×

ஓர் எளிமையான அற்புதம்..!

அவர் ஒரு கிராமத்து அரபி. கல்வி அறிவு  இல்லாதவர்.  அவர் ஒருமுறை இறைத்தூதர் நபிகள் நாயகத்திடம் வந்து, “நீங்கள் இறைத்தூதர்தான் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்?” என்று கேட்டார். அந்த எளிய கிராமத்து மனிதரிடம் இறைவனின் அற்புதமான படைப்பாற்றல், பேரண்டத்தின் ரகசியம், அந்தப் பேரண்டத்தில் மனிதனின் அந்தஸ்து, மனிதர்களுக்கு வழிகாட்ட இறைத்தூதர்கள் வரவேண்டிய அவசியம், இறைத்தூதர்களின் வரிசையில் தம்மை இறுதித்தூதராக இறைவன் அனுப்பி வைத்ததன் நோக்கம் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்லிக்கொண்டிருந்தால் அவருக்கு ஒன்றும் புரிந்திருக்காது.

மத போதகர்கள் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம். கையில் ஒரு மைக்கும் எதிரில் நாலு தலைகளும் இருந்தால் போதும் - பிரசங்கத்தைத் தொடங்கிவிடுவார்கள். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் யார், படித்தவர்களா, பாமர மக்களா, நாம் வரிசையாக எடுத்துவிடும் வேத வசனங்கள்  அவர்களுக்குப் புரியுமா என்பது குறித்தெல்லாம்  ஆலோசிக்க மாட்டார்கள். கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு பிரசங்கத்தைத் தொடங்கினால் அடுத்த ஒரு மணி நேரம் கழித்துதான் கண்ணைத் திறப்பார்கள். எதிரில் பார்த்தால் நாலு தலைகளில் மூன்று காணாமல் போயிருக்கும்.

இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தம்மிடம் யார் வந்து அறிவுரை கேட்டாலும் கேட்பவர் யார், அவருடைய பண்பு நலன்கள் என்ன, எந்தக் கோத்திரம்- கிளையைச் சேர்ந்தவர், நகர்ப்புறவாசியா, கிராமத்து வாசியா என்பதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு ஏற்றாற்போல் அறிவுரைகள் வழங்குவார். ஒருமுறை ஒரு மனிதர்  நபிகளாரிடம் வந்து அறிவுரை வழங்கும்படி கேட்டபோது, “கோபம் கொள்ளாதே” என்றார். அவர் அடிக்கடி கோபப்படும் ஆளாக இருந்ததுதான் காரணம்.வேறொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் வந்து “இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, “பசித்தவருக்கு உணவு அளிப்பது” என்றார். அன்று முதல் கேள்வி கேட்டவர் ஏழைகளுக்கு உணவு வழங்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது தம் எதிரில் இருக்கும் கிராமத்து அரபியைப் பார்த்தார் நபிகளார். ஓர் எளிய அற்புதச் செயலை நிகழ்த்திக் காட்டினாலே அவருக்குப் போதுமானது என்று நபிகளார் நினைத்தார். “இதோ இந்தப் பேரீத்தம்மரத்திலுள்ள ஒரு பேரீத்தங் கொத்தை நான் அழைக்கிறேன். அது இறங்கி வந்துவிட்டால் நான் இறைத்தூதர்தான் என்று ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டார் நபிகளார். அந்தக் கிராமத்து மனிதரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். நபிகளார் அந்தப் பேரீத்தங்கொத்தை அழைத்தார். அது இறங்கிவந்து நபிகளாரின் அருகில் விழுந்தது. பிறகு நபியவர்கள் திரும்பிச் செல் என்று கூறியதும் அவ்விதமே அது திரும்பிச் சென்றது.

அந்தக் கிராமத்து மனிதர், நபிகளாரின் கையைப் பற்றிக்கொண்டு “நீங்கள் உண்மையில் இறைவனின் தூதர்தான்” என்று ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவினார். (ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதீ, நபிமொழி எண்-3551) நபிமொழித் தொகுப்புகளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  நிகழ்த்திக் காட்டிய பல அற்புதங்கள் இடம்பெற்றுள்ளன.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி