×

குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் சாரல் மழை; பெருஞ்சாணி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்

நாகர்கோவில்: குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் சாரல் மழை நீடிக்கிறது. பெருஞ்சாணி அணைக்கான நீர் வரத்து 1800 கன அடியாக உயர்ந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மாவட்டங்களில் அதி தீவிர கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா, குமரி மாவட்டத்தில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து வந்தார். மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை, பேரிடர் மீட்பு துறை, தீயணைப்பு துறை, காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாகவே பலத்த சூறை காற்றுடன்  மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதி தீவிர கனமழையாக இல்லாமல் சாரல் மழையும், ஒரு சில நேரங்களில் பலத்த மழையும் இருந்தது. மலையோர பகுதிகளில் பெய்த கன மழையால் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்ததுடன், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலையோர பகுதிகளில் பாலங்கள் துண்டிக்கப்பட்டன.  நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக அணைகளின் நீர் மட்டமும் மளமளவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று 4 வது நாளாக , மாவட்டம் முழுவதுமே சாரல் மழை இருந்தது.பேச்சிப்பாறை அணை பகுதியில் ஓரளவு மழை குறைந்ததால், அணைக்கான நீர்வரத்தும் குறைந்தது. அதன்படி பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலையில் 2,129 கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர் மட்டம் 41.45 அடியை எட்டியது. அணையில் இருந்த 256 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி மலை பகுதியில் நேற்று இரவு முதல் திடீரென கனமழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 1,591 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,869 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர் மட்டம் 67.85 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றார் 1 அணை நீர் மட்டம் 12.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 102 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார் 2 அணை நீர் மட்டம், 13.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணை நீர் மட்டம் 35.52 அடியாகவும், பொய்கை 17 அடியாகவும், முக்கடல் அணை நீர் மட்டம் 12.10 அடியாகவும் உள்ளன. 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாற அணை 41.45 அடியை எட்டி உள்ளது. நீர்மட்டம் 45 அடியை கடக்கும் தருவாயில் அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மழை குறைந்துள்ளதால், ஓரளவு நீர் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதுமே பலத்த சூறை காற்று வீசி வருகிறது. இதனால் வன பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. புத்தேரி அருகே பழமையான புளிய மரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. அந்த மரம் முறிந்து விழலாம் என்ற நிலையில் இருந்ததால், இன்று காலை தீயணைப்பு துறையினர் அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். குமரி மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது….

The post குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் சாரல் மழை; பெருஞ்சாணி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Perunjani Dam ,Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...