×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

223. ந்யாயாய நமஹ: (Nyaayaaya namaha)

கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஒரு கதை. ஒருமுறை தேவ லோகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்று கூடிய தேவர்கள், மனிதர்கள் யாகங்கள்  மூலமாகத் தமக்குச் சமர்ப்பிக்கும் பொருட்களை எவ்வாறு தாங்கள் பெற்றுக் கொள்வது என்பது குறித்து விவாதித்தார்கள். “மனிதர்கள் நமக்காக அர்ப்பணிக்கும்  பொருட்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க ஒரு தூதுவரை நியமித்து விடலாம்!” என்று முடிவெடுத்தார்கள். தேவர்களுள் ஒருவரான அக்னியை (அக்னி I)  அத்தூதுவர் பதவியில் அமர்த்தினார்கள்.

நியமித்த சில மணித்துளிகளிலேயே அக்னி (I) உயிரிழந்தார். அதனால், அக்னியின் சகோதரனை (அக்னி II) அப்பதவியில் அமர்த்தினார்கள். அவரும்  அடுத்த சில மணித்துளிகளில் உயிரிழந்தார். அவரது சகோதரரான அக்னியை (III) அப்பதவியில் அமர்த்த, அவரும் உயிரிழந்துவிட்டார். இதைக் கண்ட  கடைக்குட்டி அக்னி (IV), “இந்தத் தூதுவர் பதவி ராசியில்லாத பதவி போலும்! அதனால் தான் நம் அண்ணன்மார்கள் பதவியேற்றவுடனேயே  உயிரிழந்துவிடுகிறார்கள்! அடுத்து நம்மை இந்த ஆபத்தான பதவியில் அவர்கள் அமர்த்துவதற்கு முன் நாம் தப்பித்து ஓடிவிட வேண்டும்!” என்று கருதிய அக்னி  (IV), தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டு தலைமறைவானார்.

அவரைப் பதவியில் அமர்த்தும் பொருட்டுத் தேடிய தேவர்களால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அப்போது தண்ணீருக்குள் இருந்து வெளியே புறப்பட்டு  வந்த ஒரு மீன், தேவர்களிடம் அக்னி உள்ளே ஒளிந்து கொண்டிருப்பதைச் செய்கை மூலம் காட்டியது. அந்தச் செய்கையைப் புரிந்து கொண்ட தேவர்கள்,  தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டிருந்த அக்னியைப் பிடித்து வந்து தூதுவர் பதவியில் அமர்த்தினார்கள். இதனால் கோபம் கொண்ட அக்னி, “ஏ மீனே! ஒளிந்து  கொண்டிருந்த என்னைத் தேவர்கள் பிடிப்பதற்கு நீ காரணமாகி விட்டாய்! இனி உனது இனமே தாழ்ந்த இனமாகக் கருதப் படட்டும்! என்னைத் தேவர்கள் வலை  வீசிப் பிடித்தது போல, மனிதர்கள் உன் இனத்தை வலைவீசிப் பிடிக்கட்டும்!” என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.

தூதுவர் பதவியேற்ற பின், அக்னிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. தொடர்ந்து அந்த தூதுவர் பணியைச் செவ்வனே செய்து வந்தார். ஆனால் அவரது சாபத்தால்,  மனிதர்கள் மீன்களைத் தாழ்ந்த உயிரினங்களாகப் பார்க்கத் தொடங்கினார்கள். வலைவீசி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். “சத்தியத்தைத் தானே நாங்கள்  பேசினோம்! எங்கள் இனத்துக்கு ஏன் இந்த இழிநிலை? எங்களை நீயே காக்க வேண்டும்!” என்று மீன்கள் திருமாலிடம் சென்று முறையிட்டன. அப்போது  திருமால், “பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காத உண்மையைத் தான் நாம் பேச வேண்டும்.

