×

கண்ணமங்கலம் அருகே கோட்டை மலையில் குழந்தை வரம் அருளும் வேணுகோபால சுவாமி

வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சந்தவாசல் அருகே அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயில். சம்புவராய மன்னர்கள் படை வீட்டை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த போது அவர்களால் பல கோயில்கள் கட்டப்பட்டது. இதில் முதன்முதலாக சம்புவராயர்களின் தன்னாட்சியை நிறுவியவர் ராஜ கம்பீர சம்புவராயர். இவர் அமைத்த படை வீட்டில் ஒரு மலையின் பெயர் ராஜ கம்பீர மலை என்று இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2560 அடி உயரமுள்ள இந்த மலை உச்சியில் கட்டப்பட்டதுதான் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில்.  

சம்புவராய மன்னன் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோயில்தான் கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயில். இங்கு ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, பக்தர்கள் வேண்டும் வரத்தை வழங்கி அருளாட்சி புரிந்து வருகின்றனர். காலை நேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பெருமாள் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.  ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோயிலில் அமைத்துள்ளது.

ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இந்தப் பகுதியில் இருந்ததாகவும் சில ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது. அதில், ரேணுகாம்பாள் அம்மன் மற்றும் ராமச்சந்திர சுவாமி திருக்கோவில் தவிர மற்ற கோயில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டன. இக்கோயில் இன்றளவும் தன் கம்பீரத்தை இழக்காமல் உள்ளது. கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயிலின் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறத்தில் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியும் காணப்படுகிறது. விநாயகர், முருகன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

திருச்சுற்றில் ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருகில் சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் உட்பகுதியில் குளம் உள்ளது. இந்த கோயிலில் சனிக்கிழமை மட்டும் பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்ற 6 நாட்களும் தேவர்களும், சித்தர்களும் பெருமாளுக்கு பூஜை செய்து வருவதாக ஐதீகம். சனிக்கிழமை தோறும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும். இதைதொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

முக்தி, கல்வி, செல்வம் வேண்டும் பக்தர்கள் சந்தான கோபால என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டால் சகல சவுபாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் வேணுகோபால சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியத்தை தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட்டு புத்திர பாக்கியம் பெறலாம்.

அமைவிடம் :

வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் சந்தவாசல் பகுதியில் நின்று செல்லும். அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

Tags : Venugopala Swamy ,baby ,Kannamangalam ,Fort Hill ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…