×

சப்த மாதர்களை வழிபட நவகிரக தோஷம் விலகும்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு சப்த கன்னியர்கள் வீற்றிருந்து அருட்பாலிக்கின்றனர்.  நவகிரகதோஷம் இருப்பவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டால் தோஷங்கள் விலகும். ஒன்பது இலையில் மங்களப் பொருட்களை வைத்து வணங்கி, ஏழு  இலைகளை தானமாகவும், ஒரு இலையை பூஜை செய்பவருக்கும். மற்றொரு இலையை உறவினருக்கும் கொடுத்தால், நவகிரக தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

புற்று வடிவில் சப்த கன்னியர்

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கச்சிராப் பாளையத்தில் நாகபுத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு சுதை வடிவிலும், ஏழு புற்று வடிவிலும் சப்த கன்னியர்  உள்ளனர். நாகதோஷத்தை விலக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

திருமணத் தடைகள் விலக வழிகாட்டும் வாரியார்!

திருச்செந்தூர் திருப்புகழ் மிகமிக சக்தி வாய்ந்தது. இதில் விறல்மாரனைந்து எனும் திருப்புகழை தினமும் ஆறு தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே  தடைகள் விலகி திருமணம் நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப்  பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

இசைத் தூண் உள்ள கோயில்கள்

சப்தஸ்வரங்களான ‘‘சரிகமபதநீ’’ என்பது கோயில்களில் இசைத்தூண் வடிவிலும் நிறுவப்பட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள  இசைத் தூணைத் தட்டுகையில் சப்தஸ்வர ஒலி எழுவதைக் காணலாம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு  மாலய சுவாமி கோயிலிலும் இசைத் தூண்கள் உள்ளன.

பெருமாள் எதிரில் நந்தி

தேனி மாவட்டம், கடலூரில் உள்ள பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு எதிரே கருடனுக்குப் பதில் நந்தி எழுந்தருளியுள்ளார். மேற்குத் தொடர்ச்சி  மலையடிவாரத்திலுள்ள இக் கோயிலில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். கால்நடைகளைக் காத்தருளுபவராக இப்பெருமான்  வணங்கப்படுகிறார். எனவே இவருக்கு எதிரில் நந்தி இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கால்நடைகள் நோயின்றி வாழவும் விவசாயம் செழிக்கவும் இங்கு  வந்து பெருமாளையும், நந்தியையும் பூஜிக்கின்றனர் பக்தர்கள். திருநெல்வேலி மாவட்டம் கரெக்காட்டில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலில் சப்தமாதர்கள்  தனக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

Tags : Navagraha Dosha ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?