×

திருவள்ளுவர் போற்றும் திவ்ய தேசம் தாடாளன்

அருகில் இருப்பது யார் என்பது கூட தெரியாத மை இருள். மிதமான சந்திர ஒளியை துணையாக கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். புதர்கள்  மண்டி இருந்த இடமாக பார்த்து, மறைந்து மறைந்து சென்றார்கள். பக்குவமாக பாதம் வைத்து நடந்தார்கள் இருவரும்.சருகுகள் காலில் மிதி படும் சத்தத்தை கூட,  வெகு லாவகமாக நடப்பதின் மூலம் அவர்கள் தவிர்த்தார்கள். சிறிது கூட சத்தம் வரக் கூடாது என்பதிலும், யாருடை கண்களிலும் பட்டு விடக் கூடாது,  என்பதிலும் இருவரும் தெளிவாக இருந்தார்கள்.  ஆனாலும் இருவரின் உடலும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? ஆற்காட்டு நவாபின்  அந்தப்புரத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தால் யாருக்குத்தான் அந்த நடுக்கம் இருக்காது?.

அந்த இருவரில் ஒருவர் தனது கேசத்தை பின் குடுமியாக போட்டிருந்தார். இடையில் துலங்கும் பஞ்ச கச்சமும், மார்பில் ஆடும் முப் புரி நூலும், உடலில்  சொல்லி வைத்தார் போல பன்னிரண்டு இடங்களில் தீட்டி இருந்த திருமண் காப்பும் , அவர் ஒரு வேதம் அறிந்த வைஷ்ணவர் என்பதை பறை சாற்றியது. அவர் அருகில் இருந்தவரின் நெற்றியிலும் திருமண் பிரகாசித்தது. அங்கங்களில் மின்னும் தங்க ஆபரணங்களும், உடுத்தி இருந்த பட்டு ஆடையும், அவர் நிச்சயம்  ஒரு பெரும் செல்வந்தர் என்பதை உணர்த்தியது. சிதம்பரம் என்பது அவரது திருநாமம்.  

சரி எதற்கு இருவரும் இப்படி கள்ளத் தனமாக அரண்மனைக்குள் நுழைகிறார்கள்? எல்லாம் காலம் செய்த கோலம். பாரத அன்னையை பிடித்த சனி. மிலேச்சர்கள்  என்ற கரையான்கள் , பாரத அன்னையை அரித்துக் கொண்டிருந்த சமயம் அது. அவர்களின் பொல்லாத அராஜகத்தால் அழிந்த கோவில்கள், கலை பொக்கிஷங்கள்  என பெரிய பட்டியலே உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. அதன் ஒரு அங்கமாக, ஆற்காட்டு நவாபின் ஆட்கள் தமிழகத்தை கைப்பற்றினார்கள். அதோடு  நில்லாமல் அநியாய வரி விதித்து அதற்கு,  தண்டால் என்ற பெயரையும் சூட்டினார்கள்.

ஒருமுறை,  அப்படி அவர்கள் வரி வசூலிக்க, சீர்காழி வந்தபோது, அநியாய வரி வசூலித்ததோடு நில்லாமல், சீர்காழி தாடாள (தடாளன் என்றும் சொல்லுவதுண்டு.  ஆனால் ஆழ்வார்கள் எல்லாம் தாடாளன் என்றே சொல்லுவதால் நாமும் அவர்களையே பின் பற்றுவோம் ) பெருமாளின் உற்சவ விக்ரகத்தையும் கவர்ந்து  சென்றுவிட்டார்கள். விஷயம் அறிந்த ஊர் மக்கள் தங்கள் உடலை விட்டு உயிரே பிரிந்தது போல உணர்ந்தார்கள். சிறியவர் முதல் , முதியவர் வரை “தாடாளா   தாடாளா” என்று ஒரே புலம்பல். ஊர் மக்கள் அனைவரும், துயரக் கடலில் மூழ்கிப் போனார்கள்.

ஆனால் அர்ச்சகரும், சிதம்பரமும் மட்டும் வருந்தவில்லை. மாறாக, “பெருமாளை மீண்டும் எப்படி ஊருக்கு கொண்டுவருவது?,’’ என்று சிந்தனையில்  ஆழ்ந்தார்கள். போர் செய்து மீட்க திறன் இருந்தது. ஆனால், மிலேச்சர்கள் யுத்த தர்மத்தை ஒரு போதும் பின் பற்ற மாட்டார்கள். ஆகவே அவர்களோடு போர்  புரிந்தால், தந்திரமாக யுத்தம் புரிவார்கள். தந்திர யுத்தத்தில், பல உயிர்களை பறி கொடுக்க, இருவருக்கும் மனது வரவில்லை.  என்ன செய்வது? என்றும்  தெரியவில்லை. இறுதியாக சீர்காழியில் கோவில் கொண்டிருக்கும் திருவிக்கரம பெருமானை (மூலவரின் திருநாமம்) சரண் புகுந்தார்கள்.