உண்மை என்ற ஒரே காரணத்துக்காகப் பிறர் மனம் புண்படும்படியோ, பிறரைப் பாதிக்கும்படியோ பேசக் கூடாது. (வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல்.) நீங்கள் கூறிய உண்மையால், அக்னியின் மனம் புண்பட்டது. அதனால் தான் அவர் சாபம் தந்து விட்டார். எனினும், நீங்கள் அஞ்சாதீர்கள்  உங்கள் குலத்தில், உங்களில் ஒருவனாக நான் அவதாரம் செய்து, மீன் இனத்தின் பெருமையை உலகுக்குக் காட்டுகிறேன்!” என்று மீன்களிடம் உறுதியளித்தார்  திருமால். பாண்டிய நாட்டில் வைகை நதியில் மீன் வடிவில் மத்ஸ்யாவதாரம் செய்த திருமால், அனைத்து உலகுக்கும் நன்மை செய்யக் கூடிய சத்தியமான  வார்த்தைகளை உடைய மத்ஸ்ய புராணத்தை உலகுக்கு உபதேசம் செய்தார்.

அந்தப் பெருமாளின் நினைவாகப் பாண்டிய மன்னர்கள் தங்கள் கொடியில் மீன் சின்னத்தை வைத்தார்கள். இழிபிறவிகளாகக் கருதப்பட்ட மீன்களுக்குப் பாண்டிய  தேசியக் கொடியிலேயே இடம் கிடைக்கும்படி மத்ஸ்யாவதாரப் பெருமாள் அருள்புரிந்து விட்டார். ஆகவே, மத்ஸ்யாவதாரத்தில், உண்மையைப் பேசிய மீன்களுக்கு,  வெறும் உண்மையைப் பேசாமல், அனைவருக்கும் நன்மையைத் தரவல்ல உண்மையைப் பேசும்படி அறிவுரை கூறியதோடு, அக்னியின் சாபத்தால் இழிந்த  பிறவிகளாய்க் கருதப்பட்ட அம்மீன்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தையும் தந்து, சத்தியவிரத ராஜரிஷி போன்ற அடியார்க்குச் சத்தியத்தை உபதேசமும் செய்து,  அனைவருக்கும் நியாயமாகச் செய்ய வேண்டிய நன்மைகளை எல்லாம் செய்து முடித்தார் திருமால்.

இவ்வாறு தன் அடியார்கள் அனைவருக்கும் ஏற்றதான, நியாயமான நற்செயல்களைச் செய்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘ந்யாய:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே  ஸஹஸ்ரநாமத்தின் 223-வது திருநாமம். நாமும் “ந்யாயாய நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், நமக்கு நியாயமாகக் கிட்டவேண்டிய  அனைத்து நன்மைகளும் நமக்குத் தவறாது கிட்டும்படி மத்ஸ்யமூர்த்தி அருள்புரிவார்.

224. நேத்ரே நமஹ (Nethre namaha)

அருணி என்ற முனிவருக்கும் அவரது மனைவியான சுபர்ணைக்கும் மகனாகப் பிறந்தவர் ஆருணேயர் என்ற முனிவர். அந்த ஆருணேயர், ஒரு முறை தன்  தந்தையான அருணியிடம், “உலகில் மிகவும் உயர்ந்த விஷயம் எது?” என்று கேட்டார். “வாய்மையே உயர்ந்தது!” என்றார் தந்தை. “வாய்மையைக்  கடைபிடிப்பது சிரமமாயிற்றே! அதைவிட உயர்ந்த விஷயம் இருந்தால் சொல்லுங்கள்!” என்று கேட்டார் ஆருணேயர். “தவம் உயர்ந்தது!” என்றார் தந்தை.  “தவம் புரிவதும் கடினம் தான். வேறு உயர்ந்த விஷயத்தைச் சொல்லுங்களேன்!” என்றார் ஆருணேயர்.

“புலன்களை அடக்குவது உயர்ந்தது!” என்றார் தந்தை. “அதுவும் கடினம்!” என்றார் மகன். “அப்படியானால் மனதை அடக்கு! அது புலனடக்கத்தை விடவும்  உயர்ந்தது!” என்றார் தந்தை. “மனவடக்கம் புலனடக்கத்தை விடவும் கடினம்!” என்றார் மகன். “அவ்வாறாயின், தானம் செய்! தானம், இவை அனைத்திலும்  உயர்வானது!” என்றார் தந்தை. “அதைவிட உயர்ந்தது இருந்தால் கூறுங்கள்!” என்றார் மகன். “வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளைச் சரியாகப் பின்பற்றி  வாழ்தல் உயர்ந்தது!” என்றார் தந்தை. “இல்லை தந்தையே! அதுவும் கடினம்! வேறு ஏதாவது உயர்வானதாகச் சொல்லுங்கள்!” என்று கேட்டார் மகன்.  

