×

மத்தூர் - மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம்தான் மகிஷாசுரமர்த்தினி எனப்படுகிறது. அர்ச்சுனன் துர்க்கையை வணங்கித்தான் போரில் வெற்றி பெற்றதாக  கூறுவர். இப்படி பல்வேறு தலங்களில் பல்வேறு கோலங்களில் அருள்கிறாள். அதில் சிறப்பு வாய்ந்ததாக மத்தூர் மகிஷாசுரமர்த்தினி விளங்குகிறது. ரயில்  பாதைக்காக நோண்டிய பள்ளத்திலிருந்து சட்டென்று வெளிப்பட்டாள். மண்ணை அகற்றி பார்த்தபோது அதியற்புதமான அஷ்டபுஜங்களோடு எவ்வித சிதைவுமின்றி  மேலெழுந்தாள்.

ஏழடி உயரத்தில் எழிற் கோலம் காட்டினாள். எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் திருமுகம் என்னவோ சாந்தமாக ஜொலிக்கிறது. செவ்வாய், வெள்ளி,  ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமி நாட்களில் 108 பால்குட அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும்  நடத்தப்படுகின்றன. திருத்தணி - திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில்  இத்தலம் அமைந்துள்ளது.

அந்தியூர் - பத்ரகாளி அம்மன்
 
மிகப்பழமை வாய்ந்த கோயில்கள் நிறைந்த ஊர். அவற்றில் இந்த பத்ரகாளியம்மன் கோயில் இரண்டாயிரம் வருடத்திய பழமையை கொண்டது. பக்தர்களின்  கனவில் வந்து பலன் சொல்வது இப்பகுதி மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. கோயிலில் அம்மன் தலையில் பூ வைத்து வாக்கு கேட்பது நடைபெறுகிறது.  போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டுமென்று எண்ணிய வீரர்கள் வெற்றித் தெய்வமாகிய காளிக்கு தமது பிரார்த்தனை நிறைவேற்றிய பின்  தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. இக்கோயிலில் தமது தலைகளை தாமே பலியிட்டுக் கொள்ளும் சில படிவங்கள்  காணப்படுகின்றன. அந்தியூரைச் சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈரோட்டிலிருந்தும்  பவானியிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு.

கோமதியம்மன்  -  சங்கரன்கோவில்
 
ஆடி என்றாலே அடித் தபசும் கோமதியம்மனும் நினைவிற்கு வரும். சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் தலம். ஈசனும், திருமாலும் சேர்ந்த கோலத்தில்  சங்கரநாராயணராக அருட்கோலம் காட்டும் அரிய தலம். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிர பாண்டிய மன்னர் இந்த ஆலயத்தை கட்டினார். சிறந்த  சிவபக்தரான மன்னன், மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பது வழக்கமாக இருந்தது. யானையின் மீதேறி மதுரை செல்லும்போது திடீரென்று யானை ஓரிடத்தில்  படுத்துக் கொண்டது.

எவ்வளவு முயன்றும் யானையை எழுப்ப முடியவில்லை. யானையைச் சுற்றிலும் அகழியை வெட்டினான். மேலும் அதே இடத்தில் பாம்புகள் இரண்டு சுற்றிக்  கிடக்க சிவலிங்கமும் கிடைத்தது. அரசனுக்கு வியப்பு தாங்கவில்லை. அன்றிரவே இறைவனின் கனவில் ஈசன் சிரித்தார். ‘‘நீ என்னை தரிசிக்க மதுரைக்கு  செல்ல வேண்டாம்,. இங்கேயே கோயில் கட்டி வழிபடு’’ என்றார். வன்மீகம் எனும் புற்றிலிருந்து ஈசன் தோன்றியதால் வன்மீகநாதர் என்றழைத்தனர்.

இக்கோயிலில் சிறப்பாக கோமதியம்மனின் ஆடித்தபசு நிகழ்வு விளங்குகிறது. ஈசனைக் காண தேவி புறப்பட்டு வரும் வைபவத்தையே ஆடித் தபசாக  கொண்டாடுகின்றனர். அம்பாள் இங்கு தவக் கோலத்தில் காட்சியளிக்கிறாள். ஆடித் தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று  நடந்தேறுகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

Tags : Mathur - Mahishasuramartini ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?