உண்ணாமல் உறங்காமல் அவனது திரு முன் விரதம் இருந்தார்கள். “ஒன்று எங்கள் ஊருக்கு திரும்பி வா! இல்லை எங்கள் உயிரை எடுத்துக் கொள்! நீ இல்லாத  ஊரில் நாங்கள் இருக்க மாட்டோம்’’ என்று பெருமானிடம் முறையிட்டு அவர்கள் அழுதார்கள். அவர்களது இந்த செயலைக் கண்டு ஊரே  “இப்படி ஒரு  பக்தியா?’’ என்று  பிரமித்து போனது. உண்ணாமல் பல நேரம் விரதம் இருந்ததால், இருவரும் மயங்கினார்கள். அவர்கள் இருவரது கனவிலும் தாடாள  பெருமான் காட்சி தந்தான். “ வருந்தாதீர்கள்! நாளை இரவு, யாரிடமும் சொல்லாமல், பயணத்தை ஆரம்பியுங்கள்.

நேராக ஆற்காட்டு நவாபின் அந்தப்புரத்திற்கு வாருங்கள். அதன் வடக்கு மூலையில் முதல் தளத்தில் இளவரசியின் அறை இருக்கிறது. நீங்கள் இருவரும்  மாளிகைக்குள் நுழைய வேண்டாம். அந்த இளவரசியின் அறையின் உப்பரிக்கையின் அடியில் மறைவாக நாளை இரவு நின்று கொள்ளுங்கள். நின்று கொண்டு  “வெண்ணெய் உண்ட தாடாளா வா! தவிட்டுப் பானை தாடாளா வா!” என்று அழையுங்கள் நான் ஓடிவந்து விடுவேன்.” என்று கூறி மறைந்தான். அவன்  கனவில் வந்து இட்ட கட்டளையை, நிறைவேற்ற தான் இருவரும், சீர்காழியில் இருந்து ஆற்காடு வரை வந்திருக்கிறார்கள்.

“வெறும் ஒரு கனவை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இது தெரிந்தால் உலகம் நம்மை நகைக்காதா?” சிதம்பரம் அருகில் இருந்த பட்டரில் காதில்  கிசுகிசுத்தார். “நீங்கள் சொல்வது போல், அது வெறும் கனவாக இருந்தால், அது இருவருக்கும் ஏன் ஒரே சமயம் வர வேண்டும்.? அதுவும் ஒரே கனவு”  நொடியில் வந்தது பட்டரின் பதில். அதிக சத்தம் வராமல் பட்டரும் கிசு கிசுக்கவே செய்தார். பட்டரின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று  சிதம்பரத்துக்கு தெரியவில்லை. ஆனால் நவாப்பிடம் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்?  என்பது மட்டும் அவரது மனதில் நிழல் ஆடிக் கொண்டே இருந்தது.

அந்த பயம் பட்டருக்கும் இருக்கிறதா?, என்று பார்க்க, “மன்னரிடம் மாட்டிக் கொள்வோமோ என்று பயமாக இல்லையா உங்களுக்கு?” என்று கேட்டார். “முதலில்  இருந்தது, இப்போது இல்லை” “எப்போதிலிருந்து பயம் போனது?” “இன்று நாம் இங்கு வரும்போது, கோட்டை காவலன் நன்கு தூங்கிக் கொண்டிருந்ததோடு  இல்லாமல் , கோட்டை கதவையும் திறந்தே வைத்திருந்தான். அதனால் தானே நம்மால் அந்தப்புரம் வரையில் ஒரு பாதகமும் இல்லாமல் வர முடிந்தது?. ஒரு  பாதகமும் இல்லாமல் அந்தப்புரம் வரை நுழைந்து விட்ட போதே, பயம் என்னை விட்டு ஓடி விட்டது.”

