×

தீர்ப்பிடுபவர் ஆண்டவர் ஒருவரே

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பல்வேறு நபர்களோடு உரையாடுகின்றோம். ஆனால் ஒரு பிரச்னை என்று கிளம்பும்போது சுலபமாக நாம் அடுத்தவரை குற்றவாளியாக கைக்காட்டி அவரைத் தீர்ப்புக்கு உள்ளாக்குகின்றோம். பழி ஒரு பக்கம். பாவம் ஒரு பக்கமா? என்ற கூற்றிக்கிணங்க சில நேரங்களில் ஒருவர் பாவம் செய்ய அதிலிருந்த அவர் தப்பித்துக் கொள்ள இன்னொருவர் மேல் பழிசுமத்தி தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பிக்கின்றான். ஆண்டவர் கண்முன் அனைத்துமே வெளிச்சம் என்று அறியாத நிலைதான் இது. எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் கிறிஸ்தவ வாழ்க்கை ? ‘‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போது தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கின்றீர்களோ, அதே அளைவையாலே உங்களுக்கும் அளிக்கப்படும்’’. (மத்தேயு 7 : 1,2) நாம் நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் நம் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நாம் கூர்ந்து கவனிப்பதோ அல்லது அவரிடம் உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா ?  என்றோ எப்படி நம்மால் கேட்க முடியும் ? இது சரியா ?

‘‘இதோ ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே ! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெரியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாக கண் தெரியும் ’’.  (மத்தேயு 7 : 4, 5). ஒருவர் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதீர்கள். ஆண்டவர் வெறுப்பவை ஆறு. அவை ‘‘இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும்  கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், பொய்யுரைக்கும் போலிச்சான்று ’’.

(நீதி மொழிகள் 6 : 16 , 19) பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார். உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். எனவே உங்களை நம்பி உங்கள் மேல் அன்பாய் இருக்கும் உங்கள் உறவினர்கள் மேலோ அல்லது நண்பர்கள் மேலோ இப்படி தீர்ப்பிடுவது சரியா? வீண் பழிக்கு உள்ளாக்குவது சரியா? நம் எண்ணங்களை மனிதர் எண்ணலாம். ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர் ஒருவரே.  ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாய் இருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.

‘‘பிறர் குற்றங்களைக் கிண்டிக்கிளறித் தூற்றுபவர் கயவர், எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு’’. (நீதி மொழிகள் 16 : 27). வெள்ளியை உலைக்கலமும், பொண்ணை புடக்குகையும் சோதித்துப் பார்க்கும். ஆனால் உள்ளத்தை சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர் ஒருவரே. வாழ்வதும் நாவாலே, தாழ்வதும் நாவாலே. எனவே அடுத்தவரிடம் அன்பாய் இருப்போம். பிறர் குற்றவாளி என தீர்ப்பிடாமல், பிறர் குற்றம் செய்கிறார் என நமக்கு தெரிந்தால் அவருக்கு அதை அன்போடு எடுத்துரைப்போம். குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர் என்பதனை அறிந்து ஆண்டவரது வழியில் செல்வோம். நம் நாவினால் நல்ல விதையையே விதைத்து அதையே உண்போம்.  ஆமென்.

தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

Tags : Lord ,
× RELATED ஏகலிங்கம்