×

தன்னைத் தானே பூசித்த தயாபரன்-மதுரை

மாமன்னர்கள் தினமும் சிவபூசை செய்ய வேண்டும். சிவபூசையின் பயன் வேரில் ஊற்றப்படும் நீர், கிளை, இலை, தளிர், மலர் எல்லாவற்றையும் சென்றடைந்து அவற்றைப் புத்துணர்ச்சியுடன் வைப்பதுபோல் உலகையும் உலக மக்களையும் மகிழ்வுடன் வாழ வகை செய்கின்றது. மாமன்னர்கள் சிவபூசை செய்வதால் பெரும் வெற்றிகளையும், குழப்பமற்ற அமைதியான அரசியல் சூழலையும் அடைந்தனர். அதனால் அனைத்து அரசர்களுமே சிவபூசையைச் செய்து மேலான மேன்மைகளைப் பெற்றனர். மக்களும் சிவபூசையின் பயனாக இம்மையிலும் மறுமையிலும் பெரும் செல்வப்பேறு எய்துவர்.

 மாமன்னன் ராஜராஜன் தினமும் சிவபூசை செய்ததையும், தேவாரத்தைப் ஓதியதையும், அதைப் படிக்கச் சொல்லிக் கேட்டதையும் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். அவன் வழிபட்ட சந்திரசேகர மூர்த்திக்கு ‘‘தேவாரதேவர்’’ என்று பெயர் வழங்கியதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மன்னர்கள் உலக நன்மையை வேண்டிப் புதிய கோயில்களை எழுப்பியும், பழைய கோயில்களில் திருப்பணிகளைச் செய்வித்தும், தொடர்ந்து பூசனைகள் நடைபெற வேண்டி நிபந்தங்களை ஏற்படுத்தியும் செய்தும் சிறப் பெய்தினர்.

அவை யாவும் உலக நன்மைக்காக செய்யப்பட்டவைகளாகும். மன்னர்கள் தங்கள் குலம் வளரவும், செல்வாக்குப் பெருகவும், எதிரிகள் அடங்கி நிற்கவும், நாட்டில் வளமாக வாழ்வு பெருகவும், ஆத்மார்த்த பூசைகளைச் செய்தனர். பாண்டிய குலத்தில் தோன்றிய அரசர்களில் பலர் பெருஞ்சிவ பக்தர்களாக விளங்கியிருந்ததையும், வரகுண பாண்டியருக்காக சிவபெருமான் மதுரைக் கோயிலையே சிவலோகமாகக் காட்டியதையும் அருளாளர்கள் குறித்துள்ளனர்.  

சோமசுந்தரர் எனும் பெயரில் பாண்டிய மன்னனாகத் தோன்றி மீனாட்சியை மணந்து முடி புனைந்து தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த சிவபெருமானும் உலக வழக்கப்படி சிவபூசை செய்ததை வரலாறு கூறுகிறது. தானே எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானாக இருந்த போதிலும், பாண்டியர் குல வழக்கம் மாறாதிருக்கவும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் தினமும் அவர் சிவலிங்கத்தைப் பூசை செய்தார். அவ்வாறு அவர் வழிபட்ட லிங்கம் அமைந்த கோயில் இம்மையில் நன்மை தருவார் ஆலயம் என்றழைக்கப்படுகின்றது. இது மதுரையில் மேலமாசி வீதியில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் பெருமானை இம்மையில் நன்மை தருவார் என அழைக்கின்றனர். கருவறையில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் உமாமகேஸ்வரர் கோலம் பெரிய வடிவில் உள்ளது.

சோமசுந்தரப் பாண்டிய மன்னராக எழுந்தருளி, சிவபெருமான் பூசை செய்ததை அடுத்து உக்ரபாண்டியராக எழுந்தருளியிருந்து அரசாண்ட முருகப்பெருமானும் தொடர்ந்து இந்த மூர்த்தியைப் பூசை செய்து வந்தார். இந்த வரலாற்றை அடியொற்றித் திருப்பெருந்துறையில் சோமசுந்தரர் சிவபூசை செய்யும் ஐதீக விழா நடைபெறுகிறது.  

சமய இலக்கியங்களில் திருப்பெருந்துறை என்று போற்றப்படும் தலம் இந்நாளில் ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் முதன்மை பெற்ற உலாத் திருமேனியாக மாணிக்க வாசகரின் திருவுருவம் உள்ளது. இது அடியவரின் திருவுருவமாக இருந்தாலும் மதுரை சோமசுந்தரப் பெருமானுக்குரிய உபசாரங்களுடன் அவராகவே போற்றி வழிபடப்படுகின்றது.

சோம சுந்தரப் பெருமான் சிவபூசை செய்த வரலாற்றை நினைவூட்டும் வகையில் பெருந்திருவிழாவில் சிவபூசைக் காட்சி விழா நடைபெறுகிறது. ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் ஆறாம் நாள் நடைபெறும் பல்லக்கு விழாவில் பல்லக்கில் (மணிவாசகப் பெருமான்) சோமசுந்தரப் பெருமான் சிவபூசை செய்யும் கோலத்தில் பவனி வந்து காட்சியளிக்கிறார். இது தன்னைத் தான் பூசித்ததில் இரண்டாம் நிலையாகும்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Tags : Dayabaran-Madurai ,
× RELATED தன்னைத் தானே பூசித்த தயாபரன்-மதுரை