ஆண்டியாய், அரசனாய் நின்றருளும் முருகப்பெருமான்

பழனி முருகப்பெருமானுக்கு முடி முதல் அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள். தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும். தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.

ஒன்று முருகர் சந்நதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல், இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு. தண்டாயுதபாணி சிலையை ராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில் (கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக, பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம். வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்னைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன். கடன், கவலையால் மனக்குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்யப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் முருகனை தரிசிக்கலாம். நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாத விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.

தொகுப்பு: ஜோ. ஜெயக்குமார்

Related Stories:

>