×

பள்ளி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அதிரடி அகற்றம்-போலீசார் நடவடிக்கை

சேத்தியாத்தோப்பு :   சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலையில் மேம்பாலத்திற்கு கீழே நிரந்தரமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் செல்வதில் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேத்தியாத்தோப்பு போலீசார் வாகனங்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.  சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலையில் இரண்டு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும், அரசுதொடக்கபள்ளியும், இயங்கி வருகின்றன. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இயங்கி வருகின்றது. சுற்றுப்புற கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றன. பள்ளி வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கிறது. இதுதவிர அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்து செல்லும் 108 அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் மேல்நிலைப்பள்ளி சாலையில் வந்து செல்ல முடியாத அளவிற்கு மேம்பாலத்திற்கு கீழே போக்குவரத்துக்கு இடையூறாக கார்களும், சரக்கு வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தனர்.   இந்த பிரதான சாலையின் வழியாக சென்னிநத்தம், கிளாங்காடு ஆகிய இரண்டு கிராம மக்களும் சென்று வந்தனர். சமூகவிரோதிகள் சிலர் பாலத்தின் கீழே வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நடைபெற்று வந்தன. சமீபத்தில் பள்ளி மாணவிகள் இந்த மேம்பால பகுதியை கடக்க முயன்ற போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயத்துடன் தப்பி சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழே நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கிளாங்காடு, சென்னிநத்தம், கிராமவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தினகரன் நாளிதழிலில் செய்தி வெளியானதன் எதிரொலியாக சேத்தியாத்தோப்பு போலீசார் அதிரடியாக சென்று மேம்பாலத்தின் கீழே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை அகற்றினர். இதனால் பொதுமக்களும், மாணவர்களும் போலீசாரை பாராட்டினர். …

The post பள்ளி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அதிரடி அகற்றம்-போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chetyathopu ,Chettiyathopu High School Road ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!