×

சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?

ராமானுஜரின் சீடர் -  எம்பார்

அழகான காலை நேரம்! சூரியன் உதிக்கையிலே மலர்ந்து விட்ட தாமரையில் வண்டுகள் முறல, புள்ளினங்கள் செவிக்கினிய கானம் செய்ய,  மறையவரின் மறையொலியும், மாறன் (நம்மாழ்வார்) தமிழ் ஒலியும் சேர்ந்து ஒலிக்க, அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்க நகரம். அங்கே ராமானுஜரின் சீடர்  -  எம்பார், அற்புதமாக திருவாய்மொழிக்கு, உரையை உபன்யாசம் செய்தபடி இருந்தார். அவர் தந்த திவ்ய விளக்கத்தைக் கேட்க பாம்பணையை விட்டு  அந்த ரங்கனே ஓடிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. அவரது முன்னே பல சீடர்கள் - அவர் சொல்லும் வேதாந்த கருத்துக்களை குறிப்பெடுத்துக்  கொண்டிருந்தார்கள். பாமரர்கள் பலரோ, அவர் கூறும் ஆழ்ந்த பொருளில் மெய்மறந்தபடி, சொக்கிப்போய் நின்றிருந்தார்கள். அப்போது, அவர் முதல்  திருவாய்மொழியின் ஆறாம் பாசுரத்திற்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார்.

‘‘நின்றனர், இருந்தனர், கிடந்தனர்,  திரிந்தனர்,
நின்றிலர், இருந்திலர், கிடந்திலர் ,
திரிந்திலர்
என்றும்  ஓர் இயல்வினர் என நினைவு அறியவர்
என்றும் ஓர் இயல்வோடு நின்ற எம் திடரே’’
- என்று பாசுரத்தை அழகாக பாடிவிட்டு பொருள் தர ஆரம்பித்தார் எம்பார்.
 
‘‘நன்கு பாடலை உற்று கவனியுங்கள். இதில் நின்றனர், இருந்தனர், கிடந்தனர், என அனைத்து வார்த்தைகளும் பன்மையில் உள்ளது. இந்த  வார்த்தைகள் அந்த பகவானை, நேரிடையாக குறிப்பதாக இருந்தால், ஆழ்வார் ஒருமையையே கையாண்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர்  பன்மையைக் கையாள்கிறார். எனில் அவர் இந்த வார்த்தைகளால் (நேரிடையாக) குறிப்பது இறைவனை இல்லை.’’ என்று சொல்லி, மாணவர்கள்  சிந்திக்க அவகாசம் தந்தார் எம்பார்.

‘‘எனில் யாரை இந்த வார்த்தைகளால் ஆழ்வார் குறிக்கிறார் சுவாமி?’’ கூட்டத்தில் ஒரு மாணவன் கேட்டான். அதைக் கேட்ட எம்பார், புன்னகை  பூத்தபடி விளக்கம் தர ஆரம்பித்தார்.‘‘இந்த வார்த்தைகள் இந்த உலகில் வாழும் பல்வேறு உயிர்களை குறிக்கிறது. எப்படி ‘‘ஆகிருதியானவன்’’ என்ற  சொல், ஆகிருதி என்ற குணத்தைக் குறிக்காமல், ஆகிருதி என்ற குணத்தை உடையவனை குறிக்கிறதோ அப்படி!’’‘‘சுவாமி! ஆனால், பாட்டின் பின்  வரிகளில் இருக்கும் பொருளோடு நீங்கள் சொல்லும் பொருள் ஒத்துப் போக வில்லையே சுவாமி!’’  தலைமை மாணவன் பணிவோடு எம்பாரை  கேட்டான்.

‘‘அவசரப்பட வேண்டாம்!  இந்த சொற்கள், நிற்றல் இருத்தல் கிடத்தல் போன்ற தொழில்களை செய்யும் பொருள்களை குறிப்பதோடு  நின்றுவிடவில்லை. மாறாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த ஸ்ரீமன் நாராயணனை குறிக்கிறது. எல்லா பொருளுக்கும்  அந்தர்யாமி (உள்ளுறைபவன்) அவன் தானே? அனைத்து பொருளையும் கடந்து அதனுள்ளே இருப்பதால் தானே அவனை ‘‘கடவுள்’’ என்று  சொல்கிறோம்?. ஆக, நிற்றல் முதலிய செயல்களை செய்யும் உயிர்களை அதன் உள்ளிருந்து இயக்குவது பகவான். இப்படி, உள்ளிருந்து இயக்கும் பரம்  பொருளையே, இந்தச் சொற்கள் குறிக்கிறது.

மொத்தத்தில் ‘‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்’’ என்ற பதங்களால் ஆழ்வார், உள்ளே கடந்து  நிற்கும் அந்த இறைவனையே சொல்கிறார். அது மட்டுமில்லை, இப்படி நாம் பொருள் கொள்வதற்கு ஆதாரம் எது?, என்று கேட்டால், நம்மாழ்வாரின்  சொற்களே இதற்கு ஆதாரம் என்று சொல்லாம். அதாவது, இதே முதல் திருவாய்மொழியின் நாலாம் பாசுரம், என்ன சொல்கிறது?

