ஐஸ்வர்யம் அருளும் கம்பராய பெருமாள்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பிரசித்தி பெற்ற கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில்கள்  உள்ளன. ஒரே வளாகத்தில் உள்ள இந்த கோயில்களில் மூலவர்களாக கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் உள்ளனர். விநாயகர்,  முருகன், அலமேலு மங்கை, காசி விசாலாட்சி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர்  சிலைகள் உள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இதனை பக்தர்கள் பிரம்மனாக  கருதி வழிபடுகின்றனர்.

இங்குள்ள முருகப்பெருமான் சிலைக்கு முன்புறம் 5  முகங்களும், பின்புறம் 1 முகமும் உள்ளது. மகாபாரத யுத்தத்தில்  அர்ஜூனனுக்கு தேரோட்டியாக பெருமாள் இருந்ததால், வைகுண்ட ஏகாதசியன்று  இங்குள்ள பெருமாள் சிலைக்கு மீசை அலங்காரத்துடன் பூஜை செய்யப்படுகிறது.  சக்கரத்தாழ்வார் சன்னதியில் 4 கைகளிலும் சக்கரங்களுடன் நரசிம்மர்  காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

கிபி 1529 முதல் 1564  வரை கம்பம் மற்றும் சுற்றுப்பகுதியை விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்த  விஸ்வநாத நாயக்கர் ஆட்சி புரிந்தார். காசி விஸ்வநாதருக்கும்,  பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென அவருக்கு நீண்ட  நாட்களாக ஆசை இருந்தது. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு  தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனது சிலை வடிவில் உள்ள ஒரு கல் கம்பத்தை  எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும்படி கூறி மறைந்தார். அதன்படி செய்த  மன்னர், சுவாமிக்கு கம்பராய பெருமாள் என திருநாமம் சூட்டினார்.

தொடர்ந்து  காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட லிங்கத்தை கம்பராய பெருமாள் கோயில் அருகில்  பிரதிஷ்டை செய்த அவர் 2 கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தினார். பிற்காலத்தில்  கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கேரள மாநிலம் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை  ஆட்சி செய்த மன்னர் பூஞ்சாறு தம்பிரான் 2 கோயில்களையும் பெரிய அளவில்  எடுத்து கட்டினார். 2 கோயில்களுக்கும் தனித்தனியாக கொடி மரங்கள்  உருவாக்கப்பட்டன.

கோயில் சுற்றுச் சுவற்றின் மீது எதிரிகளின் நடமாட்டத்தை  கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்ந்த மாடத்தில் தற்போது மொட்டையாண்டி  கோயில் உள்ளது. கிராம கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில்கள் 1972 முதல்  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆண்டுதோறும் ஆனி மாத பிரம்மோற்சவத்தின்போது கம்பராயபெருமாள்  கோயிலில் பட்டோலை வாசித்தல் வைபவம் வெகு  சிறப்பாக நடக்கிறது. ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில்  சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. திருவோண நட்சத்திர  நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம் ஏற்றப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி,  நவராத்திரி, அனுமன் ஜெயந்தி மற்றும் ராம நவமி ஆகிய தினங்களில் சிறப்பு  பூஜைகள் நடக்கின்றன. காசி விஸ்வநாதர் கோயிலில் சிவராத்திரி,  பிரதோஷம், ஆடிப்பெருக்கு, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்டவை விசேஷ  தினங்களாகும். அன்றைய தினங்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள்  மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன.

ஐஸ்வர்யம் உண்டாக, திருமணத்  தடை நீங்க, புத்திர தோஷம் நீங்க 2 கோயில்களிலும் பக்தர்கள் வேண்டுகின்றனர்.  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம்  அணிவித்து சிறப்பு பூஜை செய்கின்றனர். பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு  எண்ணெய் காப்பு செய்து, தயிர்சாதம், வடை மாலை படையலிட்டு வழிபடுகின்றனர்.மும்மூர்த்திகள்  தலமாக உள்ள இந்த கோயிலுக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.                                          

Related Stories:

>