×

மகா சிவராத்திரி உரைக்கும் தத்துவம்

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி அர்த்தராத்திரி லிங்கோத்பவ காலம். இதனையே மகாசிவராத்திரி என்கிறோம். இது இரவு நேரப் பண்டிகை. உபவாசமிருந்து கண்விழித்து வழிபட வேண்டிய விசேஷ தினம், இதிலுள்ள சங்கேதங்களை கவனித்தால் ஆன்மீக சாதனைக்குத் தேவையான அனேக ரகசியங்கள் இருப்பது தெரியவரும். ‘ராத்திரி’ என்பது அனைத்து சந்தடிகளும் உலக விவகாரங்களும் அடங்கிய நிலை. அதிலேயும் அர்த்தராத்திரி. இதனை ‘துரீய சந்தியா என்பார்கள்.ப்ராத : சந்த்யா, மாத்யான்ன சந்தியா, சாயம் சந்தியா காலங்கள் பொதுவாக உலக விவகாரத்தில் புழங்கி வருபவை.

நான்காவதான துரீய சந்தியா முழுவதும் தியானத்தோடு சம்பந்தப்பட்டது. அனைத்து துன்பங்களும் கதறல்களும் அடங்கிய அசையாத நிலை தியானத்திற்கு மிகவும் அவசியம். அந்த நிலையில் மனம் லயமாகி பரமானந்தத்தைப் பெறுகிறது. அந்த ஒருமுகப்பட்ட நிலையில் உலக ஈர்ப்புகள் எல்லாம் அடங்கி விடும். அது பரமனில் லயிக்கும் நிலை. இதனையே கைவல்யம் என்பர். இத்தகைய ராத்திரி என்பது சாதகர்கள் சாதிக்க வேண்டிய நிலை. வெளிமுகமாகப் பாயும் திருஷ்டியை தடுத்து, புத்தியை அந்தர்முகமாகத் திருப்பி அந்தரங்கத்தில் ஈஸ்வர ஜோதியின் மேல் குவியச் செய்வதே சிவராத்திரி. பகலில் பஹிர்முகம். இரவில் அந்தர்முகம். சாதாரண வாழ்க்கையில் கூட பகலெல்லாம் வெளியில் சஞ்சரிக்கும் உயிர்கள் இரவானவுடன் சொந்த வீட்டையடைந்து ஓய்வு எடுக்கின்றன. ஆழமாக ஆலோசித்தால் அனைத்துயிர்களின் சொந்த வீடும் ஈஸ்வரனின் நிலையமே. அது நம் ஹ்ருதயத்திலேயே உள்ளது.

இந்திரியங்களின் வழியே வெளி உலகியல் விஷயங்களோடு ஒட்டிக் கொள்ளும் மனதை நம்மிடமிருக்கும் சைதன்யத்தின் மூல பிந்துவான ஆத்ம ஜோதியில் லயம் செய்யும் அந்தர்முக பிரயாணமே சிவராத்திரி. அந்த தியானநிலை நித்திரையல்ல; மறதியுமல்ல; அது மனிதனின் விழிப்பு நிலை. நம்மை நாம் மறந்து திரியும் வெளிப்புற அலைச்சலை விட, அந்தர்முகமான இந்த தியான நிலையிலேயே நம் சைதன்யம் பூரண விழிப்புணர்வோடு இருக்கிறது. அஞ்ஞானம் என்ற பெரிய நித்திரையை விலக்கும் ‘கண் விழிப்பே’ சிவராத்திரி விரதம். இது உபவாச விரதமும் கூட. ஆகார நியமமே உபவாசம். நம் இந்திரியங்களின் மூலம் அனுபவிக்கும் போகங்களே ஆகாரங்கள். அவற்றை கட்டுப்படுத்தும் இந்திரிய நிக்ரஹம் உண்மையான உபவாசம். அப்படிப்பட்ட உபவாசத்தின் மூலமும் கண் விழிப்பின் மூலமும் சர்வ வியாபக அந்தர்யாமியான சிவ சைதன்யத்துடன் ஒன்றுபடும் நிலையை அடையப் பெறுவோம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையின் முன் வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி இரவை ‘மாத சிவராத்திரி ’ என்பர். இது மாதத்தின் துரீய சந்தியா. வருடத்தின் இறுதி மாதமான பங்குனியின் முன் வரும் மாசி மாதம் வருடத்தின் ‘சந்தியா’. (மாலைப்பொழுது) போன்றது. அந்த மாலை நேரத்தில் ‘சந்தியா’ ஸ்தானத்தில் மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி இரவு வருகிறது. எனவே அது ஆண்டிற்கு மாலை நேரம். இந்த நேரத்தை ‘மகா
சிவராத்திரி’ என்று அழைப்பதில் சிறப்பு உள்ளது. கர்ம ஈர்ப்புகளை எல்லாம் நிறுத்திவிட்டு ஜீவன் பரமாத்மாவின் சந்நதியில் அமைதி பெறுவதே லயம். அந்த லயநிலையில்தான் அகண்டானந்தம் கிடைக்கிறது. பஹிர்முக பயணத்தால் ஓய்ந்து போன ஜீவன், ‘அலசிதிஸொலசிதி இந்தட நீ சரனிடெ ஜொச்சிதினி’ என்று எந்த அந்தர்யாமியுடன், தன்மயத்துவ நிலை பெறுவானோ அந்த அந்தர்யாமியே ‘சிவன்’ - (அன்னமயா கீர்த்தனை).

திருகுணங்களுக்கு, மூன்று அவஸ்தைகளுக்கு, மூன்று உடல்களுக்கு (ஸ்தூல, சூட்சும், காரண சரீரங்கள்) அதீதமாக, அந்த மூன்றையும் இயக்கும் பரம நிலையமே சிவஜோதி. இதனை அந்தரங்கத்தில் அறிந்து கொள்ளும் தத்துவமே சிவராத்திரியின் உட்பொருள். ‘ராதி சுகம் ததாதீதி ராத்ரி’ சுகத்தையளிக்கும் காலம் ராத்திரி’. போகம் அனுபவிப்பவர்களைப் பற்றிய பேச்சு ஒரு புறமிருக்க, யோக ஆனந்த நிலை பெறுவதே உண்மையான ராத்திரி. ‘யானிசா சர்வ பூதானாம் தஸ்ய ஜாகர்தி சம்யமீ - பகவத்கீதை. அனைவருக்கும் எது இரவோ யோகிக்கு அது பகல். நம்முடைய பகல் யோகிக்கு இரவு. வெளிப்புறத்தில் திரிபவர்கள் ஆத்மா விஷயத்தில் உறக்கத்திலிருக்கிறார்கள். ஆனால் ஆத்மா விஷயத்தில் யோகிகள் விழிப்போடிருக்கிறார்கள். லௌகீக ஈர்ப்புகள் வெளி விஷயங்களில் விழித்திருக்கும். அத்தகைய வெளிப்புற விஷயங்களில் யோகிகள் உணர்வற்றிருப்பார்கள். ஞானானந்த ஸ்வரூபன் நித்யம் விழித்திருப்பவன் சிவன் அந்தர்முக விழித்தலில் தென்படும் அந்த சாஸ்வத சத்திய தத்துவத்தை அறிந்து கொள்ளும் சாதனையே ‘சிவராத்திரி’.

பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

Tags : Great Shivaratri ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி