனுகு சேர்ந்த சந்தனம்
புகை - கர்ப்பூரம், லவங்கம்
ஒளி- மூன்று முக தீபம்.

தொகுப்பு: ஆ.கலைச்செல்வன்

Tags : Shiva ,
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்