×

மகத்தில் பிறந்தோர் பார்க்க வேண்டிய தலம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது மகம் நட்சத்திரத்தன்றோ வழிபட வேண்டிய திருத்தலம் திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் ஆலயமாகும். பரத்வாஜ மகரிஷி இத்தலத்தில் அருளும் மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவராவார். ஆலய முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. ஈசனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி ஈசனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது.

பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதந்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜையும் நடைபெறுகின்றன. பரத்வாஜரை குருவாகக் கொண்டுள்ளோர் அல்லது குருவாக வரிப்போர் இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவர். இத்தலத்தில் மாணிக்கவல்லி, மரகதவல்லி என்று இரண்டு அம்பிகையர் தரிசனம் அருள்கின்றனர். கிழக்கு நோக்கிய இந்த சந்நதிக்குள், அம்பாள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். இதுவொரு அபூர்வமான அமைப்பாகும். இந்த ஆலயத்தில் முனிவர்களும், யோகிகளும், ஈசனை அரூபமாக பூஜித்து வருவதாக ஐதீகம் நிலவுகின்றது.

சிவராத்திரியை ஒட்டி வரும் பெரும்பாலான நாட்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் படர்கின்றது. மாசி மகத்  திருவிழா இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்திலுள்ள விராலிப்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று அங்கிருந்து 2 கி.மீ. பயணித்தால் இக்கோயிலை அடையலாம். ஆட்டோ வசதிகளும் உண்டு.

Tags : Birthplace ,
× RELATED கொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால்...