“அக்னிஹோத்ரம் செய்து முத்தீ ஓம்புதல் உயர்வானது!” என்றார் தந்தை. “அதுவும் நம்மால் இயலாதே!” என்றார் மகன். “அப்படியானால், தினமும்  இறைவனுக்குப் பூஜை செய்! அது மிகவும் உயர்ந்த செயல்!” என்றார் தந்தை. “தந்தையே நாம் பூஜை செய்கிறோம்! ஆனால், சாஸ்திரப்படி செய்யாமல்,  சௌகரியப்படி அதைச் செய்துகொண்டிருக்கிறோம். அதனால் வேறு ஏதாவது உயர்ந்த விஷயமாக, இதுவரை சொன்ன அனைத்தையும் விட மேம்பட்டதாக  ஒன்றைச் சொல்லுங்கள்!” என்று கேட்டார் மகன். “சரணாகதியே இவை அனைத்தை விடவும் உயர்ந்தது.

இதுவரை சொன்ன எதையும் நம்மால் செய்ய இயலாது என உணர்ந்து, எல்லாம் வல்ல இறைவனே கதி என்று புரிந்து கொண்டு, அவனது திருவடிகளைத்  தஞ்சமாகப் பற்றுவது தான் மிகச்சிறந்த செயலாகும்! இறைவனே கதி என்று அவனைச் சரணடைந்தால், நாம் செய்யவேண்டியதை எல்லாம் இறைவனே செய்து  நமக்குப் பெரும் பேற்றை அருளிவிடுவான்!” என்று தந்தை கூறினார். இந்த சரணாகதி தத்துவத்தை மேலும் விளக்கிய அருணி, “பிறவிப் பெருங்கடலை நம்  முயற்சியால் நீந்திக் கடப்பது என்பது இயலாத காரியம் என்று புரிந்து கொண்டு, இறைவன் என்னும் தோணியைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பற்றினால், இறைவன் நம்மைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து காத்து, நம்மை அக்கரையில் சேர்த்துவிடுவார். பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும்  தோணியாகத் தான் இருப்பதை இறைவன் நமக்குக் காட்டிய அவதாரம் மத்ஸ்யாவதாரம் ஆகும்!” என்றார். மத்ஸ்யாவதாரத்தில், ஊழிக் கடலில் சிக்கித் தவித்த  சப்தரிஷிகளையும், பாண்டிய மன்னனையும், வேதங்களையும் மீனாய் வந்து காப்பாற்றி, ஊழிக்கடலைக் கடக்க உதவினார் அல்லவா? அவ்வாறே, பிறவிப் பெரும்  கடலில் சிக்கத் தவிக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மையும், தோணிபோல் வந்து காத்து, இக்கடலைக் கடக்க இறைவன் உதவுவார் என்ற உயர்ந்த தத்துவத்தை  மத்ஸ்யாவதாரம் காட்டுகிறது.

இவ்வாறு முக்தியடைவதற்கான முயற்சிகளைச் செய்ய இயலாத அடியார்கள் விஷயத்தில், அவர்களுக்குத் தலைவன் என்ற முறையில் அவர்களைக் காக்கும்  பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு, தோணிபோல் இருந்து அவர்களைக் காத்தருள்வதால், திருமால் ‘நேதா’ என அழைக்கப்படுகிறார். ‘நேதா’ என்றால்  நிர்வாகியாய் இருந்து நம்மைக் காப்பவர் என்று பொருள். (நிர்வாகிகளையும் தலைவர்களையும் நேதாஜி என்று அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.) அதுவே  விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 224-வது திருநாமம். “நேத்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்வாழ்வுக்கான நிர்வாகத்தைத் திருமால்  ஏற்று, அவர்களுக்கு நல்லருள் புரிவார்.

