×

கடனில் இருந்து விடுபட எளிமையான வழிபாடு

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நம் முன்னோர்களுக்கு எல்லாம் கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கமானது அதிகம் இல்லை. இந்த காலகட்டத்தில் மட்டும் ஏன் நமக்கு கடன் பிரச்சனை அதிக தொல்லை தருகிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். நமக்கு வரும் வருமானத்திற்கு தகுந்த செலவினை செய்யும்போது எந்தப் பிரச்சினையும் வராது. வரும் வருமானத்தை சேமித்து வைத்து அந்த பணத்தை செலவழிக்கும் போதும் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் இந்த நவீன யுகத்தில் ‘லோன்’ என்ற ஒரு வார்த்தை, நம் மனதில் அதிகப்படியான ஆசையை தூண்டி, நம்மை கடனுக்குள் தள்ளிவிடுகிறது.

இந்தக் கடனை வாங்குவதற்கு முன்பு நம்மால் இதைத் திருப்பிக் கட்ட முடியுமா என்று ஒரு முறை யோசித்துப் பார்த்தால் கூட நாம் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நமக்கு தேவையில்லாத விஷயத்துக்கு எல்லாம் கடனை வாங்கிவிட்டு நமக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை கடனை காட்டுவதற்காகவே செலவழித்து விடுகின்றோம். அத்தியாவசிய தேவைகளுக்கு புதிய கடனை வாங்கும் நிலைமை உண்டாகிறது. இப்படியாக நம் வாழ்க்கை கடன் கட்டியே முடிந்துவிடும். அத்தியாவசிய தேவைக்காக வாங்கினாலும், ஆடம்பர செலவிற்காக வாங்கினாலும் கடன் என்பது கடன்தான். நாம் வாங்கிய கடனுக்கு இரண்டு மடங்காக வட்டியும் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சில்லறையாக கடன் வாங்கினாலும், அது நம்மை சீரழிக்கும் என்பது நம் முன்னோர்களின் கூற்று.

கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காண்போமா. நீங்கள் கடனை வாங்க வேண்டுமென்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடனானது வெகுவிரைவில் அடைக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேறை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒரு தனி சந்நிதியில் ‘ருணவிமோசனராய்’ சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். ருணவிமோசனர் என்றால் கடனில் இருந்து நம்மை விடுவிப்பவர் என்பது அர்த்தம்.

மார்க்கண்டேயர் தனது பிறவிக் கடனை அடைப்பதற்காக இந்த ருணவிமோசனரை நினைத்து இந்த தளத்தில் தவம் இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயது வரை மட்டுமே வாழ வேண்டிய மார்க்கண்டேயர், என்றும் 16 ஆக, நித்ய சிரஞ்சீவியாக வாழ்ந்ததற்கு இந்த ஈசன் அருள் பாவித்துள்ளார். மார்க்கண்டேயரின் பிறவிக் கடனை அடைத்த இந்த ஈசன், நாம் பெற்ற கடனையும் சுலபமாக அடைந்து விடுவார் என்கிறது வரலாறு. திங்கட்கிழமைகளில் ருணவிமோசனருக்கு அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நாம் முற்பிறவியில் செய்த பிறவி கடனும், இந்தப் பிறவியில் வாங்கிய கடனும் தீரும் என்பது நம்பிக்கை. வசதி இல்லாதவர்கள்தான் கடன் வாங்குகிறார்கள் என்றால், வசதி படைத்தவர்கள் அதைவிட அதிக கடன் வாங்குபவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ருணவிமோசனரை வழிபட்டு அனைவரும் கடன் தொல்லையிலிருந்து நீங்கி, கடன் இல்லாத வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் போதும். அதில் நமக்கும் கிடைக்கும் நிம்மதியானது வாழ்நாள் முழுவதும் நம்மை கடன் வாங்காமல் தடுத்துவிடும். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கும் ஆசை உள்ளதா? அநாவசியமான ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். இதனால் நிம்மதியான உறக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கையும், நம்மால் வாழ முடியும்.

Tags :
× RELATED கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம்