×

மக்களோடு மகேசன் கொண்டாடும் மாமல்லபுரம் மாசிமகம்

உலகப் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரமான கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரிஇருளர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். தங்கள் குலதெய்வமான கடல் கன்னியம்மனை வழிபட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆதிவாசிகள் எனப்படும் இருளர் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுதிரண்டு மாசிமகப் பெருவிழாவை விமரிசையாக கொண்டாடுவார்கள். 

மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்குளத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்தலசயனப் பெருமாள்  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளின் திருவருளைப் பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து மார்ச் 9 ஆம் தேதி காலை அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள், ஆதிவராகப் பெருமாளுடன், ஆகியோர்  கடற்கரையில் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் சக்கரத்தாழ்வாரை, கடலில் புனித நீராட்டுவார்கள். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி மகிழ்வார்கள்.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் எதிரில் உள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் பூக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வ, அழகிய தாமரை, ஆதவனின் ஒளிபட்டு மிளிர்ந்து தன் செவ்வண்ணப் பூச்சால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த ஈர்ப்புக்கு ஆட்பட்டவர்களில் முற்றும் துறந்த முனிவர் புண்டரீக மகரிஷியும் ஒருவர். பற்றற்ற புண்டரீக மகரிஷிக்கும் ஒரு ஆசை துளிர்விட்டது. அந்த அபூர்வ ஆயிரம் இதழ் தாமரையை, அந்த தாமரையைப் போன்ற பரந்தாமனின் சிவந்த பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆதிசேஷன் மீது சயனித்தபடி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை எப்படி அடைவது என்று எண்ணிய புண்டரீக மகரிஷி, சற்றும் தாமதிக்காமல் கடலில் இறங்கி கடல் நீரை இறைத்தார்.

அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் பசியாக இருக்கிறது. எனக்கு உணவு கொடுப்பாயா என முனிவரிடம் வேண்டினார். முனிவரும் மனம் இளகி இப்போதைக்கு முதியவருக்கு உணவு கொடுப்போம் என்று எண்ணி ஊருக்குள் சென்று உணவு யாசித்து வந்தார். வந்து பார்த்தபோது அங்கு முதியவரைக் காணவில்லை. ஆனால் கடல் நடுவே வழி பிளந்து பாதை உண்டாகி இருந்தது. இதனைக்கண்டு புண்டரீக முனிவர் திகைத்து நின்றபோது, முதியவர் தரையில் படுத்தபடி இடதுகையால் சைகை செய்து அழைத்தார். அவர் காலடியில் அந்த அபூர்வ தாமரை இருந்தது. பளிச்சென்று பொறிதட்டியது புண்டரீகருக்கு... கடலுக்கு வழி செய்தவர் இவரோ... இவரால்தான் இப்படிச் செய்ய முடியுமோ,, அப்படியானால் இவர் நிச்சயம் வாழ்க்கைக் கடலில் தத்தளிக்கும் மக்களை தாங்கிச் சென்றுகரை சேர்க்கும் கருணாகரனாகத்தான் இருப்பார் என்று எண்ணியபோது, முனிவரின் எண்ண ஓட்டத்தைப் படித்த பாற்கடல் பரந்தாமன் அவரை ஆட்கொண்டார்.

அதைத் தொடர்ந்து இடதுகை மடக்கி வாவென அழைக்கும் வகையில் வைத்துக்கொண்டு ஒரு கரத்தை உடலோடு ஒட்டி வைத்து மீதி இரு கரங்களை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு, கீழ் வலதுகையை உடலோடு சேர்த்து, அனந்த சயனத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வளத்தையும், உடல் நலத்தையும் அளித்து பக்தர்கள் தொடர்ந்து அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் காட்சியளித்து வருகிறார். திருமாலே கடலில் வழி அமைத்ததால் இத்தலம் அர்த்த சேது என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுடன் நிலமங்கை தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர் சந்நதிகள், பூதத்தாழ்வார் என தனித்தனி சந்நதிகளும் இங்கு உண்டு.