225. ஸமீரணாய நமஹ (Sameeranaaya namaha)

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்தன் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரது கனவில் ஒரு மீன் தோன்றி, “நான்  நாகளாபுரம் அருவிக்கு அருகே உறைந்து போய் உள்ளேன்! என்னை நீங்கள் தான் மீட்க வேண்டும்!” என்று சொல்லி வந்தது. அது ஏதோ பிரமை என்று  அலட்சியமாக எண்ணினார் கோவிந்தன். ஒருநாள் அவரது கனவில் மத்ஸ்யமூர்த்தியாகத் திருமால் காட்சி தந்தார். “சோமகாசுரன் என்ற அசுரன்  பிரம்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்று கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

அவனிடமிருந்து வேதங்களை மீட்பதற்காக, நான் மீன் வடிவம் ஏற்று, அவனை வென்று வேதங்களை மீட்டேன். நீண்ட காலம் பிரளயக் கடலுக்கு அடியில்  இருந்தபடியால் உறைந்து போய்விட்டேன். நாகளாபுரம் அருவிக்கு அருகிலிருக்கும் என்னை வந்து மீட்டெடுப்பாயாக!” என்று மத்ஸ்யமூர்த்தி அவரிடம் சொன்னார்.  இதைக் கேட்டு விழித்துக் கொண்ட கோவிந்தன், மன்னர் கிருஷ்ணதேவ ராயரைச் சந்தித்து இச்செய்தியைச் சொன்னார். கிருஷ்ணதேவ ராயரும், அவரது குருவான  தாத்தாச்சாரியாரும், மற்ற மந்திரிகளும் நாகளாபுரம் அருவிக்கு அருகே கோவிந்தன் சொன்ன இடத்தைத் தோண்டிப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு அழகான திருமால் விக்கிரகம் கிடைத்தது. இடுப்புக்குக் கீழே மீன் வடிவிலும், இடுப்புக்கு மேலே மனித வடிவிலும் திருமால் காட்சியளித்தார்.  அருகில் ஸ்ரீதேவி, பூதேவிகளும் இருந்தார்கள். கையில் பிரயோகச் சக்கர வடிவில் சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்ய சங்கையும் மத்ஸ்யமூர்த்தி  ஏந்தியிருந்தார். கோவிந்தன், “மன்னா! இதே வடிவைத் தான் நான் கனவில் கண்டேன். கடலுக்குள் இருந்தபடியால் தான் உறைந்து போய்விட்டதாகத் திருமால்  கூறினார்!” என்றார். அப்போது குறுக்கிட்ட ராஜகுருவான தாத்தாச்சாரியார், “பெருமாள் உறைந்து போகவில்லை.

‘மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது’ என்று ஆழ்வார் பாடியுள்ளார். திருமாலின் திருமேனி குளிராலோ வெப்பத்தாலோ எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது.  ஒரு லீலை செய்து, வித்தியாசமான இந்தத் திருக்கோலத்தை அனைத்துலகுக்கும் காட்ட வேண்டும் என்று திட்டமிட்ட  திருமால், உறைந்து போனவர் போல்  நடித்து, நம்மைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு இன்று வெளியே வந்துவிட்டார்! தான் செய்யும் அனைத்து லீலைகளையும் உலகுக்கு நன்மை பயக்க  வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் செய்வார்!” என்று கூறினார்.

அதன்பின் கிருஷ்ணதேவராயர் அங்கேயே மத்ஸ்யமூர்த்திக்குப் பெரிய கோயில் கட்டினார். நாகம்மாள் என்று பெயர் பெற்ற தன் அன்னையின் நினைவாக  அவ்வூருக்கு நாகலாபுரம் என்று பெயரிட்டார் மன்னர். வேதங்களை மீட்பதற்காக மீனாய் அவதரித்தபடியால், ‘வேதநாராயணன்’ என்றே பெயர் அப்பெருமாளுக்குப்  பெயரிட்டார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள இக்கோயிலில், மேல் பாதியில் மனித வடிவிலும், கீழ்ப்பாதியில் மீன் வடிவிலும்  காட்சிதரும் வேதநாராயணப் பெருமாளை இன்றும் காணலாம்.

