×

எந்த 10ஐ வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும்: சில வழிபாடு முறைகள்

ஒரு பக்கம் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் ஈட்டிய செல்வத்தை காக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நம்மிடம் இருக்கும். செல்வம் ஈட்டுவதை விட, ஈட்டிய செல்வத்தை பாதுகாப்பதுதான் கடினமான காரியமாக இருக்கும். செல்வம் நம்மிடம் நிலைக்க வேண்டுமென்றால் மகாலக்ஷ்மியின் அருள் நமக்கு வேண்டும். இல்லையென்றால் ஈட்டிய செல்வம் எல்லாம் தேவையற்ற வழிகளில் கரைந்துவிடும். நம்மிடம் நல்ல குணங்களும், நாம் இறைவனுக்கு தரும் மரியாதையிலும் தான் சுகபோக வாழ்க்கை வாழ முடியும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை.

இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒவ்வொருவரும் நல்ல வழிகளை கடைப்பிடிப்பதில் சூட்சமம் இருக்கிறது. மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படும் 10 இடங்கள் எவை? என்று இப்பதிவில் நாம் காணலாம். முதலாவதாக லட்சுமி தேவி வாசம் செய்வது விளக்கின் தீப ஜோதியில் தான். தீபத்தின் சுடர் விட்டு எரியும் சுடர் ஆனது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. விளக்கு இல்லாமல் பூஜையும் இல்லை. புனஸ்காரமும் இல்லை. ஜோதி இல்லாமல் இறையும் இல்லை. இறைவனும் இல்லை. ஜோதி வடிவமே இறை ரூபம். எனவே வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.

நமது உள்ளங்கையில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையை பார்த்துவிட்டு தான் விழிக்க வேண்டும் என்பது காலம் காலமாக கூறப்படும் ஒரு தகவலாகும். அதன் உள்நோக்கம் மகாலட்சுமி உள்ளங்கையில் வாசம் செய்வது தான். எனவே இனிமேல் காலையில் எழுந்ததும் உங்களின் முதல் பார்வை உங்களது உள்ளங்கையில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோமாதாவின் பின்புறம் லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. அதனால் தான் கோமாதாவை வணங்கும் போது பின்புறம் தொட்டு வணங்குகிறார்கள்.

இனி பசுவை காணும் பொழுது பின்புறம் தொட்டு வணங்கி விடுங்கள். லட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். மாவிலைகளை தோரணம் ஆகவும், இன்னபிற ஆன்மீக செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அதற்கு காரணம் மாவிலையில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் ஒன்று உள்ளது. எனவே சுபநிகழ்ச்சிகளில், நல்ல நாட்களில் தவறாமல் மாவிலையை தோரணம் கட்டி தொங்க விடுங்கள். லட்சுமிதேவி உங்களது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள். குதிரை மற்றும் யானையின் நெற்றிப் பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

மன்னர் காலத்தில் மன்னர்களின் படை களத்தில் ஏதேனும் ஒரு குதிரையோ, யானையோ மரணிக்க நேர்ந்தால் அது மன்னருக்கு வரும் ஆபத்தை உணர்த்துவதாக கொண்டனர். தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு உயிரினங்களையும் காப்பது நமது கடமையாகும். தனம் அல்லது நாணயம் என்று கூறப்படும் செல்வத்திற்கு குறி பொருளாக விளங்குவது நாணயங்கள். எனவே பணத்தை அலட்சியமாக எண்ணாமல் அதற்கு உரிய மரியாதை தருவது நல்லது. பணத்தை எண்ணும் பொழுது எச்சில் தொட்டு எண்ணுவது தவறான ஒரு செயல் ஆகும். அது லக்ஷ்மயை அவமதிப்பது போன்றதாகும்.

அதுபோல் வீட்டில் ஆங்காங்கே நாணயங்களை சேகரித்து வைப்பது வளம் பெருக வழி வகுக்கும். ஒரு சிலர் ஒரு ரூபாய் நாணயம் கூட விட்டு வைக்காமல் துடைத்து வைத்து விடுவார். அதுபோல் செய்யக்கூடாது. உங்களுக்கே தெரியாமல் ஆங்காங்கே சில்லறைகளையும், நோட்டுகளையும் சேகரித்துவைப்பது நல்லது. நெல்லி மற்றும் வில்வ மரத்தாலான லட்சுமிதேவி மிகவும் சிறப்புடன் பார்க்கப்படுகிறது. நெல்லி மரத்திலும், வில்வ மரத்திலும் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள். இந்த மரங்களில் இருக்கும் எண்ணற்ற குணங்கள் சொல்லில் அடங்காதவை. தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு மரங்களையும் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது.

தினம் ஒரு நெல்லிக்கனி உண்டால் சிரஞ்சீவியாக வாழலாம். 27 முறை இம்மரங்களை வலம் வந்து லக்ஷ்மி துதியை உச்சரித்தால் செல்வவளம் பெருகும். தனம் அடுத்து தானியம். தானியங்களில் மகாலட்சுமி முழுவதுமாக வாசம் செய்கிறாள். எந்த சுப நிகழ்ச்சிகளிலும், முக்கிய இடம் பெறுவது தானியங்கள் தான். கோபுர கலசத்தில் தானியங்கள் சேகரிப்பது, வீடு கட்டும் பொழுது தானியங்களைப் அடித்தளம் இடுவது போன்றவற்றை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி செய்யப்படும் காரியங்களே. எனவே நவதானியங்களையும் சேகரித்து வையுங்கள். தானியங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாற்கடலில் உருவான மஹாலக்ஷ்மி கடலில் இருக்கும் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே உப்பிற்கும் லக்ஷ்மி தேவியின் சக்தி உண்டு. உப்பை வைத்து பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. எப்போதும் வீட்டில் கல் உப்பை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசி, உப்பு மற்றும் தானியங்கள் இவற்றை முழுவதுமாக எப்போதும் துடைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருள் உங்களுக்கு கிட்டும். சுமங்கலிப் பெண்களின் நெற்றியின் உச்சி பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. நெற்றியில் வைக்கப்படும் குங்குமம் ஆனது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுமங்கலி பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் இடுவதால் சகல வளங்களும் வீட்டில் நிலைத்து நிற்கும். குங்குமம் இடாமல் யாருக்கும் எந்த தானமும் அளிக்கக்கூடாது. அது தரித்திரத்தை உண்டாக்கும். ஒருவருக்கு நீங்கள் தானம் வழங்க வேண்டுமென்றால் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறீர்களா என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

Tags : home ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...