“அது என்னவோ உண்மை தான் சுவாமி. அவன் உறங்குவதை பார்த்தபோது, கண்ணன் பிறக்கும் போது அனைவரும், ஒரு மாய நித்திரையில் இருந்தார்கள்.  அதை பயன்படுத்தியே, வசுதேவர் அவரை மதுராவில் இருந்து கோகுலம் கொண்டு சென்று , விட்டு வந்தார் என்னும் புராண சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.”  நெகிழ்ந்தார் சிதம்பரம். “இப்போது கூட பாருங்கள்! நாம் பதுங்கி நடக்க தேவையே இல்லை என்னுமா போலே, அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம்  தான் , நமது மனத் திருப்பிக்காக மறைந்து மறைந்து நடக்கிறோம்.” பட்டரின் இதழ்கள் மெல்ல மொழிந்தது. பட்டர் சொன்ன பிறகுதான், சிதம்பரம் அதை  கவனித்தார். அவரால் அவரது கண்களையே நம்ப முடியவில்லை.

ஒரு முறை தான் காண்பது கனவு இல்லை, என்பதை உறுதி செய்து கொள்ள தன்னை கிள்ளியும் விட்டுக் கொண்டார். வலித்தது. எனில், காண்பது ஏதுவும் கனவு  இல்லை... ஆனால் இது எப்படி சாத்தியம்? சிதம்பரம் வியந்தார். அதற்குள் இளவரசியின் அறை வந்து விட்டது. அதன் மேல் தளத்தில் இருந்தாள் இளவரசி.  சொல்லி வைத்தார் போல அவள் மட்டுமே விழித்துக் கொண்டிருந்தாள். அவளது கையில் அழகாக தாடாள பெருமாள் வீற்றிருந்தார். அவரை அவள் தூக்கிப்  போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் இவை எதையும் சிதம்பரமும், பட்டரும் கவனிக்க வில்லை. இருவரும் முதல் தளத்து உப்பரிக்கையின் அடியில்  நின்று கொண்டார்கள். இருவரும் ஒரே சமயத்தில் கை குவித்தார்கள். மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்கள்.  

“வெண்ணெய் உண்ட தாடாளா வா! தவிட்டுப் பானை தாடாளா வா!” என்று ஜபிக்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று முறை ஜபித்திருப்பர்கள். அடுத்த  முறை ஜெபிக்க ஆரம்பிக்கும் போது “ அய்யோ” என்ற இளவரசியின் குரல் பலமாக ஒலித்தது. என்ன ஆனது? என்று பார்க்க சிதம்பரம் கண்களைத் திறந்தார்.  திறந்தவர் நொடியில் நடப்பதை உணர்ந்து தாவினார். தாவியவர், இளவரசியின் கை நழுவி - உப்பரிக்கைக்கு வெளியே, கீழே  விழுந்ததுக் கொண்டிருந்த தாடாள  பெருமானை, லாவகமாக பிடித்தார். நடந்ததை நம்ப முடியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பட்டர். அவரது வலது கையை, தனது இடது கையால் பிடித்துக்  கொண்டார் சிதம்பரம்.  

பெருமானை வலது கையால் பிடித்துக் கொண்டார். ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார். வழியில் மறந்தும் ஒரு முறை கூட ஓய்வெடுக்காமல், ஓட்டமும்  நடையுமாக சீர்காழிக்கு பெருமானை மீண்டும் கொண்டு வந்து சேர்த்தார்கள். இப்படி இருவரும் அரும்பாடு பட்டு கொண்டு வந்து சேர்த்த பெருமானை , வைகுண்ட  ஏகாதசி, அன்று மட்டுமே தரிசிக்க முடியும்.  இன்னும் தாடாளனின் மகிமைகள் எராளம். திருவள்ளுவரே இவரது பெருமையை பேசுகிறாரே.!  ஆம், திருக்குறளின்  610ஆம் பாடல், இப்பெருமானையே குறிக்கின்றது என்று , திருக்குறளை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீ.வி.வி.எஸ்.ஐயர் குறிக்கின்றார்.

“மடியிலா மன்னவன் எய்தும் , அடியளந்தான்
தா(அ)யது எல்லாம் ஒருங்கு ’’ குறள் 610

இதில் “தாயது அடி அளந்தான்” என்ற சொல் இந்த திவ்ய தேசத்து பெருமானையே குறிப்பதாக, சுதந்திர போராட்ட வீரரும், பேரறிஞருமான ஸ்ரீ வராஹனேரி  வெங்கடேச சுப்ரமணிய ஐயர் கூறுகிறார். திருவள்ளுவரே போற்றும் தெய்வத்தை கண்ணார காண ஆசை பிறக்கிறது இல்லையா?

தொகுப்பு: ஜி.மகேஷ்

Tags : Thiruvalluvar ,Divya Desam ,
× RELATED திருக்குறளில் வேள்வி!