பாதி மீன், பாதி மனிதன் என வித்தியாசமான திருக்கோலத்தில் காட்சி தந்து அடியார்களின் மனங்களை ஈர்ப்பதற்காக, கிருஷ்ணதேவராயரையும்,  தாத்தாச்சாரியாரையும், கோவிந்தன் என்ற பக்தரையும் திருமால் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதை இதன் மூலம் உணர முடிகிறதல்லவா? ஒவ்வொரு  வருடமும் பங்குனி மாதம் 12, 13, 14 ஆகிய நாட்களில் சூரியனின் கதிர்கள் வேதநாராயணப் பெருமாள் கோயிலின் வாசல் வழியாக வந்து பெருமாள் மேல்  படர்வதைக் காணலாம். பங்குனி 12-ம் தேதி பெருமாளின் திருவடியிலும், 13-ம் தேதி திருமார்பிலும், 14-ம் தேதி நெற்றியிலும் சூரிய ஒளி வீசுவதைக் காணலாம்.  சூரிய பூஜை என்றழைக்கப்படும் இந்த அதிசயத்தை வேறெங்கும் காண இயலாது.

‘ஸமீரண:’ என்றால் அனைவராலும் விரும்பத்தக்கது என்று பொருள். நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாளின் தல வரலாற்றில் நாம் கண்டது போல்,  அனைவராலும் விரும்பத்தக்கதான, அடியார்க்கு நன்மைபயக்க வல்லதான தோற்றத்தையும் செயல்களையும் உடையவராய் விளங்குவதால், திருமால்  ‘ஸமீரண:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 225-வது திருநாமமாகும். “ஸமீரணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும்  அடியார்கள் செய்யும் செயல்களும் உலகுக்கு நல்ல பயன்களைப் பயக்கும் செயல்களாக அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

(‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற 226-வது திருநாமம் தொடங்கி, அடுத்து வரும் சில திருநாமங்களால், வேதத்தின் ஒரு பகுதியான புருஷ ஸீக்தம் காட்டும் திருமாலின் குணங்களை வேத வியாசர் பட்டியலிடவுள்ளார். மத்ஸ்யாவதாரத்தைச் சொன்னவுடன், அதன் தொடர்ச்சியாக, அந்த  மத்ஸ்யமூர்த்தி மீட்டெடுத்துத் தந்த வேதங்கள் கூறும் பகவத் குணங்களை விளக்குவது பொருத்தமாக இருக்குமல்லவா?)

226. ஸஹஸ்ரமூர்த்நே நமஹ (Sahasramoordhne namaha)

(“ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்” என்கிறது வேதத்தின் புருஷ ஸுக்தம். இறைவன் ஆயிரம் தலைகளோடும், ஆயிரம் கண்களோடும்,  ஆயிரம் திருவடிகளோடும் திகழ்கிறான் என்பது இதன் பொருள். இந்த வாக்கியத்தை விளக்கும் வகையில், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், ஸஸ்ரமூர்த்தா (226-வது  திருநாமம்), ஸஹஸ்ராக்ஷ: (228-வது திருநாமம்), ஸஹஸ்ரபாத் (229-வது திருநாமம்) ஆகிய திருநாமங்கள் இடம்பெற்றுள்ளன.) இலங்கை அசோக வனத்தில், ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு, அவளிடம் தான் ராமதூதன் என நிரூபித்து, ராமனின் முத்திரை  மோதிரத்தையும் வழங்கிய அனுமனின் வீரதீர பராக்கிரமங்களை எண்ணி வியந்தாள் சீதை. அனுமனைப் பாராட்டி அவள் ஒரு ஸ்லோகம் சொன்னாள்.

“விக்ராந்தஸ்த்வம் ஸமர்த்தஸ்த்வம் ப்ராக்ஞஸ்த்வம் வாநரோத்தம! |
யேநேதம் ராக்ஷஸபதம் த்வயைகேந ப்ரதர்சிதம் ||”
(வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்)

இந்த ஸ்லோகத்தில் சீதை அனுமனின் ஐந்து முக்கிய குணங்களை எடுத்துக் காட்டுகிறாள்.

1. விக்ராந்த: - திறமைசாலி

அனுமனே! தேவர்களின் கோட்டையான தேவ லோகத்துக்குள் சென்று, அங்கிருந்து அமுதத்தைக் கொண்டு வந்த கருடனைப் போல, ராவணனின் கோட்டையான  இலங்கைக்குள் நுழைந்து என்னை  கண்டுபிடித்தமையால், திறமையில் நீ கருடனைப் போன்றவனாகத் திகழ்கிறாய்.

