×

திருமண யோகம் தரும் தீப்பாய்ந்த நாச்சியார்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பூதங்குடி பகுதி காடுகளாக இருந்தது. குடியிருப்புகள் மிகக்குறைவு. அப்போது நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாள ராக இருந்த இவ்வூரைச் சேர்ந்த ஜெயராமன் பரம்பரைக்கு சேத்தியார்குடும்பம் என்ற பட்டப்பெயர் உண்டு. அந்தக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாடச்சென்றபோது 5 வயதுள்ள சிறுமியை தன்னந்தனியாக நிற்பதை பார்த்தார். உறவினர்களுடன் வந்தபோது வழி தவறி விட்டதாக கூறியதால் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார். அந்த சிறுமிக்கு நாச்சியார் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தச்சிறுமி தேவதையாக வளர்ந்து பருவ வயதை எட்டினாள். இந்நிலையில் நாச்சியாரை வளர்த்து வந்த சேத்தியார் உடல்நலம் குன்றி இறந்து விட்டார். அவரது உடலைத் தகனம் செய்ய கொண்டு சென்றபோது நாச்சியார், நானும் இடுகாட்டுக்கு வருவேன் என்றாள். ஊர் மக்கள் வேறு வழியின்றி மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்ற நாச்சியாரை அங்கிருந்தவர்கள் தடுத்தனர்.
 ஆனால் அந்தப்பெண் நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரணப் பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள்.

உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியப்படி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் எரியாமல் இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது புரியும் என்றாள். ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு  நாச்சியார் தீயில் பாய்ந்தாள். அடுத்த நொடியே தீயில் மறைந்து போனாள். ஆனால் தாம்பூலத்தட்டும், பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்து அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியாரின் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவளியினர் வழிபட்டு வந்தனர். தீயில் பாய்ந்து தெய்வமானதால் தீப்பாய்ந்த நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அங்கு நெடுஞ்சாலைத்துறையில் தலைமை பொறியாளராக இருந்த ஜெயராமன் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கோயில் எழுப்பினார். அதுதான் பல ஆயிரம் பக்தர்களின் குறைதீர்க்கும் ஆலயமாக தற்போது திகழ்ந்து வருகிறது.

இங்குள்ள புங்க மரத்தில் பிள்ளை வரம் வேண்டி வருபவரும், பல தோஷங்களால் திருமணம் தடைபட்டவர்களும் அந்த மரத்தில் தொட்டில் செய்து கட்டுவதும் மஞ்சள் கயிறு கட்டுவதும் வழக்கம். அதனால், கைமேல் பலன் ஏற்படுவதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் மாவிளக்கும், நெய் விளக்கும் ஏற்றி அம்பாளை வழிபடுகின்றனர். மேலும், மாசிமகம், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு போன்ற நாட்களில் சமய சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது. செல்வது எப்படி? இக்கோயிலின் மேற்கு வாயில் சென்னை- கும்பகோணம் சாலையிலும், கிழக்கு வாயில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையிலும் உள்ளது. இரண்டு வழிகளிலும் பக்தர்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் வரலாம்.  

Tags :
× RELATED சுந்தர வேடம்