‘‘நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்.... ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே’’  என்று தானே சொல்கிறது. அதாவது இந்த  உலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தின் உள்ளே இருந்து அதனை இயக்குவது அந்த நாரணனே என்று பொருள். நாலாம் பாட்டில் அவர் சொன்ன  (இந்த)  பொருளை இங்கு ஆறாம் பாட்டில், இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மறைபொருள் விளங்கும். புரிகிறதா?‘‘ பரிவோடு அற்புத  விளக்கம் தந்துவிட்டு, கருணை பொங்க தனது சீடர்களை நோக்கினார், எம்பார். சீடர் கூட்டத்தில் இருந்த ஒருவன் இவர் சொன்ன விளக்கத்தை கேட்டு  வேகமாக தலையை சொரிந்தான். ஸ்வாமிகள் தரும் விளக்கம் அவனுக்கு விளங்கவில்லை என்பதை அது நன்கு உணர்த்தியது. அதை கவனிக்கத்  தவறாத எம்பார், அந்த சீடனை நோக்கினார்.

‘‘அப்பனே! உனது சந்தேகத்தை தைரியமாகக் கேள் விளக்கம் தருவது குருவான என் கடமை’’ பொங்கும் வாஞ்சையோடு மொழிந்தார் எம்பார்.  சுவாமிகளின் இந்த வார்த்தைகள் அவனுக்கு தைரியத்தைத் தரவே மெல்ல பேச ஆரம்பித்தான் அவன்.‘‘சுவாமி எல்லா வேலைகளையும் செய்ய  பெருமானே நம்மை இயக்குகிறார் என்பது வரைக்கும் சரி. ஆனால், இரண்டாம் வரியில் இருக்கும், நின்றிலர் கிடந்திலர்‘‘ போன்ற வார்த்தைகள்  வருகிறது. அவை ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் நிலையை குறிக்கிறது. இப்படி ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கவும்  கூடவா பெருமாள் நம்மை இயக்குகிறார்?’’ தயங்கி தயங்கி கேட்டான் மாணவன். அவனது கேள்வியின் ஆழத்தை நன்கு உணர்ந்தார்

எம்பார். எந்த அளவு அவன் உரையை உன்னிப்பாக கேட்டிருந்தால் இப்படி ஒரு சந்தேகம் கேட்டிருப்பான்? என்று உள்ளம் பூரித்தார். ஆனால், சுற்றி  நின்றிருந்தவர்களோ, சிக்கலான இந்தக் கேள்விக்கு எம்பார் என்ன பதில் தரப்போகிறார்? என்று விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள்  அனைவரையும் எம்பாரின் கனைப்பொலி நடப்புக்கு கொண்டு வந்தது. தனது குரலை சரி செய்து கொண்டு அவனுக்கு விளக்கம் தர ஆரம்பித்தார்  எம்பார். ‘‘இப்போது நான் சொல்லப் போகும் கதை எல்லாரும் அறிந்த ஒன்று தான்.

பகவான் ஸ்ரீ ராமன் பிறந்த ரகு வம்சத்தில் பிறந்தவன் திரிசங்கு என்ற ராஜன். ஆனால், மகாபாவி அவன்.  அன்னவன் செய்யாத பாவங்களே இல்லை  என்று சொல்லலாம். ஆனால், அவனுக்கு சொர்க்கம் செல்லவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதுவும் சாதாரணமாக இல்லை இந்த பூத  உடலோடு (மனித உடலோடு) சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை. சென்று தனது குலகுரு வசிஷ்டரிடம் கேட்டான். ‘‘இப்படி ஒரு பாவிக்கு  சொர்க்கம் கேட்கிறதா? வாய்ப்பே இல்லை’’ என்று கை விரித்து விட்டார் வசிஷ்டர்.

உடன் அவன் விஸ்வாமித்திரரிடம் சென்றான். அவர் மறுப்பே சொல்லாமல் தனது தவ வலிமை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அவனை இந்த பூத  உடலோடு சொர்க்கம் அனுப்பினார். அவனும் சொர்க்கத்தை நோக்கி, பறக்க ஆரம்பித்தான். விஷயம் அறிந்த சொர்க்கத்தின் தலைவன் இந்திரன்,  துணுக்குற்றான். விஸ்வாமித்ரரின் தவ வலிமையால், பூமியை விட்டு, சொர்க்கம் வரும் திரிசங்குவை, இந்திரன் கீழே தள்ளி விட்டான். திரிசங்கு  வேகமாக கீழே விழத் தொடங்கினான். இதை கவனித்த விஸ்வாமித்திரர் ‘‘ நில்’’ என்று ஒரு வார்த்தை சொல்ல அவன் அந்தரத்தில் அப்படியே  நின்றான். பிறகு அவனுக்காக, தன் தவ வலிமையைக் கொண்டு, வேறு ஒரு புதிய சொர்க்கத்தையே முனிவர் உருவாக்கினார் என்பது வரலாறு.

இதில் மேலிருந்து கீழே விழும் ஒருவன் அந்தரத்தில் சும்மா நிற்க, விஸ்வாமித்ரரைப் போல ஒரு சக்திமிக்கவர் (தவ வலிமை படைத்தவர்) சொல்ல  வேண்டி இருக்கிறது. எனில், சாதாரண மனிதர்களான நம்மைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? ஆகவே நாம் சும்மா இருக்கவும் அவன் அருள்  வேண்டும் புரிகிறதா? புன்னகைத்த படியே சந்தேகம் கேட்ட மாணவனை நோக்கினார் எம்பார். அவனது சந்தேகம் தீர்ந்ததால் தலையை வேகமாக  மேலும் கீழும் ஆட்டினான். கூடி இருந்தவர்கள் எல்லாம்,  சிக்கலான ஒரு கேள்விக்கு, அனாயசமாக பதில் தந்து விட்ட எம்பாரின் சாமர்த்தியத்தை  வியந்து வாயடைத்துப் போனார்கள்.

-ஜி.மகேஷ்

Tags : Lord ,
× RELATED ஏகலிங்கம்