×

நவகிரக தோஷங்களை நீக்கும் மதுரநாதீஸ்வரர்

யுகங்களைக் கடந்து விண்ணை முட்டி நிற்கும் மலையே இறைவனாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது வடமாத்தூர் திருத்தலம். இங்கு மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் மற்றும் சுயம்புவாகத் தோன்றிய மாணிக்க விநாயகர் அருள்பாலித்து வருகின்றனர். சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு, இந்த ஊரில் வாழ்ந்து வந்த ஒரு அடியார் தனது ஊரில் வழிபடுவதற்கு ஆலயம் இல்லாததை நினைத்து கவலை கொண்டார். அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்து வழிபட்டு வந்தார். அவரையே மூலவராக்கி, ஆலயம் எழுப்ப முடிவு செய்திருந்தார்.ஆனால் அன்று இரவு அவரது கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், ‘உன் ஊரிலேயே பல நூறு ஆண்டுகளாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன்.

என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்கும் இடம், நீ ஏர் உழும்போது வெளிப்படும்’ என்று கூறினார். கனவைக் கண்டதும் அடியார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். இறைவனின் சித்தம் அதுவென உணர்ந்தவர், விடிவதற்காக காத்திருந்தார். பொழுது புலர்ந்ததும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு, மாடுகளை பூட்டி தனது நிலத்தில் உழ ஆரம்பித்தார். நெடுநேரம் உழுதும் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் இறைவனை நினைத்தபடி மனம் தளராமல் உழுது கொண்டே வந்தார். அப்போது ஏர் கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி வெளியே எடுத்தார். அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சுறு வடிவிலும் காட்சி தந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அவற்றை தனது இல்லத்திற்குக் கொண்டு வந்தார்.

ஆனால் உருண்டையான கற்களில் எதை இறைவன் என நினைத்து வழிபடுவது என்பதில் அவருக்குக் குழப்பம். அந்தக் குழப்பத்துடனேயே உறங்கியவரின் கனவில் மீண்டும் தோன்றிய விநாயகர், ‘இரண்டு கற்களில் எதை வேண்டுமானாலும் வைத்து பூஜித்து வா. அதில் நான் என் உருவத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார். மறுநாள் தன் வீட்டின் அருகே உள்ள இடத்தில் கிழக்கு நோக்கியவாறு, ஒரு உருண்டைக் கல்லையும், அதன் எதிரே மூஞ்சுறு வடிவில் இருந்த சிறிய கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லை தனியாக வைத்தார். காலப்போக்கில் அவர் நிறுவிய கல்லில் விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது.

அதுவரை அவர் மட்டுமே வழிபாடு செய்து வந்த விநாயகருக்கு மாணிக்க விநாயகர் என பெயர் சூட்டி ஊர்மக்கள் அனைவரும் வழிபட தொடங்கினார்கள். இதையடுத்து இங்கு மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றன. கருவறை முன் மண்டபத்தை அடுத்து, இடதுபுறம் எளிய வடிவில் அழகுற காட்சி தருகிறார் மாணிக்க விநாயகர். வலதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் எளிய வடிவில் அருளாசி வழங்குகின்றார். இவர்களுக்கு நடுநாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவரில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அன்னை மரகதாம்பிகை தனி சன்னதியில் நின்ற கோலத்தில் கருணை வடிவாக அருளாசி வழங்கி வருகிறார்.  ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னதியும், அதன் அருகே மேற்கு பார்த்தபடி கால பைரவர் சன்னதியும் உள்ளன. தல மரமாக வில்வமும், தலத் தீர்த்தமாக ஆலயத்திற்குள் உள்ள கிணற்றில் கங்கா தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள மதுரநாதீஸ்வரர், மாணிக்க விநாயகர் ஆகியோரை மூன்று சதுர்த்தி தினங்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற நவகிரக தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணத்தடை நீங்கவும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படவும், தாலி பாக்கியம் நிலைத்திடவும் சிறந்த பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை-காஞ்சி பேருந்து வழித்தடத்தில், பெரியகுளம் நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 2 கிலோமீட்டர் பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம்.

Tags : Mathuranadeeswara ,doshas ,
× RELATED இந்த வார விசேஷங்கள்