மாமல்லபுரம் மாசிமகம் காலம்காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாசிமக நன்னாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆதிவாசி எனப்படும் இருளர் இன மக்கள் தீர்த்தவாரிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வருகை தந்து விழாவுக்கான முன்னேற்பாடுகளை செய்கின்றனர். இருளர்கள் என்றால், அடர்ந்த காடுகளில் கொடிய விஷம் வாய்ந்த பூச்சிகளுக்கு மத்தியிலும், பயங்கரமான மிருகங்களுக்கு மத்தியிலும், வானுயர்ந்த மரங்களுக்கு இடையே உள்ள குகைகளிலும் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களும் தங்களை இருளர்கள் என்று அழைப்பதையே விரும்புகின்றனர். அரசும் பழங்குடியினர் பதிவேட்டில் இருளர் என்றே குறிப்பிட்டுள்ளது. இந்த பழங்குடியின மக்களின் பூர்வீகம் காஞ்சிபுரம் என்றே கூறப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 577 பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 36 வகையான பழங்குடியின மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. காடுகளை நம்பி வசித்து வந்த இருளர்கள் இயற்கையாகவே, பலவகையான வியாதிகளுக்கு இயற்கையான மூலிகைகளால் குணப்படுத்தும் இயற்கை வைத்திய முறையையும் அறிந்திருந்தனர். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய், பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய், பிரசவ கால லேகிய மருந்துகள், ஆண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்கள், விஷக்கடிகள் போன்றவற்றிற்கு மூலிகைகளால் மருந்து தயாரித்து குணப்படுத்துவதில் இருளர்கள் சிறந்து விளங்கினர். பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் பழங்குடி இருளர்கள் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் விளங்கினர். ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் குல தெய்வமான கடல் கன்னியம்மனுக்கு விமரிசையாக விழா எடுப்பார்கள்.

மாசிமகம் பௌர்ணமி நாளில் மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இனமக்கள் ஒன்றுகூடி, இருளர்களின் பாரம்பர்ய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என அன்று இரவு முழுவதுமே பௌர்ணமி வெளிச்சத்தில் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள். மாசி மகத்தன்று அதிகாலையிலேயே எழுந்து கடலில் குளித்து, மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபடுகிறார்கள்.  மாசிமகம் அன்றுதான் மகிழ்ச்சியாக சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கன்னியம்மனிடம் குறிகேட்டு ஏற்கனவே நிச்சயித்த திருமணத்தை நடத்துவது, சுபநிகழ்ச்சிகளை செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆறு, குளங்களில் நீராடுவது என்பது வேறு, பௌர்ணமி நாளில் கடலில் நீராடுவது என்பது வேறு. மாசிமகப் பெருவிழா அன்று கடலில் நீராடுவதால் 21 தலைமுறை பாவங்களும் விலகும் இதன்மூலம் நவகிரக தோஷம் நீங்கி, பலகோடி புண்ணியம் கிடைக்கும். மோட்சம் கிட்டும்.  அர்த்த சேது என்னும் இனிய புண்ணிய பலன் மற்றும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். பௌர்ணமி நாளில் கடலில் நீராடுவதால் வருடத்தின் 365 நாட்களும் நீராடிய, காசி, ராமேஸ்வரம் சென்றுவந்த பலன் கிடைக்கும்.

பெருமாளே கடலில் வந்து நீராடும் மாசி மக நன்னாளில் பெருமாள் குளித்த கடலில் நீராடினால் பெறும்பேறு உண்டாகும் என்று பக்தர்கள் மனமுருக மாசிமக நன்னாளில் கடலில் நீராடிச் செல்கின்ற காட்சி காணக்கிடைக்காத காட்சி... ஆகவே, வாழ்வில் வளம்பெறவும், நிலம் மற்றும் வீடு பெற்று வாழ்வாங்கு வாழ, வாழ்க்கையில் வாவென கையைத் தூக்கி அழைக்கும் மாமல்லபுரம் அருள்மிகு தலசயனப் பெருமாளை நாமும் ஒருநாள் சென்று தரிசிப்போம்.

Tags : Mamallapuram Massimakam ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?