×

இறைவனுக்கு நாம் செலுத்தும் ‘பில்’

பாக்தாதை கலீஃபா ஹாரூன் ரஷீத் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். இப்னு சம்மாக் எனும் இறைநேசர் மிகப்பெரும் ஞானி. உலகத்தையும் உலகச் செல்வங்களையும் துச்சமாக மதித்து வாழ்ந்தவர். மன்னர்களையோ அரசு அதிகாரிகளையோ ஒருபோதும் தேடிச் சென்றதும் இல்லை. உதவிகள் கேட்டதும் இல்லை. கலீஃபா ஹாரூன் ரஷீதிற்கு ஓர் ஆசை. தம் ஆட்சியைக் குறித்து ஞானி இப்னு சம்மாக்கிடம் வாழ்த்துரை வாங்கிவிட வேண்டும் என்று. ஒருமுறை ஞானியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, கலீஃபா ஹாரூன் ரஷீத் கேட்டார்.

“இறைநேசச் செல்வரே...என் பரந்து விரிந்த ஆட்சி குறித்துத் தாங்கள் எதுவும் கூற வில்லையே?” எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்த மகா ஞானி, “ஒரு தம்ளர் தண்ணீருக்கு இணையானது தான் உன் ஆட்சி” என்றார். கலீஃபாவுக்குக் கோபத்தால் முகம் சிவந்தது.  அடக்கிக் கொண்டு கேட்டார் “தாங்கள் சொன்னதன் பொருள்?” “நீங்கள் கடுமையான தாகத்தால் தவிக்கிறீர்கள். எங்கும் தண்ணீர் இல்லை. அப்போது அரை தம்ளர் தண்ணீருக்காக நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள்?” “என் நாட்டில் பாதியைக் கொடுப்பேன்” என்றார் கலீஃபா.

“உள்ளே சென்ற தண்ணீர் வெளியேறாமல் இருந்துவிட்டால்...? வலியால் துடிப்பீர்கள். அந்தத் தண்ணீர் வெளியேற என்ன விலை கொடுப்பீர்கள்?” “என் நாட்டில் பாதியைக் கொடுப்பேன்.” “உங்கள் நாடும் ஆட்சி, அதிகாரமும் ஒரு தம்ளர் தண்ணீருக்குச் சமம் ஆகிவிட்டது அல்லவா? இந்த இழிவான உலக இன்பங்களில் ஏன் மூழ்க வேண்டும்? மறுமையை எண்ணி வாழுங்கள்” என்றதும் கலீஃபா அவர்கள் இறையுணர்வால் உந்தப்பட்டு அழுதார்கள். இயற்கைக் கடன்கள் உடலில் இருந்து வெளியேறுவது இறைவனின் அருட்கொடையாகும். நாம் அருந்தும் நீர் வெளியேறாமல் இருந்துவிட்டால் என்ன ஆகும்?

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றபோது அருகில் இருந்த அவருடைய மனைவி கூறினார். ‘‘வாழ்நாள் முழுக்க எத்தனையோ முறை சிறுநீர் கழிக்கிறோம். இறைவன் ஒருமுறை கூட “பில்” போட்டதில்லை. ஆனால் இங்கே ஒவ்வொரு முறை சிறுநீரை வெளியேற்றுவதற்கும் “பில்” போடுகிறார்கள்.’’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கழிப்பறைக்கு உள்ளே செல்லும்போதும் வெளியேவரும் போதும் பிரார்த்தனை செய்வார்களாம். கழிவறைக்கு உள்ளே செல்லும்போது “இறைவா...ஆண்- பெண் ஷைத்தான்களிடம் இருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பார்கள்.

இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு வெளியேறும்போது, “என்னிலிருந்து சிரமங்களை அகற்றி நலம் அளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறுவார்கள். நாம் என்றைக்காவது கழிவறைக்குச் செல்லும்போதோ அங்கிருந்து வெளியேறும்போதோ பிரார்த்தனை செய்தது உண்டா? இல்லையெனில் நபிகளார்(ஸல்) கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனையை இனியாவது ஓதிவருவோம். கருணையுள்ள இறைவன் செய்த உதவிக்கு நாம் செலுத்தும் “பில்”  அந்தப் பிரார்த்தனையும் நன்றியும்தான்.

- சிராஜுல்ஹஸன்

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்