×

மகாமக குளமும் கான் கோவிந்த தீட்சிதரும்...

பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்பநாயக்கர் அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மன்னர்களுக்கு அமைச்சராகவும் ராஜ குருவாகவும் இருந்தவர் ஸ்ரீகோவிந்த தீட்சிதர் ஆவார். இவர் சேவப்ப நாயக்கர் அரசவையில் அமைச்சராக , அரச குருவாக பொறுப்பேற்றதும் கல்விக் கூடங்கள், நூலகங்கள், குடிநீர் வசதிக்கு ஏரிகள் போன்றவைகளை அமைத்தார். மேலும் சேவப்பநாயக்கர் மகனான அச்சு தப்ப நாயக்கருக்கு குருவாக இருந்து அவருக்கு எல்லாவித பயிற்சிகளையும் கற்பித்தார். இதனால் மகிழ்ச்சியுற்ற மன்னர் பட்டீஸ்வரம் அருகில் உள்ள சிங்கராயன் பாளையம் என்ற ஊரை ராஜ குரு தீட்சிதரின் பெயரால் கோவிந்த குடி என்று அழைக்க உத்தரவு பிறப்பித்தார். அச்சுதப்ப நாயக்கருக்கப் பின் ரகுநாத நாயக்கர் ஆட்சியில் ராஜ குருவாக இருந்தார் தீட்சிதர்.

ஒரு நாள் மன்னரும் , தீட்சிதரும். கும்பகோணத்தில் உள்ள மகா மகக் குளக்கரைக்கு வந்தனர். அப்போது குளக்கரை மிகவும் மோசமாகவும் படிக்கட்டுகள் சிதிலமடைந்ததும் இருந்தன. பக்தர்கள் சிரமப்பட்டு நீராடிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட தீட்சிதர் மன்னரிடம் அரசே இந்த திருக்குளம் புராண கால பெருமையுடைய புனிதமான திருக்குளம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திருக்குளத்தில் கங்கை யமுனை  முதலான ஒன்பது நதி தேவதைகளும் வருகை தந்து தரிசனம் தருவார்கள்’ என்றார்.

இதனைக் கேட்ட மன்னர் ரகுநாத நாயக்கர் வியப்படைந்தார். மன்னரின் ஐயத்தைப் போக்குவதற்காக குளக்கரையில் அமர்ந்து பூஜை செய்தார். பூஜையின் போது புனித நதிகளுக்குரிய மந்திரங்களைச் சொல்லி எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அப்போது - அத்திருக்குளத்தில் ஒன்பது நதி தேவதைகளும் தங்களது பதினெட்டு கைகளை மேலே நீட்டதரிசனம் தந்தனர். இதனைக்  கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து கைகூப்பி வணங்கி மன்னர் தீட்சிதரின் தாள் பணிந்து ஆசி பெற்றார். பின்னர், மகான் கோவிந்த தீட்சிதரின் மகிமையை உலகறியச் செய்ய விரும்பிய மன்னர் அவரது எடைக்கு எடை தங்கம் , வெள்ளி, நவரத்தினங்கள் முதலியவற்றை துலாபாரமாக அளித்து கௌரவித்தார்.

மகான் தீட்சிதர் அவற்றை தான் ஏற்றுக் கொள்ளாமல். அவற்றை இறைபணிக்கு செலவிட தானமாக அளித்தார். சிதிலமடைந்து கிடந்த மகாமகத் திருக்குளத்தை சீர் செய்து படித்துறைகள் அமைத்தார். அத்துடன் பதினாறு மகா மண்டபங்களை குளத்தினை சுற்று அமைத்து இறைவன் அங்கு எழுந்தருளச் செய்தார். இறை சேவகராகத் தன் வாழ் நாளை அர்ப்பணித்து மகாமகத் திருக்குளத்தை புனரமைத்த பெருமைக்குரியவராய்த் திகழ்ந்த மகான் ஸ்ரீகோவிந்த தீட்சிதர் இறுதியில்’  கும்பேஸ்வரர் கோயில்  மங்களாம்பிகை சந்நதியில் தன் மனைவியுடன் இறைவனோடு ஐக்கியமானார் என்றும் சொல்வார்கள்.

தொகுப்பு: த.சத்தியநாராயணன், அயன்புரம்

Tags : Govinda Dikshitar ,Mahamakam Pond ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி