×

தைப்பூசமும் தமிழ் கடவுளும்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 41

முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் தொன்மையான வழிபாடு என்று தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்படும் பொழுது அனைவருக்குமே  விளங்கும்.‘சேயோன் மேயமை வரை உலகம்’ என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது. சங்கத் தமிழின் கடவுள் வணக்கமாகவே விளங்குகிறது.நக்கீரர் பாடியருளிய திருமுருகாற்றுப்படை.‘கல்தோன்றி மண்தோன்றாக்காலம்’என்பார்கள்.அதாவது மலைகள் தான் முதலில் இருந்தன. பின்னர் தான்  சமவெளிகள் வருவாயின.கல் என்கின்ற மலை தோன்றியவுடனேயே அதன் மேலே கந்த பெருமான் தோன்றிவிட்டான். அதனால் தான் குன்றிருக்கும்  இடமெல்லாம் குமரன் இருப்பான் ’ என்ற புகழ் மிக்க பழ மொழியும் உருவானது.எனவே காலத்தால் முற்பட்ட கந்தன் ‘தமிழ்த் தெய்வம்’ என்றே  அழைக்கப்படுகிறார்.‘நம் கடம்பனைப் பெற்றவள்’ என்றே பராசக்தியைத் தேவாரம் பாடுகின்றது.

‘நம் வள்ளி மண மாற்குத் தாதை கண்டாய்’ என்றே சிவபெருமானைத் தேவாரம் குறிப்பிடுகின்றது.குழந்தையின் பெருமையை முதலில் சுட்டிக் காட்டி,  அக் குழந்தைக்கு தாயும் தந்தையும் பராசக்தி, பரமசிவன் என தேவார ஆசிரியர்கள் பாடுவதிலிருந்தே முருகப் பெருமானின் பெருமையை முழுவதும்  நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா !ஆரம்ப வழிபாடாகத் திகழ்கின்ற ஆறு முகனைத்தான் தன் ஆரம்பப் பாடலிலேயே அரங்கேற்றம் செய்தார்  காவியக் கவிஞர் வாலி அவர்கள்.

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
அற்புதம் ஆகிய அருட்பெருஞ்சுடரே !
அருமறை தேடிடும் கருணையங்கடலே !
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே !
நினைப்பதும் நிகழ்வதும் நின்
அருளாலே!
கற்பதெல்லாம் உன்றன் கனி மொழி
யாலே காண்பதெல்லாம் உன்றன் கண்
விழியாலே !
 
முருகப் பெருமானை நம்மவர்கள் வழிபடும் பண்டிகைகள் பலவாக இருந்தாலும் அவற்றுள் தைப்பூசம் சிறப்பிடம் பெற்றுத்திகழ்கின்றது.காரணம் உத்தராயண புண்ணியகாலத்தில் இவ்விசேஷ நாள் வேலவன் விரதத்திற்கென்றே  அதுவும் கந்தனின் காலடி மலர்களில் காவடிகள்  சமர்ப்பிப்பதற்கென்றே உருவான பெருந்திருவிழா நன்னாளாக விளங்குகின்றது.
 
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே
முருகா  ஆட்டத்திலே
கண்டு என்றன் மனம் மகிழ்ந்தேன்
கூட்டத்திலே !
சேவடியைக் காண என்றே ஓடி வருவார்
அவர் சிந்தனையில் உன்றனையே பாடி
வருவார் ஏறாத மலையினிலே ஏறி வரு
வார் !-
ஏறுமயில் வாகனனைப் பாடவருவார் !
 தேரோடும் வீதி எங்கும் கூடி இருப்பார்
வள்ளி தெய்வயானை அம்மையொடும்
கண்டு களிப்பார் !

‘தைப் பூசம் தனி விசேஷம் ’
 
‘தரணி எங்கும் முருக கோஷம்’ எனச் சொல்லும் அளவிற்கு முத்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா, பினாங்,  கனடா, ஆஸ்திலேயா, லண்டன் என உலகின் பல பகுதிகளாலும் ஆன்மிக அன்பர்களால் மிக உற்சாகமாக் காவடி வழிபாடு. கந்தனுக்கு அபிஷேக  ஆராதனைவைபவங்கள், அன்பர்களுக்கு அன்னதானங்கள், நிகழ்கின்றன.மூன்றாம் படைவீடாகத்திகழும் பழநி மலை என்னும் திரு ஆவினன்குடியிலே  தைப்பூசப் பெருவிழா மிகமிக உன்னதமாக, உலக பக்தர்கள் ஒன்று சேரும் விதமாக நடைபெறுகிறது.தை அன்றை அறிந்துதானோ அருணகிரிநாதர்  அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று அடைமொழி கொடுத்துப் போற்றி இருக்கிறார்.காவடி வழிபாடு பிறப்பதற்கு காரணமாக விளங்கியவன்  ‘இடும்பன் ’. அந்த இடும்பன் பழநி மலையின் நடுப்பகுதியில் கோயில் கொண்டிருக்கின்றான்.அதன் காரணமாகவே ஆறு படைவீடுகளில் தைப்பூச விழா  நடை பெற்றாலும் பழநிமுக்கியத்துவம் பெற்றுள்ளது.இடும்பன் என்பவன் யார் என்று அறிந்து கொள்ளலாமா ? சுப்பிரமணிய கடவுளையே எதிர்த்துப்  போர் புரிந்த சூரபத்மனுக்கு போர்த் தொழில் பயிற்சிதந்தவன் தான் இடும்பன். சூராதி அவுணர்கள் முருகப் பெருமானின் வேலாயுதத்தால் வீழ்ச்சி  அடைந்த பிறகுதான் இடும்பன் தன் தவற்றை எண்ணி வருந்தினான்.