2. சமர்த்த: - சாமர்த்தியசாலி

இரணியன் பிரம்மாவிடமிருந்து பற்பல வரங்களை வாங்கியிருந்தாலும், அந்த வரங்களை எல்லாம் மீறி, சாமர்த்தியத்தோடு வந்து அவனை நரசிம்மர் வதம்  செய்தாற்போல், நீ இலங்கைக்கு வரும் வழியில் உள்ள தடைகளை எல்லாம் சாமர்த்தியத்துடன் மீறி உள்ளே நுழைந்தபடியால், சாமர்த்தியத்தில் நரசிம்மரைப்  போன்றவனாகத் திகழ்கிறாய்.

3. ப்ராஜ்ஞ: - அறிவாளி

புத்திகூர்மையில் நீ கல்விக் கடவுளான ஹயக்ரீவரைப் போல் விளங்குகிறாய்.

4. யேநேதம் ராக்ஷஸபதம் த்வயைகேந ப்ரதர்சிதம் - பலசாலி

பிரளயக் கடலில் மூழ்கி இருந்த பூமி தேவியை, வராகப் பெருமாள் தனி ஒருவராக வந்து மீட்டுக் காத்தது போல், அரக்கர்கள் குழுமியிருக்கும் இந்த இலங்கையை  வெல்வதற்கு நீ ஒருவனே போதுமானவன். வலிமையில் வராகப் பெருமாளை ஒத்திருக்கிறாய்.

5. வானரோத்தம

வானரர்களுள் தலைசிறந்தவனாக நீ விளங்குகிறாய்.

இந்த ஐந்து திறமைகளே அனுமனின் ஐந்து முகங்களாயின. கருட முகம், நரசிம்ம முகம், ஹயக்ரீவ (குதிரை) முகம், வராக (பன்றி) முகம், வானர முகம் என  ஐந்து முகங்களோடு பஞ்சமுக ஆஞ்ஞநேயராகப் பல இடங்களில் அனுமன் காட்சி தருகிறார். ஆனால் பஞ்சமுக ஆஞ்ஞநேயர் என்றால் ஐந்து முகங்கள்  உடையவர் என்று மட்டும் பொருளில்லை. திறமையில் கருடனைப் போலவும், சாமர்த்தியத்தில் நரசிம்மரைப் போலவும், ஞானத்தில் ஹயக்ரீவரைப் போலவும்,  வலிமையில் வராகரைப் போலவும், வானரர்களுள் தலைவராகவும் அனுமன் விளங்குவதையே இந்த வடிவம் குறிப்பால் நமக்கு உணர்த்துகிறது.

அதுபோல, வேதப்பகுதியான புருஷ சூக்தம் “ஸஹஸ்ரசீர்ஷா புருஷ:” (இறைவன் ஆயிரம் தலைகளுடன் கூடியவன்) என்று சொல்லும் போதும், அதற்கு  நேரடியாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான மனிதர்கள், தங்களின் தலைகளில் உள்ள மூளைகளைக் கொண்டு எவ்வளவு சிந்திப்பார்களோ,  அதைக் காட்டிலும் அதிகமான சிந்திக்கும் ஆற்றலும் ஞானமும் கொண்டவன் இறைவன் என்பதையே இறைவன் ஆயிரம் தலைகள் கொண்டவன் என்ற இந்தப்  புருஷஸுக்த வாக்கியம் உணர்த்துகிறது. ராவணனுக்குப் பத்துத் தலைகள் என்று சொல்லும் போதும், பத்துப் பேரின் சிந்திக்கும் திறனைப் பெற்றவன் என்று  பொருள் கொள்ள வேண்டும் எனப் பெரியோர் கூறுவர்.

‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘மூர்த்தா’ என்றால் தலை. இறைவன் தனது ஞானத்திலும் சிந்திக்கும் ஆற்றலிலும், ஆயிரக்கணக்கான மனிதர்களின்  தலைகளில் உள்ள மூளைகளின் திறனைவிட உயர்ந்து விளங்குவதால், ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்  226-வது திருநாமம்.

“ஸஹஸ்ரமூர்த்நே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தைத் திருமால் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!