‘ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்க தீது புரியாத தெய்வமே’
 
என்று முருகனைப் புகழ்கின்றார் சிதம்பர சுவாமிகள்.செய்த பிழையை உணர்ந்து இடும்பன் மனத்தெளிவு பெற்று முருகனைச் சரணாகதி அடைய  எண்ணினான்.ஆறுமுகப் பெருமானால் உபதேசம் பெற்ற அகத்திய முனிவரை நாடி ‘தாங்கள் தான் எனக்கு ஏற்ற வழியைக் காட்டவேண்டும்’ எனப்பிரார்த்தித்தான்.‘இடும்பா ! சிவமலை, சக்தி மலை என்ற இருமலைகள் தற்போது கேதாரத்தில் உள்ளன. அவற்றை நீ அங்குச் சென்று முதலில்  எடுத்துவா! சண்முகப் பெருமாளை சரணாகதி அடைய ஏற்ற வழி தானே உருவாகும்’ என்றார் அகத்தியர்.பொதிகை மலை முனிவரை வணங்கி  கேதாரத்திற்குப் புறப்பட்ட இடும்பன் அவ்விருமலைகளையும் அடுத்து வந்தான்.ஆனால் பாதி வழியிலேயே பழநி மலை எதிர்ப்பட்ட போது பாரம்  தாங்காமல் அவன் பயணம் தடைப்பட்டது.

பழநி மலையின் மீதிலேயே அவ்விருமலைகளையும் வைத்து முருகப்பெருமானே ! இது என்ன சோதனை ! அகத்தியர் கட்டளையை  நிறைவேற்றமுடியவில்லையே ! உன் அருளைப்பெற முடியாதா’ என வருந்தினான். முருகப்பெருமான் காட்சி அளித்து ‘கண் கலங்காதே இடும்பா!இருமலைகளையும் உன் தோளில் காவடி போல தாங்கி வந்தாய்! தவற்றினை எண்ணி வருந்தி அகத்திய குருவின் ஆசியையும் பெற்றாய் !  சூரபத்மனையே மன்னித்து அவனுக்கு மறக்கருணை புரிந்த நான் உன்னை மன்னித் தேன் ! உனக்கு இங்கே சந்நதி அமையும். எதிர் காலத்தில்  அன்பர்கள் காவடி வழிபாடு நிகழ்த்தும் போது உன்னைக் கண்டு வணங்கியே, பின்னர் சிகரத்திற்கு வந்து என் தரிசனம் காண்பார்கள், என்றார்.
 
‘பகை நட்பாக் கொண்டு ஏழுகும் பண்புடையாளன்
 தகைமைக் கண் தங்கிற்றே உலகு’

என்று திருவள்ளுவர் பாடுகிறார்.பகைவனை அழிக்காமல், அவனிடம் உள்ள பகை உணர்வை அடியோடு நீக்கி அன்பு உணர்வால் அவனையும்  நண்பனாக்கிக் கொள்வதே சான்றோர்களின் இயல்பு என்று குறள்குறிப்பிடுகின்றது.
 
‘தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவார் என்கை
 ஆய்வும் வேண்டும்சொல்லோ! அடுசமர் அந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்!
 
தைப் பூசத்திருவிழா மேலும் பல சிறப்பு அம்சங்கள் பொருந்தியது. நம்செந்தமிழ் இலக்கியங்கள் சிறப்பாகப் பேசுவது வீரத்தையும் காதலையும் தான் !  அதற்காகவே வகுக்கப்பெற்றதும், தொகுக்கப் பெற்றதும் தான் புறநானூறு ! அகநானூறு!ரம் விளங்க வேல் பெற்றதும், காதல் சிறக்க தினைப்புன  வள்ளியை தேடிச் சென்று மணந்ததும் செந்தமிழ் முருகனின் திருவிளையாடல்கள்.அம்பிகையின் திருக்கரத்தால் வேல் பெற்றதும், ஆலோலம் பாடிய  குற மாதைக் காதல் மணம் புரிந்ததும் என்ற இரு பெரும் முருகனின் செயல்கள் நிகழ்ந்த நன்னாள் தான் தைப்பூசம்.ஆறு முகம், ஆறு படை வீடு,  சரவணபவ ஒன்றும் ஆறெழுத்து மந்திரம், சஷ்டியாகிய ஆறாவது திதி என அனைத்துமே ஆறாக அமைந்த கந்தனுக்குக் கொண்டாடப் பெறும்  விசேஷபண்டிகைகளும் ஆறு தான்.வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குஉத்திரம்.கந்தனை வந்தனை  செய்யும் தைப்பூசம் புனலாடும் புண்ணியத் திருநாளாகவும் போற்றப் பெறுகிறது.

 ‘ பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே’ என்றும்
‘தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்றும்
தேவாரப் பதிகம் நாவார இந்நன்னாளைப் போற்றுகிறது.
தைப்பூசத் திருநாளிப் சித்தி பெற்ற ராமலிங்க அடிகளார்
‘வாரும் ! வாரும் ! தெய்வ வடிவேல் முருகரே !
 வள்ளி மணாளரே வாரும் ’

என்று வேல் பெற்றதையும் , வள்ளியை மணந்ததையும் ஒரு சேரப்பாடுகிறார்.

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : Tamil ,gods ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...